தமிழினத்தின் வரலாற்றில் மே-18ம் நாள் என்பது ஒரு வரலாற்றுப் பெருந்துயராய் நிலைத்துவிட்டது. 1948லிருந்து இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை 2009 மே-18 அன்று முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இன அழிப்பாக நிகழ்ந்தேறியது; இறுதிக்கட்ட போராக அறியப்படும் இப்பேரழிவில் 1,46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
எனவே மே-18ம் நாள் உலகம் முழுதும் வாழும் தமிழர்களால் தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக நடந்த தமிழின அழிப்பு பேரவலத்தையும், தமிழினப் படுகொலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவுகூறுவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.
மனித பேரவலங்கள் பலவும் இன்றும் நினைவுகூறப்படுவதற்கு காரணம் அந்நாளினது துயரத்தை நினைவுகூற்வதற்காக மட்டுமேயல்ல; அந்நாளிலே நிகழ்ந்த மனிதப் பேரவலத்திற்கான காரணத்தையும், அதற்கான நீதியையும் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரும் அரசியல் முறையீட்டிற்கானதாகவும் அந்நாள் உள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14-ம் ஆண்டை நினைவுகூறும் இந்நாளின் மூன்று தினத்திற்கு முன்பு, பாலஸ்தீனிய நக்பா பேரவல நாளினை ஐநா அங்கீகரித்து அனுசரித்திருக்கிறது.
1948-ம் ஆண்டு ஜியோனிஸ்டு இனவாத இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனிய தாயக நிலத்திலிருந்து 7,50,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்; பாலஸ்தீனியர்களது கிராமங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டது. இத்தகைய வரலாற்றுத் துயரத்தை ஆண்டுதோறும் மே-15ம் நாள் நினைவுகூர்ந்து வந்த பாலஸ்தீனியர்கள், அதனை தங்களது தாயக உரிமைக்கான நிகழ்வாக மாற்றினர். இதைதான் தற்போது ஐநா அங்கீகரித்து, கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது.
1915-16 ல் துருக்கி ஓட்டமான் பேரரசால் ஆர்மீனியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர்; ஆர்மீனிய இனப்படுகொலையின் போது 15 லட்சத்துக்கும் அதிகமான ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆர்மீனிய தாயகத்தை இழந்து உலகம் முழுதும் பரவி வாழும் ஆர்மீனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் நாளை ஆர்மீனிய இனப்படுகொலை நாளாக அனுசரிக்கின்றனர். ஆர்மீனியர்களுக்கு நடந்தது இன அழிப்பு தான் என்பதை பல நாடுகள் அங்கீகரிக்காமல் இருந்து வந்தன. ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்த ஆர்மீனிய இனப்படுகொலை நாள் அனுசரிப்பு ஆர்மீனிய இனப்படுகொலை தொடர்பான உலக நாடுகளின் போக்கில் மாற்றத்தைக் கோரி வந்தது. உலக நாடுகள் பலவும் ஆர்மீனிய இனப்படுகொலையை அங்கீகரிக்கத் தொடங்கின; 2021ம் ஆண்டு அமெரிக்கவானது ஆர்மீனிய இனப்படுகொலையை அங்கீகரித்தது.
நூறு ஆண்டுகள் கடந்தும் தங்களது இன அழிப்பை நினைவுகூர்ந்து வரும் ஆர்மீனியர்களின் ஆர்மீனிய இனப்படுகொலை நாள் அனுசரிப்பு என்பதும் கூட, ஒருவகையில் உலக நாடுகள் பல ஆர்மீனிய இனப்படுகொலையை அங்கீரித்ததற்கான அரசியல் செயற்பாடாகக் கொள்ளலாம். இழைக்கப்பட்ட அநீதியை அங்கீகரிக்கக் கோருவதன் வழி, அநீதிக்கான நீதியை முன்னிறுத்துகிறார்கள்.
தமிழர்களின் தமிழனப்படுகொலை நாள் அனுசரிப்பும் கூட பேரவலத்தின் துயரத்தை நினைவுகூரும் நாளென்பதைக் கடந்து, தமிழினப் படுகொலையை உலகம் அங்கீகரிக்கச் செய்யும் செயற்பாடாக நிகழ்ந்தேற வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்ற கனடா நாட்டின் பாராளுமன்றமானது கடந்த ஆண்டு தமிழினப்படுகொலையை அங்கீகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக கனடா அனுசரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழினப் படுகொலையின் வரலாறு, காரணம், இழப்புகள் பற்றியும் இனப்படுகொலை பேரழிவுகள் பற்றியுமான விழிப்புணர்வை கனடா நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கும் ‘சட்டம்-104: தமிழினப் படுகொலை கற்பித்தல் வாரம்’ இயற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மே 12-18 நாட்களில் தமிழினப் படுகொலை பற்றி கனடா பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
கனடா பாராளுமன்ற அங்கீகாரமே உலகளவிலான பாராளுமன்றங்களில் தமிழினப் படுகொலைக்கு கிடைத்திட்ட முதல் அங்கீகாரமாகும்.
தமிழினப் படுகொலைக்கான ஒரு நாட்டினுடைய முதல் பாராளுமன்ற அங்கீகாரம் என்பதாக கனடா நாட்டின் பாராளுமன்ற அங்கீகாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முன்பே தமிழினப்படுகொலைக்கான ஒரு அரசினுடைய சட்டமியற்றும் மன்றத்தில் கிடைத்த அங்கீகாரமாக தமிழினப்படுகொலை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தைக் குறிப்பிடலாம்.
27.3.2013 அன்று, ‘இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி’ தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தமிழ்நாட்டின் அன்றைய ஆளுங்கட்சியும், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய ஆளுங்கட்சியும் ஒருமனதாக ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றின.
உலகத் தமிழர்களின் மக்கள் தொகையில் ஏழரை கோடி பேரைக் கொண்ட தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது தமிழினப் படுகொலை எனவும், அதற்கான நீதி வேண்டியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடுத்தக்கட்ட அங்கீகாரத்தைப் பெற வேண்டிய வரலாற்று தேவையுள்ளது.
ஒட்டுமொத்த கனடா மக்கள் தொகையில் 0.7 சதவீத பங்கை மட்டுமே கொண்ட தமிழர்கள் தங்களது அரசியல் திரட்சியால் கனடா பாராளுமன்றத்தினை தமிழினப்படுகொலையை அங்கீகரிக்கச் செய்து, மே-18ம் நாள் தமிழினப்படுகொலையை அனுசரிக்கவும் செய்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் மறுகரையில் அமைந்துள்ள, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், ஏழரை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ்நாடு அரசினை மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்க கோராதது மாபெரும் வரலாற்றுப் பிழை ஆகும்.
மே-18ம் நாளை தமிழினப்படுகொலை நாளாக அனுசரிக்கச் செய்வது மட்டுமன்றி, தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினருக்கு தமிழினப்படுகொலைப் பற்றி அறியச் செய்ய கனடாவில் கடைபிடிக்கப்படுவது போல் ‘தமிழினப்படுகொலை கற்பித்தல் வாரத்தை’ தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களின் வரலாற்றுப் பொறுப்பாகும். மே-18, தமிழினப்படுகொலை நாள் நினைவுகூறும் இந்நாளில் நமது வரலாற்றுப் பொறுப்பில் ஒன்றையும் நினைவுகூர்வோம்!
– பாலாஜி தியாகராஜன்