விருதுநகர் விவசாயிகள்

விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?

பருவநிலை மாற்றத்தின் காரணமாக பருவம் தவறி அறுவடைக் காலத்தில் பெய்திருக்கும் பெருமழை தமிழக விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு அறுவடைப் பேரிடராக இந்த மழையானது விவசாயிகளை புரட்டிப் போட்டிருக்கிறது. 

இந்த அறுவடை பேரிடரில் விருதுநகர் மாவட்டத்தின் விவசாயிகளின் அவலக் குரலானது பெருமளவில் வெளியில் கேட்கப்படாத ஒன்றாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் வெங்காயம், சோளம், மக்காச்சோளம், சூரியகாந்தி, கம்பு மற்றும் பயறு வகைகளை பயிர் செய்யும் விவசாயிகள் பெருமளவில் இருக்கிறார்கள்.

கீழே சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய பயிர்கள்

விருதுநகர் மாவட்டம் என்பது பெரும்பாலும் கரிசல் நிலப் பகுதியாகவும், வானம் பார்த்த பூமியாகவும் இருப்பதால் மழையை நம்பி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் வருடத்தில் 6 மாத காலம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. குறிப்பாக பொங்கல் நேரமானது மிக முக்கியமான அறுவடை காலமாகும். அறுவடை கால நெருக்கத்தில் ஒரு மாத காலம் தொடர்ந்து பெய்த மழையால் கீழே சாய்ந்ததால் சோளம் உள்ளிட்ட பயிர்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. உளுந்து போன்ற பயிர்களுக்கும் இதே நிலைதான். சூரியகாந்தி பயிர்களும் கருகியுள்ளன.

கீழே சாய்ந்து கிடக்கும் சோளக் கதிர்கள்

இரட்டிப்பு இழப்பை சந்தித்திருக்கும் விருதுநகர் பந்தல்குடி விவசாயிகள்

ஏற்கனவே பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பெய்ததால், முதலில் விதைத்த பயிர்கள் சரியாக வளராது போயிருக்கின்றன. இதன் காரணமாக அவற்றை அழித்துவிட்டு மீண்டும் இரண்டாம் விதைப்பினை விவசாயிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இரண்டாம் விதைப்பில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், பெருமழை பெய்ததால் அந்த பயிர்களும் 100 சதவீதம் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக இரண்டு முறை விதைப்பும் வீணாகிப் போயுள்ளதால் 100 சதவீத சேதத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அறுவடை நேரத்தில் சேதமடைந்து முளைவிட்டிருக்கும் கதிர்கள்
சேதமடைந்த பயிர்கள்
கருகிய சூரியகாந்தி பயிர்கள்

வலிமையற்றதாக உணரப்படும் விவசாயிகளின் குரல்

விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள பந்தல்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் போராடி வருகிறார்கள். அப்பகுதியிலும் விவசாய சங்கங்கள் வலுவாக இல்லாததால் விவசாயிகளின் குரல் வலிமையற்றதாகவே உணரப்படுகிறது. மேலும் அறுவடைப் பேரிடரானது தமிழ்நாடு முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். 

கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்த போதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு நிவாரணம் குறித்த எந்த உத்தரவும் வரவில்லை என்ற பதிலையே தந்திருக்கிறார்கள். 

6 ஆயிரம் ஏக்கர்

அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் பந்தல்குடி பகுதியில் உடையநாதபுரம், காசிலிங்காபுரம், சேதுராஜபுரம், செட்டிபட்டி கொப்புசித்தம்பட்டி, ராமச்சந்திராபுரம், வேலாயுதாபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி மற்றும் மல்லி போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. 

பயிர்களின் சேதத்திற்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவராணம் வழங்கிட வலியுறுத்தி இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். பின்னர் வேளாண் துறை அலுவலர்களிடம் மனு அளித்தனர். 

விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்

நாங்கள் பந்தல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகின்றோம். இங்கு பெருவாரியாக உளுந்து, பாசி, சோளம், மக்காசசோளம், கம்பு, மல்லி, சூரியகாந்தி பயிரிட்டு வருகிறோம். ஆடி, ஆவணி பட்டத்தில் விதைத்த உளுந்து, பாசி, வெள்ளை சோளம் பருவமழை இரண்டு மாதம் பெய்யாது போனதால் உளுந்து, பாசியும் நீரின்றி கருகிப்போனது. வெள்ளை சோளம் மட்டும் இழைத்துக் கொண்டிருந்தது. 

பின்னாளில் துவங்கிய வடகிழக்கு பருவமழைக்கு சோளம் நன்றாக வளர்ந்தது. உளுந்து, பாசி விதைத்த காட்டை மீண்டும் அழித்து கம்பு, கொத்த மல்லி விதைததோம். நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் காலத்தில் தொடர் மழையால் பயிர்கள் அழுகியும் கதிரிலேயே முளைத்தும் விட்டது.  இதனால் பெருத்த இரட்டிப்பு சேதம் அடைந்து விட்டோம். எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதித்திருக்கிறது. மேலும் அறுவடை இல்லாது போனதால் வரும் மாதங்களில் வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 ஆகையால் விவசாயிகளின் இந்த பெருந்துயரத்தை கருத்தில் கொண்டு 100 சதவிகிதம் இழப்பீட்டுத் தொகையை போர்க்கால அடிப்படையில் அனைத்து பயிர்களுக்கும் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வேளாண் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு

பின்னர் உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து வேளாண் துறை அலுவலர்கள் பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் மதிப்பினை வருவாய் துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை கள அலுவலர்கள் மூலம் கூட்டாய்வு செய்து, கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவுறுத்தல்

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், வெம்பக் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *