காஷ்மீர் ஊரடங்கு

பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

கடந்த 2019 ஜூலை மாதத்தின் போது, இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசுத் துறைகளுக்கு பல்வேறு அவசர உத்தரவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ரேசன் பொருட்கள் குவிக்கப்பட்டது. ராணுவ நடமாட்டம் இயல்புக்கு மீறி அதிகரித்தது. ஸ்ரீநகர் லால் சவுக்  சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆட்டோ, ரிக்சா, பேருந்து போன்ற அனைத்திலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீளமான வரிசையில் தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தது. இவ்வனைத்தும் இயல்புக்கு மாறாக இருந்ததை மக்கள் உணர்ந்தனர். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.

ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 37000 ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டு, பாஜக-வின் அரசியல் தலைவர்களைத் தவிர, மற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அடுத்தநாள் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய பாராளுமன்றத்தில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறப்புரிமை சரத்து 370 மற்றும் 35A ரத்து செய்யப்பட்டது. அத்தோடு  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவத்தை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடந்து நான்கு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 

நான்கு சட்ட மசோதாக்கள்

  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவதற்கான மசோதா.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 35A-வை நீக்குவதற்கான மசோதா.
  • ஜம்மு காஷ்மீரைப் பிரித்து, ஜம்மு காஷ்மீரினை சட்டமன்றத்தைக் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா.

இந்த மசோதாக்களை நாடளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்பே, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 (3) எனும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதிகள் வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 A-வை   நீக்கி ஆணையிட்டுள்ளார்.

முடக்கப்பட்ட காஷ்மீரிகளின் வாழ்க்கை

இந்த மாற்றங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வையே கொந்தளிக்கச் செய்தது. 2019 ஆகஸ்ட் மாதம் துவங்கி இன்று வரை அவர்கள் மிக மோசமான ஒரு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சமூக, அரசியல், பொருளாதார உரிமைகள் அனைத்தையும் இழந்து வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். காய்கறி சந்தை, கல்வி நிலையங்கள், போக்குவரத்து, தொழிற்சாலைகள், ஊடகங்கள், தொலைதொடர்பு, விவசாயப் பண்ணைகள் என அனைத்தும் செயலிழக்கப்பட்டது. தொலைபேசி இணைப்புகளும், இணைய வசதிகளும் துண்டிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக அந்நியப்படுத்தப்பட்டனர். எந்தவித தொடர்பும் அற்ற ஒரு தனித்தீவாக கடந்த ஒரு ஆண்டு காலமாக காஷ்மீர் மக்கள் இருந்து வருகின்றனர். இந்தபோக்கு அவர்களின் அரசியல் எதிர்காலத்தை இருட்டிப்பு செய்துள்ளது. வாழ்வாதாரத்தையும் அடியோடு சிதைத்துள்ளது.  

தொடர்ச்சியாக முடக்கப்படும் தொலைபேசி மற்றும் இணையதள தொடர்புகள்

ஊரடங்கு பிறப்பித்ததும் அரசு தொலைதொடர்பு வசதிகளையும் கட்டுப்பாடுகளுடன் முடக்கியுள்ளது.  இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு புதிய ஒன்றல்ல. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு 2015-ல் இருந்து 2019 ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதிவரை ஏறத்தாழ 117முறை தொலைபேசி மற்றும் இணையவழி தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளது. 

ஏறத்தாழ 8.8 மில்லியன் மக்களின் செல்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. 6600 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆகஸ்ட் 4-ம் தேதியில் இருந்து மார்ச் 24, 2020 வரை பொது நிகழ்வுகளுக்கான ஒன்றுகூடல் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடதை நாம் அறிவோம்.

பத்திரிக்கையாளர் அனுராதா பாசின் (Anuradha Bhasin) உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக வழக்கு போட்டதற்குப் பிறகு தொலைதொடர்பு சேவைகள் அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக 2G இணையவசதி மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் ஒரு சில சமூக வலைதளங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. 4G இணைய வசதியை மீண்டும் சீரமைப்பது தேவையா என்பது குறித்து ஜம்மூ காஷ்மீர் அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2020 மே மாதத்தில் ஆணை பிறப்பித்தது. ஆனால் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகம் தனக்கு சாதகமான ஆட்களை வைத்து அந்த குழுவை உருவாக்கி ஆய்வு நடத்தியது.

அந்த குழு 2G இணைய சேவையே போதுமானது இதையே தொடரலாம் என்று மத்திய அரசுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்தது. ஜம்மூ காஷ்மீர் மாநிலம் உடைக்கப்பட்ட பிறகு அங்கு நேரடி ஆட்சியில் அமர்த்தப்பட்ட அனைவரும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் என்று தெரிந்தும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துறை கொடுத்தது. இது போன்றதொரு நீண்டநாள் இணைய முடக்கம் எந்த ஜனநாயகக் குடியரசிலும் நிகழ்ந்ததில்லை. 

C:\Users\Admin\Desktop\2.png
காஷ்மீரில் இணையதளம் முடக்கப்பட்ட விவரங்கள்

தடைகளை நியாயப்படுத்தும் அரசின் முரணான வாதம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் இதுபோன்ற தடைகள் தேவைதான். அங்கு ஆயுதக் குழுக்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். எனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் புள்ளிவிவரங்களை பார்த்தால் முரணாக இருக்கிறது.

2001-ம் ஆண்டு 4522 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் 2013-ம் ஆண்டு 170 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் 2001-ம் ஆண்டு 3552 உயிர்சேதங்கள் இருந்தது. ஆனால் 2013-ம் ஆண்டு 135 ஆக குறைந்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் காஷ்மீர் சிக்கல் குறித்து அமைதியான முறையில் உரையாடுவதற்கான அனைத்து சூழ்நிலையும் உருவாகியது. அதைத்தான் மக்களும் விரும்பினார்கள். அத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசுகள் இந்திய அரசுடன் மிக இணக்கமான பேச்சுவார்த்தையில் இருந்து வந்துள்ளது. 

பின்னடைவை ஏற்படுத்திய அரசின் நடவடிக்கைகள்

2003 – 2007 காலக்கட்டங்களில் காஷ்மீர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தை வன்முறை சம்பவங்களைக் குறைத்தது. ஆனால் 2008-ம் ஆண்டு  99 ஏக்கர் வனப்பகுதிதை அமர்நாத் கோயில் சங்கத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது. இதனால் கோபமடைந்த காஷ்மீரிகள் பெரும் பொராட்டத்தில் ஈடுபட்டனர். 5 லட்சம் மக்கள் பேரணியாக சென்றனர். இதை அடக்கும் விதமாக ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் கலவரங்கள் மூண்டது. பின் அரசு நிலத்தை ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2010 ஏப்ரல் 23-ம் தேதி ராணுவம் நடத்திய என்கவுன்டரில் 3 காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் 110 பேர் CRPF காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய அரசின் இந்தபோக்கு பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய பின்னடைவைத் தந்தது. 

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மூர்க்கமடைந்த பிரச்சினை

’‘பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீர் குறித்தான போக்கு மேலும் மூர்க்கமடைந்தது. காஷ்மீர் தலைவர்களுடனான பன்முகத் தன்மை கொண்ட போச்சுவார்த்தை தவிர்க்கப்பட்டது குறிப்பாக ஆயுதக் குழுக்களை அமைதிப்படுத்தும் அனைத்து யுக்திகளும் கைவிடப்பட்டு. ராணுவத்தின் கெடுபிடி அதிகரித்தது, இந்த போக்கு காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசின் மீதான கோபத்தையும், வெறுப்பையும், விரக்தியையும், அதிகரித்தது. குறிப்பாக 2016-ம் ஆண்டு புர்கான் வானியின் கொல்லப்பட்ட பிறகு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடத் துவங்கினார்கள். அந்த போக்கை காஷ்மீர் சமுகம் அனுமதித்தது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு ராணுவக் கட்டுப்பாடுகளை அதிகரித்தது. இதனால் காஷ்மீர் சமூகம் மேலும் மூர்க்கமடைந்து வருகிறது“ என்று முன்னால் வெளியுறவு துறை அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தலைமையிலான Concerned Citizens Group தொடர்ந்து எச்சரிக்கை செய்தது. 

2001-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரையிலும் வன்முறை சம்பவங்கள் படிப்படியாக குறைந்து கெண்டிருக்கும் தருணத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வன்முறைகள் அதிகரித்துள்ளது என்று South Asian Terrorist Portal நிறுவனம் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

2013-ம் ஆண்டு 84 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டு 205 சம்பவங்களும், 2019-ம் ஆண்டு  135 சம்பவங்களும், 2020-ம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் மட்டும் 80 சம்பவங்களும் நடந்துள்ளது.

அதேபோல் 2018-ம் ஆண்டு கொல்லப்பட்ட 257 பேரில் 142 பேர் உள்ளுர் அப்பாவி பொதுமக்கள் என்றும், 2019-ம் ஆண்டு கொல்லப்பட்ட 152 பேரில் 120 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் South Asian Terrorist Portal செய்தி வெளியுட்டுள்ளது. இந்த போக்குகள் பொதுமக்களை மேலும் மூர்க்கமடையச் செய்துள்ளது. 

தடுப்புக் காவலில் சிறைபிடிக்கப்பட்ட காஷ்மீரிகள்

2019 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு 6605 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின்  அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 144 சிறுவர்களும் உள்ளடக்கம்.

மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதத்திற்குப் பிறகு படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 2020 மார்ச் மாதத்தின் கணக்குப்படி இன்னும் 437 பேர் தடுப்புக் காவலில்தான் உள்ளனர். இதில் 389 பேர் Jammu and Kashmir’s Public safety Act-ன் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களை யாரும் சந்திக்க முடியாதபடி நெருக்கடிகள் உள்ளது. குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் என்று யாரும் அணுக முடியாத சூழ்நிலை உள்ளது. Jammu and Kashmir’s Public safety Act-ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எந்தவித நீதிமன்ற குறுக்கீடும் இன்றி இரண்டு ஆண்டுகளுக்கு தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று 2006-ம் ஆண்டு இந்தியாவின் முன்னால் துணை குடியரசுத் தலைவர் Hamid Ansari தலைமையிலான மனித உரிமைகள் குழு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து பல்வேறு தருணங்களில் PSA சட்டத்திற்கு எதிரான குரல்கள் நசுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

2019 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் 144 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முதலில் மறுத்தது. பின்  உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதில் 75 சிறுவர்கள் Jammu and Kashmir’s Public safety Act-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது வயது சிறுவனைக் கூட  PSA சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஒன்பது சிறுவர்கள் மீது  குற்றவியல் நடைமுறைக் குறியீடு (CrPC) பிரிவு 107-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயல்பாடுகள் அனைத்தும் Jammu Kashmir Juvenile Justice (care and protection of children) Act 2013 மற்றும் Juvenile Justice (care and protection) of children Act 2015 ஆகிய சட்டங்களை மீறிய நடவடிக்கை ஆகும்.

இதுபோன்று சட்டவிரோதமாக சிறுவர்களைக் கைது செய்து சில மணி நேரங்களோ அல்லது நாள் கணக்கிலோ வைத்திருப்பது அவர்களின் நல்லதிற்குத்தான் என்றும், இருந்தும் சட்டத்தின் அடிப்படையில் இது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் டிசம்பர் 9-ம் தேதி வாய்மொழிக் கருத்தாக தெரிவித்தது. டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கு மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020 ஜுன் மாதம் ஐ.நா சபை பொதுச் செயலாளரின் அறிக்கையின் படி, இன்னும் 9-ல் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். 

மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளின் வாழ்வு

மே மற்றும் ஜுன் மாதத்தில் மட்டும் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தையும் உள்ளடக்கம். ஆயுதக் குழுவிற்கும், ராணுவத்தினருக்கும் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த ஷெல் தாக்குதல்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ராணுவ அரண்களைத் தாண்ட முயற்சித்ததாகவும் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐநா பொதுச்செயலாளரின் அறிக்கையின்படி, கடந்த பத்து மாதத்தில் 8 குழந்தைகளும், 7 சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு முறையான கல்வி தடைபடுகிறது. அது அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. சிறு வயதில் ஏற்படுகின்ற கசப்புகள் சோர்வையும் வெறுப்பையும் விதைத்து விடுகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்தடுத்த பாகங்களில் வெளிவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *