பொதுத்த்துறை நிறுவனமான ONGC 1993 முதல் இப்போது வரை இதர பிற்படுத்தப்பட்டவர்களின் (OBC) இடஒதுக்கீட்டிற்கான இடங்களை பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களைக் கொண்டு நிரப்பாமல் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவில் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.
1993-ம் ஆண்டு இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இப்போதுவரை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி-யில் 27% சதவீத இடஒதுக்கீடு முறையை அதிகாரிகள் பணி நியமனத்தில் கடைபிடிக்கவில்லை என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
1994-ம் ஆண்டு நிரப்பப்பட்ட 99 இடங்களில் 26 பேருக்கு பதிலாக வெறும் 9 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்துள்ளது.
தொழில் பழகுநர்களை தேர்வு செய்வதிலும் இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது இன்னும் அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், முதற்கட்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி அழைத்திருந்தனர். ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் விசாரணையை தவிர்த்து இருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16-ன் நான்காம் விதி கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக அம்பேத்கர் செய்த முயற்சியாகும். ஆனால் அந்த நலன்களை தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட OBC மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
தகவல்: தி பிரிண்ட்