இந்திய அளவில் பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற ஒரு கோடி பெண்களுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 20 ஆயிரம் பெண் திட்ட பயனாளர்களைக் கண்டடைந்து அவர்களுடன் பாஜக கட்சித் தலைவர்கள் செல்ஃபி எடுக்க உள்ளனர். தமிழ்நாட்டில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்கமாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் மதுரையில் இந்நிகழ்வை தொடங்கி வைத்து பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது அவர் பேசிய பொழுது, “பிரதம மந்திரியின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புறங்களில் சுமார் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 85 சதவீதம் பெண்கள் பெயரில்தான் கட்டப்பட்டுள்ளன” எனப் பேசினார்.
பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஒன்றிய அரசின் திட்டமா?
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தினை (PMAY- Pradhan Mantri Awas Yojana) பாஜகவினர் தங்களது கட்சியினுடைய ஆட்சியின் திட்டமாக மக்களிடம் பிரச்சாரம் செய்வதை இயல்பாகக் கொண்டுள்ளனர். மாநில அரசு வீடு தேவையுள்ள பயனாளர்களைக் கண்டடைந்து PMAY திட்டத்தின் கீழ் வீடுகளை அமைத்துக் கொடுத்தாலும், அதனை தங்களது திட்டம் என்று கூறி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மாமல்லபுரம் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு அரசு சார்பாக வீடு வழங்கியதை, ”எங்க காசுல திட்டத்தை கொடுத்துவிட்டு நீங்க ஸ்டிக்கர் ஒட்டிக்க பார்க்கிறீர்களா” என்கிற ரீதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் காழ்ப்பிலிருந்து விமர்சித்திருந்தார். அதேபோல பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்திருந்த, மறைந்த கிராமியக்கூத்து கலைஞர் தங்கராசு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு அமைத்துத் தர உதவிய போதும் அதனை தங்களது திட்டமாக அண்ணாமலை உரிமை கோரினார்.
பிரதமரின் பெயரில் செயல்படுகின்ற திட்டம் என்பதால் PMAY என்பது ஒன்றிய அரசினால் மட்டுமே முற்று முழுதாக செயல்படுத்தப்படும் திட்டமென்றே நாமும் எண்ணக் கூடும். அதனடிப்படையில் பாஜகவினர் சொல்வது சரிதானே என்ற இயல்பான கேள்வியும் அதற்கடுத்ததாக நம்மிடையே எழும். ஆனால் உண்மை அதுவல்ல! PMAY உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் முறை, அத்திட்டங்கள் குறித்த நமது அறியாமையை வெளிக்காட்டக் கூடியவையாக உள்ளன.
பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் என்பது ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டமென்றாலும் அதற்கான மொத்த திட்ட நிதியையும் ஒன்றிய அரசு மட்டுமே ஒதுக்கீடு செய்வதில்லை. இத்திட்டத்திற்கு மாநில அரசுகளும் பங்களிக்கின்றன. PMAY திட்டத்திற்கான மொத்த நிதியில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் பங்களிக்கின்றன. அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்களில் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநில அரசு 10 சதவீதமும் பங்களிக்கின்றன.
PMAY திட்டம் என்பது, ஒன்றிய அரசின் ’மத்திய பங்களிப்பு திட்டங்களில் (Centrally Sponsered Scheme- CSS)’ ஒன்றாகும். ஒன்றிய அரசானது மாநிலங்களிலிருந்து வசூலித்த வரிகளிலிருந்து மீண்டும் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டிய நிதிப் பங்கை பல்வேறு வழிமுறைகளில் பிரித்துக் கொடுக்கிறது. மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்க வேண்டிய கடப்பாடுள்ள நிதி பங்கீட்டிற்கான வழிமுறைகளில் ஒன்று தான், மத்தியப் பங்களிப்பு திட்டம்-CSS.
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஏன் நிதியை பிரித்துக் கொடுக்க வேண்டும்?
இந்திய அரசியலமைப்பானது அரசு என்றளவில் ஒன்றிய அரசையும், மாநில அரசையும் சம அலகுகளாகவே (Equal units) குறிப்பிடுகின்றது. அவைகளுக்கு வழங்கியுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையிலேயே அவைகளுக்கிடையேயான வித்தியாசத்தை வரையறுக்கிறது. பொறுப்புகளின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அரசாக மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு பெரும்பாலும் மாநில அரசுகளிடத்திலே தான் உள்ளது. ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்கு தேவையுடைய நிதி திரட்டும் அதிகாரம், மக்களிடமிருந்து வரி வசூலிக்கும் அதிகாரம் பெரும்பாலும் ஒன்றிய அரசிடமே தங்கி நிற்கிறது.
15வது நிதி ஆணையத்தின் அறிக்கையானது, ”மக்களுக்காக செலவு செய்ய வேண்டியதற்கான பொறுப்புகள் மாநிலங்களிடத்தில் 62.4 சதவீதம் இருப்பதாகவும், ஆனால் அவைகளுக்கு செலவிடுவதற்குத் தேவையான ஆதாரங்களில் 37.3 சதவீதத்தை மட்டுமே மாநிலங்கள் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டது. மறுபுறமோ மக்களுக்காக செலவிடுவதற்குத் தேவையான ஆதாரங்களில் 62.7 சதவீதம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது; மக்கள் சார்ந்த பொறுப்பு என்பது ஒன்றிய அரசிற்கு 37.6 சதவீதம் மட்டும் தான்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே நிலவும் பொறுப்பு மற்றும் நிதி திரட்டும் அதிகாரத்திற்கிடையேயான இத்தகைய பாரதூரமான இடைவெளிச் சிக்கலை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைதான், ஒன்றிய அரசு மாநில மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப் பங்கின் ஒரு பகுதியை மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கும் ‘மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டு’ நடைமுறை.
நிதி ஆணையம் எதற்காக உருவாக்கப்பட்டது?
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீடுகளை பல்வேறு மாநிலங்களிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பதை வரையறை செய்ய உருவாக்கப்பட்டது தான் நிதி ஆணையம்.
ஒவ்வொரு மாநிலத்தினுடைய பரப்பளவு, மக்கள் தொகை, அவைகளின் வருவாய், காடு மற்றும் பசுமை பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்க வேண்டிய நிதி பங்கின் அளவை நிதி ஆணையம் வரையறை செய்கிறது.
மாநிலங்களுக்கான நிதிப் பங்கை ஒன்றிய அரசு வசூலிக்கின்ற வரிகளிலிருந்து ஒரு பகுதியினை நேரடியான வரிப் பங்கீடாகவும் (Tax Devolution), திட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பு வழியாகவும் (Scheme Related Transfer), நிதி ஆணைய கடன்கள் (Finance Commission Grants) வழியாகவும்- நிதி ஆணைய கடன்கள் என்பவை நிதி ஆணையமானது மாநிலங்களின் நிதி மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து தீர்மானிக்கக் கூடியதாகும்; அவை, மாநிலங்கள் செலவு செய்வதற்கு போதிய வருமானமில்லாத சூழலில் வழங்கப்படும்- வருவாய் பற்றாக்குறை கடன் (Revenue Deficit Grants), குறிப்பிட்ட துறைகளில் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வழங்கப்படும் துறைசார்ந்த கடன் (Sectoral Grants), மாநிலங்கள் குறிப்பிட்ட விடயங்களில் சிறப்பாக செயல்படுவதை ஊக்குவிக்க வழங்கப்படும் ஊக்கத் தொகை (Performance Based Incentives) மற்றும் இதர பங்கீடுகள் (Other Transfers)- ஒன்றிய அரசு மூலம் வழங்கும் கடன் மற்றும் ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் வழி மாநிலங்கள் பெற்றுக் கொள்ளும் கடனுக்கான வாய்ப்பு- போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை செய்கிறது ஒன்றிய அரசு.
மத்திய பங்களிப்புத் திட்டம் (Centrally Sponsored Scheme-CSS)
மேற்சொன்ன மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டு வழிமுறைகளில் ஒன்றான திட்டங்களுக்கான நிதி பங்களிப்பு (Scheme Related Transfer) வழிமுறையின் ஒரு பகுதியே மத்திய பங்களிப்புத் திட்டம் (Centrally Sponsored Scheme-CSS) ஆகும்.
மத்திய பங்களிப்புத் திட்டம்–CSS வழியாக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ள கணிசமான அளவு நிதிப் பங்கீடு வந்து சேர்கிறது. 2021-22ம் ஆண்டைய ஒன்றிய அரசின் பட்ஜெட் மதிப்பீட்டில், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய மொத்த நிதிப் பங்கீட்டில் 23 சதவீத நிதிப் பங்கீடு மத்திய பங்களிப்புத் திட்டத்தின்–CSS வழியாக பங்கீடு செய்ய மதிப்பிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்க கடமைப்பட்டுள்ள நிதிப் பங்கீட்டின் வழிமுறைகளில் ஒன்றான CSS திட்டங்களில் ஒன்றே, PMAY- பிரதமர் வீட்டு வசதி திட்டமாகும். மாநிலங்களுக்கு கொடுக்க கடப்பாடுடைய நிதிப் பங்களிப்பை ஒரு திட்டத்தின் வழி ஒன்றிய அரசு கொடுக்கிறது; அதிலும் ஒரு பகுதியளவே கொடுக்கிறது, மற்றொரு பகுதியினை மாநிலங்கள் பங்களிக்கின்றன.
PMAY திட்டம் போன்றே பல்வேறு மத்திய பங்களிப்புத் திட்டங்கள் உள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம், குடிநீர் (ஜல் ஜீவன்) திட்டம் போன்றவையெல்லாம் கூட மத்திய பங்களிப்புத் திட்டங்களாகும்.
தமிழ்நாட்டின் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமை கொண்டாடும் பாஜக
இப்படியான மத்திய பங்களிப்புத் திட்டங்களில் ஒன்றின் கீழ் தான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கான நிதியை பங்களித்தது. மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளை இணைத்து மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் (Establishing of new Medical Collges attached with existing district/ referral Hospital) மத்திய பங்களிப்புத் திட்டத்தின் கீழே 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 4,000 கோடி ஆகும். இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ. 2,145 கோடி பங்களித்தது. திட்ட வரையறையின்படி ஒன்றிய அரசின் பங்காக ரூ. 2,400 கோடி (60 சதவீதம்) கொடுத்திருக்க வேண்டும்; ஆனால் ஒன்றிய ரூ. 2,145 கோடி (53.6 சதவீதம்) மட்டுமே பங்களித்திருந்தது. ரூ.1,600 கோடி (40 சதவீதம்) செலவழித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் மீது ரூ. 1,855 கோடி செலவினம் சுமத்தப்பட்டிருக்கக் கூடும். இந்த திட்டப் பங்களிப்பு கூட கட்டிடங்களை கட்டியெழுப்பி நிர்மாணிக்க மட்டுமே. மருத்துவக் கல்லூரிகளை பராமரிக்கும், நிர்வகிக்கும் செலவு முழுக்க முழுக்க தமிழ்நாட்டினுடையதே.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்கு உரியதைக் கொடுக்க வேண்டியதற்கு, அதுவும் கொடுக்க வேண்டிய அளவினை விட குறைவாகக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமை கொண்டாடியது பாஜக. 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான தொடக்க விழா நடைபெற்ற ஜனவரி 12, 2022 அன்று, தமிழ் செய்தித்தாள்களில் முழுப் பக்கத்திற்கு விளம்பரம் செய்து அதனை தங்களது பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமென்று உரிமைக் கொண்டாடியது தமிழ்நாடு பாஜக.
CSS குறித்து பிடிஆர் வைத்த விமர்சனம்
மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!
ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு குறித்து இந்தியா டுடே நடத்திய மாநிலங்களின் நிலை மாநாட்டில் (State of the States Conclave) பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”ஒன்றிய அரசு தான் எல்லா திட்டங்களையும் தொடங்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. (திட்டம் தொடங்கப்பட்ட) முதல் வருடம் அவர்கள் (ஒன்றிய அரசு) 80 சதவீதம் நிதியை பங்களிப்பார்கள், மாநிலம் 20 சதவீதம் பங்களிக்க வேண்டும். அடுத்த வருடம் அவர்கள் 50:50 என்பார்கள் (அதாவது ஒன்றிய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் பங்களிக்க வேண்டுமென்பதாக). மூன்றாவது வருடம் இன்னமும் அத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பெயரைப் பயன்படுத்துவார்கள், ஆனால் அவர்களது பங்கு 20 சதவீதத்திற்கு குறைந்துவிடும். நான்காவது வருடம் அவர்கள் நம்மையே 100 சதவீத நிதியையும் செலவு செய்யச் சொல்வார்கள், ஆனால் நாம் அதனை ஒன்றிய அரசின் திட்டமென்றே அழைக்க வேண்டும்” என ஒன்றிய அரசின் (மத்திய பங்களிப்பு) திட்டங்கள் குறித்து விமர்சித்திருந்தார்.
மாநில அரசின் கொள்கைகளில் நிதி ஆணையத்தின் தலையீடு
அதே போல மாநில அரசின் கீழுள்ள பல்வேறு அரசுத் துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை கொண்டு வருவதற்கு, மாநிலப் பட்டியலுக்குட்பட்ட அதிகாரங்களில் தலையீடுகளை செய்வதற்கு ஒன்றிய அரசு நிதி ஆணையத்தை, நிதிப் பங்கீட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறதென குற்றச்சாட்டும் உள்ளது.
உதாரணமாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தியது. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்துவது பற்றி முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் தான். தேர்தல் ஜனநாயக நடைமுறையின் வழி மக்கள்- மக்கள் பிரதிநிதிகள் – மாநில அரசு தங்களுக்கு இடையேயுள்ள உறவின் அடிப்படையில் இவை தொடர்பான முடிவுகளை எடுப்பர்; எனவே மாநில அரசு நடைமுறைப்படுத்தும் சட்ட, திட்ட முடிவுகள் தேர்தல் ஜனநாயகத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ள நிர்பந்தம் உள்ளது. மரபான இந்த நடைமுறைக்கு விரோதமாக ஒன்றிய அரசு இந்நடைமுறையில் தலையிட்டு ’தான் கொடுக்க வேண்டிய நிதியை தமிழ்நாடு (மாநிலம்) பெற வேண்டுமானால் இதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று நிதி ஆணைய நிதிப் பங்கீட்டின் பேரில் நிர்பந்தங்களை உருவாக்குகிறது.
அப்படி 15வது நிதி ஆணையத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட நிர்பந்தத்தின் விளைவே தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகும். ’15-ஆவது ஒன்றிய நிதி ஆணையம், 2022-2023ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களைப் பெறுவதற்கு, மொத்த ஆண்டு மதிப்பில் சொத்துவரி விகிதம் (Floor rate i.e, Rate of Taxation) எவ்வளவு என அறிவிக்கை வெளியிட வேண்டும் எனவும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தது.
மேலும், தூய்பை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களுக்கு மானிய நிதி பெறுவதற்கு சொத்து வரி/காலிமனை வரி சீராய்வு செய்வதை அவசியமாக்கியது’.
மாநில மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியை, நிதியை திரும்ப மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டியதை திட்டத்தின் பேரில் கொடுத்துக் கொண்டு, அந்த திட்டங்களுக்குரிய நிதி வேண்டுமானால் ‘மக்களிடமே மேலும் கூடுதல் வரியை வாங்குங்கள்’ என நிர்பந்திப்பது எவ்வகையில் நியாயம்?!
ஒன்றிய அரசின் மறைமுக யுக்தி
‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிக்கு ஒன்றிய அரசின் நிதிப் பங்கீட்டை சார்ந்திருக்காதீர்கள்; மக்களிடமிருந்து வசூலிக்கும் கூடுதல் வரியைக் கொண்டே உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்களைச் செய்து கொள்ளுங்கள்’ என உள்ளாட்சி செலவினங்கள் தொடர்பில் ஒன்றிய அரசு மறைமுகமாக செயல்படுத்தும் யுக்தி இது.
மேலும் அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்கீடு மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை சுமத்துவதாக உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் தமிழ்நாடு அரசின் பங்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரம் தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. வைகோ மற்றும் திரு. சண்முகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலாகும். இதில் 2017-18ம் நிதியாண்டில் ரூ. 520 கோடியும், 2018-19ம் நிதியாண்டில் ரூ.1238 கோடியும் ஒன்றிய அரசால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான நிதியாக வழங்கப்பட்டுள்ளது
இதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முறையே ரூ. 1200 கோடியும், ரூ. 1400 கோடியும் ஒதுக்கியிருக்கிறது.
தமிழ்நாடு அரசானது ஆண்டுதோறும் தனது பட்ஜெட்டில் நகர்புறத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான நிதியை அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக ஒதுக்குகிறது. 2016ம் ஆண்டிலிருந்து 2021-22 இடைக்கால பட்ஜெட் வரை அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரங்களைப் பார்ப்போம்,
நிதியாண்டு | அம்ருத் (AMRUT) திட்டத்திற்கான ஒதுக்கீடு (கோடியில்) | ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஒதுக்கீடு (கோடியில்) |
2021-22 (இடைக்கால பட்ஜெட்) | 1,450 | 2,350 |
2020-21 | 1,450 | 1,850 |
2019-20 | 1,450 | 1,650 |
2018-19 | 1,200 | 1,400 |
2017-18 | 1,400 | 1,200 |
2016-17 | 500 | 400 |
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள நிதிப் பங்கீட்டின் தகவல்கள் கிடைக்கப்பெற்ற குறிப்பிட்ட இரு நிதியாண்டில் அத்திட்டத்திற்கான தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீடு தான் அதிகமாக இருந்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டமென்றாலும், இதனை முற்று முழுதாக ஒன்றிய அரசினுடைய திட்டமென்று சொல்ல முடியுமா?
CSS திட்டங்கள் மூலம் மாநிலங்களிடம் திணிக்கப்படும் கூடுதல் நிதிச் சுமை
ஒன்றிய அரசால் உருவாக்கி தரப்படும் CSS- திட்டங்கள் தங்கள் மாநிலங்களுக்கு தேவையோ இல்லையோ, தங்களுக்கு ஒன்றியத்திடம் கிடைக்க வேண்டிய நிதிப் பங்கிற்காக மாநிலங்கள் அவைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுகின்றன. இங்கு திட்டங்கள் தேவையா, இல்லையா என்பதனை, ஏற்கனவே மாநில அரசுகள் தாங்களே சுயாதீனமாக உருவாக்கி, செயல்படுத்தும் திட்டங்களின் அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகிறது.
உதாரணமாக, நகர்புற வளர்ச்சி என்ற நோக்கில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டிலுள்ள நகர்புறங்களின் தேவையறிந்து திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் ‘வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை’ உள்ளது. தமிழ்நாட்டு நகரங்களுடன் நேரடி தொடர்புடைய தமிழ்நாடு அரசானது ’வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின்’ கீழ் சுயாதீனமாக ’தமிழ்நாட்டு நகரங்களுக்கென்ற’ பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறது. இந்நிலையில் CSS- திட்டங்களின் கீழ் ஒன்றிய அரசு உருவாக்கித் தரும் நகர்புற வளர்ச்சி சார்ந்த அம்ருத், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், தமிழ்நாடு அரசு தாமே உருவாக்கி செயற்படுத்தும் தமிழ்நாடு அரசின் நகர்புற திட்டங்களோடு கூடுதலாக இணைந்து கொள்கின்றன; கூடுதல் நிதிச் சுமையை தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதிப் பங்கை CSSஐ மூலமாக பெறுவதின் மூலம் ஏற்கனவே ஒரு மாநில அரசாக செயற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட திட்ட நோக்கத்திற்கு, மேலும் கூடுதலாக தமது பங்கிலிருந்து தமிழ்நாடு அரசு செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி இந்திய மாநிலங்களிடையே பல்வேறு வகைகளிலான ஏற்றத் தாழ்வுகள் நிலவுகையில் ஒரே மாதிரியான, வகையிலான திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் வகுப்பது என்பது மாநிலங்களுக்கு நடைமுறைச் சிக்கலை உருவாக்கும். அவை வளர்ந்த மாநிலங்களை பின்னோக்கி இழுக்கின்ற வகையிலும், வளரும்/பின்தங்கிய மாநிலங்களுக்கு சுமையை சுமத்த கூடியதாகவும் அமையும். இது திட்டத்தின் அடிப்படையையே சிதைப்பதாக அமையும்.
உதாரணத்திற்கு, கல்விக்கான மத்திய பங்களிப்புத் திட்டத்தில் கல்வி நிலையில் மிக முன்னேறியுள்ள தமிழ்நாட்டிற்கும், மிக பின் தங்கியுள்ள மாநிலமொன்றிற்கும் ஒரே திட்டத்தினை முன்வைத்து அதன்படி செயல்படக் கேட்பதானது திட்டத்தின் நோக்கத்தினை சிதைப்பதாக அமையக்கூடும்
அதனால் சில மாநிலங்கள் தங்களுக்கான நிதிப் பங்கீட்டை திட்டங்களுக்கான நிதிப் பங்கீடாக வழங்காமல், நேரிடையான நிதிப் பங்கீடாக வழங்கும்படி கேட்கின்றன.
முதலமைச்சர்களின் உப குழு
CSS-திட்டங்களில் நிலவும் இத்தகைய பிரச்சனைகளைக் களைய உருவாக்கப்பட்ட Centrally sponsored Schemeகளை சீர்திருத்துவதற்கான முதலைமைச்சர்களின் உப குழு (The sub-group of chief ministers on rationalisation of centrally sponsored schemes), ’குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஒன்றிய நிதி அமைச்சகத்தின் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை மொத்தமாகவும் (Lump Sum), (ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் எல்லா CSS-திட்டங்களையும் மாநிலங்களின் மீது சுமத்தாமல்) மாநிலங்கள் விரும்பக்கூடிய திட்டங்களை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்படுத்த’ பரிந்துரையை வழங்கியிருந்தது. CSS-திட்டங்களால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையின் காரணமாக தெலுங்கானா மாநில நிதி அமைச்சர் ஹரிஸ் ராவ், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், ’CSS-திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரியிருந்ததும்’ இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஒரே விடயத்திற்கான செலவினம் என்றளவில் மத்திய பங்களிப்புத் திட்டங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை கொடுக்கின்றன.
- மாநில உரிமையுடைய, அதிகாரமுடைய துறைகளிலே மத்திய பங்களிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுள்ளதானது, அவைகளின் மீது கொள்கை மாற்ற அழுத்தங்களை சுமத்துகின்றன.
- வெவ்வேறு வளர்ச்சி நிலைகளிலுள்ள மாநிலங்களுக்கு ஒரே விதமான மத்திய பங்களிப்புத் திட்டங்களை முன்வைப்பதானது, அத்திட்டத்தினுடைய நோக்கத்தின் செயல்திறனை சிதைப்பதாக உள்ளது.
மாநிலங்களுக்கு இவ்வகையிலெல்லாம் சுமையாகவும், பிரச்சனையாகவும் ஒன்றிய அரசின் CSS திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிலவுகையில், அதனில் கட்சி ஆதாய அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக.
கூட்டாட்சியின் கேள்வி
நிதி திரட்டும் அதிகாரத்தின் பெரும் பகுதியினை ஒன்றிய அரசிடம் கொடுத்துள்ள இந்திய அரசமைப்புச் சட்டமானது, ’மக்களுக்கு செலவு செய்ய வேண்டிய பொறுப்பின் பெரும் பகுதியினை மாநிலங்களிடம் கொடுத்ததினால், மக்களுக்கான செலவினப் பொறுப்பினை ஏற்றிருக்கும் மாநிலத்திற்கு ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்திலிருந்து ஒரு பகுதியினை பங்கிடச் சொல்கிறது’.
கூட்டாட்சி என்பதன் பேரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பானது, தனது சமமான அலகுகளாக விளங்கும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மக்களுடைய செலவினங்களுக்காக வகுத்திருக்கும் மிக அடிப்படையான, மிக இயல்பான நிதி சார்ந்த ஒரு கூறே ‘ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டு முறை’.
இதில் ‘நான் தான் கொடுக்கிறேன்’ என ஒன்றிய அரசோ அதன் ஆளும் கட்சியோ உரிமை கோர எந்த முகாந்திரமும் இல்லை.
இதை பாஜகவும் நன்கறியும். காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சி நடைபெறும் பொழுது, பாஜகவின் ஆட்சி நடைபெற்ற மாநில அரசுகள் ‘ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடை, நிதி ஒதுக்கீடு திட்டங்களை உங்களுடையதாக (காங்கிரஸினுடையது)’ உரிமை கோராதீர்கள் என விமர்சித்திருக்கின்றன.
மிகக் குறிப்பாக இன்றைய ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியின் போது குஜராத் மாநில முதல்வராக இத்தகைய விமர்சனங்களை கடுமையாக முன் வைத்திருக்கிறார்.
”அவர்கள் (காங்கிரஸ் ஆட்சியாளர்கள்) நமக்கு (மாநிலங்களுக்கு) பணம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். நான் அவர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் (மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய) அந்த பணத்தை உங்களது மாமாவிடமிருந்து பெற்றீர்களா – உங்க சொந்த பணத்தையா கொடுக்கிறீர்கள்’ என்கிற ரீதியில் – நாங்கள் (மாநிலங்கள், எங்களுக்குரிய) பணத்தைப் பெறுவதற்கு பிச்சைக்காரர்கள் போல (உங்களிடம்) நிற்க வேண்டுமா?”
”(மாநிலங்களுக்கு கொடுக்கக் கூடிய நிதியை உங்களுடையது என சொல்வது) உங்களுக்கு அவமானம். இந்த பணம் எந்த அரசாங்கத்தினுடைய பணமும் இல்லை. இது (அரசின் பணம்) இந்த நாட்டின் மக்களுக்கு சொந்தமானது” என்று ‘மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடை தங்களுடையது என உரிமை கொண்டாடிய காங்கிரஸ் அரசை நோக்கி’ கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ‘முதல்வர்’ மோடி.
இவ்விதமாக ’மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு’ பற்றி கடுமையாக விமர்சித்த அன்றைய முதல்வர் மோடியின் கட்சிக்காரர்கள் தான், இன்று அவர் பிரதமராக பதவி வகிக்கும் பொழுது மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களென்றும், அத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தங்களது நிதி என்றும் உரிமை கோருகின்றனர்.
அவர்களை நோக்கி நாமும் ‘முன்னாள் குஜராத் முதல்வர்’ மோடி போன்றே நம்முடைய மொழியில் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது… ”தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுப்பது என்ன உங்க அப்பன் வீட்டு காசா?”!
– பாலாஜி தியாகராஜன்