2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் அனுமதியினை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வழங்கியதும், அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சோதிக்கப்படாததும் வெளிவந்துள்ளது. The Quint செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கிய அரசுத் துறை நிறுவனமான எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (ECIL), தனியார் நிறுவனமான T&M சர்வீசஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர்களை வேலைக்கு சேர்த்தது தெரிய வந்துள்ளது. இதனை கடந்த ஆண்டே Quint இணையதளம் அம்பலப்படுத்தி இருந்தது. தற்போது அந்த பணிகளில் இருந்த இரண்டு பொறியாளர்கள் அந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் நேர்காணலின் மூலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் சோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தனியார் கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி
அப்படி ஒப்பந்த பொறியாளராக பணியாற்றிய பொறியாளர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார். மொத்தமாக 187 ஒப்பந்த பொறியாளர்களின் ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு தற்போது வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், அவர்களில் யாராவது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் வடிவமைப்பு குறித்த தகவல்களை கசியவிட முடியும் என்றும், தேர்தல் நடத்தப்படும் முறை மற்றும் திட்டங்கள் வரை அவர்களால் கசியவிட முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏதாவது ஒரு நிறுவனம் நினைத்தால் அந்த பொறியாளர்களைப் பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாமாக உருவாக்க முடியும் என்றும், இது முழு தேர்தல் முறையையும் பாதிக்கக்கூடியதாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர்,
”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு,
”கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.
அந்த பொறியாளர் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜுனியர் டெக்னிக்கல் ஆபிசர் என்ற பொறுப்பிற்கு ECIL நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் அவர் காட்டியுள்ளார்.
மேலும் அவர்களுக்கான பயிற்சியின் போது, வேறு யாராவது கேட்டால் தங்களை ஒப்பந்த பணியாளர்களாக காட்டிக் கொள்ளாமல், ECIL-ன் நிரந்தர பணியாளர்களைப் போலவே காட்டிக் கொள்ள கற்றுத் தரப்பட்டதாகவும், தாங்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை பார்த்தது எந்த மாவட்ட நீதிபதிகளுக்கும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முறையாக சோதிக்கப்படாத இயந்திரங்கள்
அந்த ஒப்பந்த பொறியாளர்களின் தொடக்க வேலை என்பது EVM இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களை ”முதல் நிலை சோதனை (First Level Checking – FLC)” எனும் சோதனைக்கு உட்படுத்துதல். அது தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு நடைபெறும். அந்த சோதனையின் போது பொறியாளர்கள் இயந்திரத்தில் 96 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஆனால் சில நேரங்களில் 75 வாக்குகளிலேயே இயந்திரக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மேலும் இயந்திரங்களில் இருந்த பிற பிழைகளை கண்டுகொள்ளாமல் இயந்திரங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் மற்றொரு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதில் ஒரு வருட அனுபவம் இருந்தால், அவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், மேலும் அனுபவமில்லாத பல புதியவர்களும் (Freshers) கூட பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல்களின்போதும் பணியாற்றியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பொறியியலாளர்கள் மட்டுமே தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள் என்று கூறுவதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றம் உட்பட மக்கள் அனைவரையும் தவறாக வழிநடத்த நினைக்கிறதா என்ற கேள்வியினையும் quint செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வடிவமைப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விடயம் என்பதால், ஒரு தனியார் நிறுவனத்தால் கான்ட்ராக்ட் மூலம் பணியமர்த்தப்பட்ட பொறியாளர்களுக்கு EVM இயந்திரங்களின் மீதான முழுமையான அனுமதி வழங்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.