இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக பொதுத்தேர்தல் என்பது பெரும் எதிர்பார்ப்புக்கும் சர்ச்சைக்கும் இடையில் நடத்தப்படும் ஒரு அரசியல் சூதாட்டத்தைப் போல் மாற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது காவி சாயத்தை எப்படியாவது பூச வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளை குலைப்பது பாஜக-வின் செயல்திட்டமாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களை எப்படியாவது தனது ஆளுகைக்குள் கொண்டுவர தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மாநிலங்கள் தேர்தலுக்கு எவ்வாறு காத்திருக்கிறதோ, அதேபோல் பாஜக அரசியலில் செல்வாக்குமிக்க அங்கமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளர் தேர்தலுக்காகவும் பாஜக காத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மையக் கட்டமைப்பு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்கார்யாவா அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் கூடியவர். சர்சங்சாலக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-சின் தலைவர் பதவி அரசியல் தத்துவ வழிகாட்டியாகக் கருதப்படுகிறது. எனவே அமைப்பின் அன்றாட நிகழ்வுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்கக்கூடிய மிக முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவரைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்கார்யாவாவின் கட்டளைக்கு இணங்கத்தான் கரசேவகர்கள் பாஜகவிற்காக தேர்தல் பணி செய்வார்கள். எனவே பாஜக-வின் களப்பணிக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் இடையில் இருக்கும் பாலம்தான் சர்கார்யாவா.
ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்முரண்பாடு
2018-ம் ஆண்டு சுரேஷ் பய்யாஜி ஜோஷி பதவி விலகப்போவதாகவும், அந்த பதவிக்கு துணை பொதுச்செயலாளராக இருந்த தத்தாத்ரேயா நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்டது.
அவர் அந்த பதவியில் தொடர்ந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாஜக-வை மையமாக வைத்து செயல்படாமல் எப்போதும்போல் தனித்துவமாக இயங்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கருதினார்கள். தத்தாத்ரேயா மோடியுடன் அதீத நெருக்கம் காட்டுவதாக கருதப்பட்டதால் அவரை சர்கார்யாவாக தேர்வு செய்வதில் ஆர்.எஸ்.எஸ் தலைமை குழு தயக்கம் காட்டியது.
அதேபோல் சுரேஷ் பய்யாஜி ஜோஷி சர்கார்யாவாக நீடித்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையிலான உறவில் எந்த குழுப்பமும் வராமல் இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்துத்துவாவின் இரண்டு திட்டங்கள்
வரவிருக்கும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனக்கு இரண்டு மிக முக்கியமான செயல்திட்டங்கள் இருப்பதாக கணக்கில் கொண்டுள்ளது.
- முதலாவது 2024-ம் ஆண்டு பாஜக-வின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைப்பது.
- இரண்டாவது மிகமுக்கியமானது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-ம் ஆண்டு கொண்டாட்டத்தை வடிவமைப்பது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925 செப்டம்பர் 27-ம் தேதி விஜயதசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது. நாக்பூரை மையமாக வைத்து சித்பவன் பார்ப்னர்களால் துவங்கப்பட்ட அமைப்பு இன்றளவும் மராத்திய பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு துவங்கி 100 ஆண்டுகளை நெருங்கிவிட்டதைக் கொண்டாட 2024-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரு ஆண்டுக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைதிட்டத்தினூடாக இந்தியாவை மேலும் மேலும் இந்துத்துவா சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட நாடாக உலகிற்கு பறைசாற்ற திட்டமிட்டுள்ளது. எனவே மார்ச் மாதம் தேர்வு செய்யப்போகும் பொதுச்செயலாளர் முன்னிலையில்தான் அனைத்து செயல்திட்டங்களும் வகுக்கப்படும். அவர்தான் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கப் போகிறார். எனவேதான் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில் எதிர்பார்ப்புடன் செயல்படுகிறது.
அகில இந்திய பிரதிநிதிகள் சபை
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும். அதற்கு பெயர் அகில இந்திய பிரதிநிதிகள் சபை. அந்த கூட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்று கூடுவார்கள். அவர்கள் மார்ச் மாதம் மூன்று நாட்கள் ஒரு இடத்தில் கூடி பல முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
அதில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் பொதுவெளியில் வெளிப்படுத்தமாட்டார்கள். அந்த மூன்று நாட்கள் நடக்கும் கூட்டத்திற்கு எந்த பத்திரிக்கை மற்றும் செய்தி நிறுவனத்திற்கும் அனுமதி கிடையாது. அது ஒரு ரகசியக் கூட்டம்.
அந்த அகில இந்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் 1400-க்கும் அதிகமான பிரிநிதிகள் பங்கேற்பார்கள். இந்த கூட்டம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாக்பூரில் நடக்கும். வருடாந்திர கூட்டம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும். கடந்த 2020-ம் ஆண்டு நடக்க இருந்த பெங்களூரு கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி 7-ம் தேதி சமன்வேபைத் என்றழைக்கப்டும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அகமதாபாத்தில் நடத்தப்பட்டது. சங்பரிவாரத்தின் 30 அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 150 பொறுப்பாளர்கள் பங்கேற்றதாகக் கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் மோகன்பகவத், சுரேஷ் ஜோஷி, மற்றும் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தின் மைய விவாதம் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு அகில இந்திய பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நாக்பூரில் நடத்தப்பட்டது. அடுத்ததாக 2021 மார்ச் மாதம் இக்கூட்டம் நாக்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில்தான் ஜோஷிக்கு பிறகான புதிய சர்கார்யாவா தேர்வு செய்யப்படவுள்ளார். தேர்வு செய்யப்படும் வேட்பாளரும் அவரால் நியமிக்கப்டும் நிர்வாகிகளும் இந்து தேசியவாதத்தின் இரு முகங்களான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இடையிலான அதிகார சமநிலையையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்கும் மைய சக்தியாக விளங்கப்போகிறார்.
ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கும், பாஜக தலைமைக்கும் உள்ள உள்முரண்பாடுகளை மையமாக வைத்துப் பார்க்கும்போது இந்த தேர்தல் சங்பரிவார் குடும்பத்தின் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
சர்கார்யாவா நியமனமுறை
பதவியில் இருக்கும் சர்கார்யாவா தனது பதவிக் காலத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்து பிரதிநிதிகளுக்கு அறிவிப்பார். பின் தனது பதவிக்காலம் முடிவடையப்போகிறது, எனவே ஒரு புதிய சர்கார்யாவா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார். வழக்கமாக இந்த நிகழ்வு நாக்பூரில் நடைபெறும் மூன்று நாள் ஏ.பி.பி.எஸ் கூட்டத்தின் இரண்டாவது நாளில் முடிவு செய்யப்படும்.
மூத்த செயல்பாட்டாளர்கள் புதிய சர்கார்யாவாவுக்கு ஒரு பெயரை முன்மொழிவார்கள். அந்த பெயர் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே சர்கார்யாவா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார். யார் அடுத்தவர் என்பதை ஆர்.எஸ்.எஸ்-சின் தலைமை குழுவால் முன்கூட்டியே முடிவு செய்யப்படும்.
புதிய பொதுச்செயலாளருக்கான பிரதிநிதி ஏற்கனவே பதவியில் இருக்கும் மூன்று சா-சர்கார்யாவாக்களில் (துணை பொதுச்செயலாளர்கள்) ஒருவரை தேர்வு செய்வது இயல்பான நடைமுறை. தேர்வு செய்யப்பட்டவர் மூனறு ஆண்டுகள் பதவியில் இருப்பார். அவரே புதிய நிர்வாகிகளை நியமிப்பார். முக்கியமான நியமனம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் ஒரு சிறிய குழுவால் முடிவு செய்யப்படும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியப் பதவிகள் ‘ஷாகா அமைப்பினுள்’ செயல்படும் நிலைத்த உறுப்பினர்களால் நிரப்பப்படும். குறிப்பாக நாக்பூரை தளமாகக் கொண்ட முக்கியமான பதவிகளை நிரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மைய செயல்பாட்டில் உள்ள நம்பகமான உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும்.
பாஜக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அல்லது பல்வேறு கிளை அமைப்புகளில் உள்ளவர்களை உறுதியற்றவர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாரம்பரியவாதிகள் கருதுவது வழக்கம். ஆர்.எஸ்.எஸ் அல்லாத மற்ற கிளை அமைப்புகளைச் சார்ந்த நபர்கள் வெளிஆட்களால் செல்வாக்கு செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக பாரம்பரியவாதிகள் கருதுவது வழக்கம்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உள்முரண்பாடு
2014 முதல் பாஜக-வின் எழுச்சி ‘மூத்த’ சகோதரர் என்ற நிலையுடைய நாக்பூர் தலைமைத்துவத்தை ஓரளவு அரித்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. மேலும் பாஜக இப்போது தனக்கு சமநிலையில் உள்ளதாக கருதுகிறது. 2018 முதல் பாஜக தலைவரின் செய்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் தலைமை பின்பற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கருதுகிறது. அதற்கு பல உதாரணங்களும் உள்ளது. பாஜக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ் தலைமை பிரச்சாரம் செய்துவருகிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இடையில் கருத்தியல் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. புதிய சர்கார்யாவாவின் தேர்வு கருத்தியல் நிலையை பாதிக்காது. ஆனால் முக்கியமான கொள்கை சிக்கல்களில் சில கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. ஆர்.எஸ்.எஸ் இதுவரை அரசாங்கத்தை பகிரங்கமாக ஆதரித்தாலும், சில தலைவர்கள் சில முரண்பாடான பார்வையை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இது அடுத்த சர்கார்யாவாவின் ‘தேர்தலுக்கு’ பல சுற்று விவாதங்கள் தேவைப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறது.