பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜூன் மாதம் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து இரண்டு ட்வீட்களை பதிவு செய்திருந்தார். 

அந்த ட்வீட்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை ஜூலை 21 அன்று பதிவு செய்தது. அந்த வழக்கில் ட்விட்டர் நிறுவனமும் ஒரு பங்குதாரராக சேர்க்கப்பட்டது.

நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் பூஷனின் ட்வீட்கள் என்னென்ன?

ட்வீட் 1:

”கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகமானது, எமெர்ஜன்சி நடவடிக்கை இல்லாமலேயே எப்படி அழிக்கப்பட்டது என்று வரலாற்றியலாளர்கள் எதிர்காலத்தில் பார்க்கும் போது, இந்த அழிவினில் உச்ச நீதிமன்றம் மற்றும் 4 தலைமை நீதிபதிகளின் பங்கினையும் அவர்கள் குறிக்க வேண்டி வரும்” என்று ஒரு ட்வீட்டினை ஜூன் 26-ம் தேதி பகிர்ந்திருந்தார்.

பிரசாந்த் பூஷன் ட்வீட்
ட்வீட்2:

அதற்குப் பிறகு ஜூன் 29-ம் தேதி பதிவிட்ட ட்வீட்டில் தலைமை நீதிபதி SA பாப்டே அவர்கள் விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.

”நீதியைப் பெறுவதற்கான குடிமக்களின் உரிமைகளை மறுத்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தினை லாக்டவுன் மோடில் வைத்துவிட்டு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாக்பூரின் ராஜ்பவனில், பாஜக தலைவர் ஒருவரின் 50 லட்ச ரூபாய் மோட்டார்சைக்கிளை முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் இன்றி ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.

பிரசாந்த் பூஷன் ட்வீட்

பூஷனின் வாதங்கள்

ஆகஸ்ட் 3, 2020 அன்று பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் நீதிமன்ற அவமதிப்பு எனும் சக்தியினை, நீதிமன்றத்தின் பிழைகளுக்கு பொறுப்புகூறல் வேண்டும் என்று கோருபவர்களின் குரல்களை நசுக்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார். 

”பொதுநல நோக்கத்துடன் ஒரு குடிமகன், இந்த நாட்டின் எந்தவொரு நிறுவனத்தின் செயல்திறனைப் பற்றி மதிப்பீடு செய்வதை தடுப்பதோ அல்லது அந்த நிறுவனத்தைப் பற்றி கருத்துக்களைக் கொண்டிருப்பதையோ, கருத்துக்களை வெளிப்படுத்துவதையோ, கருத்துக்களை உருவாக்குவதையோ தடுப்பது நியாயமான கட்டுப்பாடு அல்ல என்றும், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதும் நியாயமானதல்ல” என்றும் அவர் மீது அளிக்கப்பட்ட அவமதிப்பு புகாருக்கு பிரசாந்த் பூஷன் பதில் தெரிவித்திருந்தார்.

நான்கு நீதிபதிகள் குறித்த தனது கருத்து நேர்மையான கருத்து (Bonafide Impression) என்றும், நீதிமன்றம் ஜனநாயகம் அழிவதை அனுமதித்து விட்டது என்பது தனது கருத்தாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். தன்னுடைய தனிப்பட்ட கருத்துகள் வெளிப்படையான சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும், உடன்பட முடியாததாகவோ, விரும்பத்தகாததாகவோ இருந்தாலும்கூட, அது நீதிமன்ற அவமதிப்பாக கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். 

தீர்ப்பு

இன்று (14-8-2020) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் செய்தது குற்றம் என்று நீதிபதிகள் அருண் மிஷ்ரா, பி.ஆர் கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுநலனை பாதுகாக்கும் பொருட்டு, நாட்டின் உயர்ந்த நீதித்துறையின் மீதான இத்தகைய தாக்குதல்கள் உறுதியாகக் கையாளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (As such, in order to protect the larger public interest, such attempts of attack on the highest judiciary of the country should be dealt with firm).

முழுமையான தீர்ப்பினை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-379893.pdf

ஆகஸ்ட் 20-ம் தேதி தண்டனையை அறிவிக்க உள்ள நிலையில் 6 மாத கால சிறை தண்டனை வரையிலும், 2000 ரூபாய் வரையிலான அபராதமும் பிரசாந்த் பூஷன் மீது விதிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் ஒரு அவமதிப்பு வழக்கு

மேலும் 2009-ம் ஆண்டு பிரசாந்த் பூஷன் தெகல்கா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அவர் மீது மேலும் ஒரு அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் மீதான விசாரணையிலும் பிரசாந்த் பூஷனின் வாதத்தினை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பினை அருண் மிஷ்ரா தலைமையிலான பெஞ்ச் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அருண்ஷோரி, பத்திரிக்கையாளர் என்.ராம் ஆகியோர் பிரசாந்த் பூஷனுடன் இணைந்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். 1971-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2(C)(i) -னை நீக்க வலியுறுத்தி அந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அவதிப்பு சட்டத்தின் இப்பிரிவு கருத்து சுதந்திரத்தினை அனுமதிக்கும் அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவான 19(1)(a)விற்கு எதிரானதாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். நீதிமன்றத்தினை விமர்சிப்பது குற்றச் செயலாக பார்க்கப்படக் கூடாது என்றும் தெரிவித்திருந்தனர். அந்த வழக்கினையும் மூவரும் நேற்று திரும்பப் பெற்றுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *