நா.முத்துக்குமார்

ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்

கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

“இறந்து போனதை 

அறிந்த பின் தான் 

இறக்க வேண்டும் 

நான்” 

என்று எழுதியவன் கவிஞன் நா.முத்துக்குமார். அந்த கவிஞனுக்கு தமிழ் இருக்கும் வரை இறப்பு இல்லை.

காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.

கவிஞர் அறிவுமதியின் அபிபுல்லா சாலை அலுவலத்தில் இருந்து வந்த படைப்பாளிகளில் ஒருவர். அலங்கார சொற்கள் இல்லாமல் ஆடம்பர வர்ணனைகள் இல்லாது எளிய வார்த்தைகளில் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் சொந்தகாரர் முத்துக்குமார். 

பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைகள், நியூட்டனின் மூன்றாம் விதி, என்னை சந்திக்க கனவில் வராதே உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில்  பட்டாம்பூச்சி விற்பவன் இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும்

குழந்தைகள் நிறைந்த வீடு என்கிற ஹைக்கூ தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். சில்க் சிட்டி என்ற நாவல், பால காண்டம், கிராமம்-நகரம்-மாநகரம், வேடிக்கை பார்ப்பவன் கட்டுரைகள், அணிலாடும் முன்றில் உறவுகள் என்ற ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர் ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும். பட்டாம்பூச்சி என்ற பதிப்பகமும் நடத்தி வந்தார்.

2000-ம் ஆண்டுக்கு பின்பான காலத்தில் தமிழ் திரையிசை உலகில் முடிசூடா மன்னனாக இருந்தவர் முத்துக்குமார் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால் பாடல் ஆசிரியராக அறியப்படும் முன்னரே இவரது கவிதைகள் இலக்கிய உலகில் கவனம் பெற்றன. 1989-ம் ஆண்டு இவரது முதல் கவிதையானது ’கவிதை உறவு’ இதழில் பிரசுரமானது. அது முதலே தினமணி கதிர், வான்நிலா, திணை கணையாழி, உங்கள் ஜூனியர், புதிய பார்வை போன்ற இதழ்களில் வெளிவரத் துவங்கியது.

1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணையாழி இதழில் வெளியாகி சுஜாதா போன்றவர்களின் பாரட்டையையும், கவனத்தையும் பெற்ற தூர் கவிதை.

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

என்ற இந்த கவிதை பட்டாம் பூச்சி விற்பவன் தொகுப்பில்  உள்ளது 

இதோ அதோ
என்று இழுத்துக் கொண்டிராமல்
பக்கவாதம் வந்து 
படுக்கையில் கழியாமல்
எல்லரோடும் பேசி சிரித்து
தூங்கிய இரவில் 
செத்துப் போனார் தாத்தா
ஒப்பாரியின்னூடே 
மூக்கை சிந்தி சுவரில் தடவி
பாட்டி சொன்னாள் 
நல்ல சாவு.  

என்ற தலைப்பில்லாத கவிதை அவரது பாடு பொருள்கள் நம் வாழ்வில் இருந்தே என்பதை உணர்த்தும்.

ஐந்தாம் கட்டளை என்ற கவிதையில் முதல் கட்டளையாக  

ஆறேழு வண்டுகளுடன்
அந்தியில் இறக்கிய 
தென்னங்கள்ளை 
நுரைக்க நுரைக்க குடித்துவிட்டு
வயற்காட்டு புழுதியில் 
விழுந்து கிடக்கும்
அப்பன்களை எழுப்பும் 
நகராட்சிப் பள்ளியில்
நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு
சத்துணவு சாப்பாட்டின் மூலம் 
தோள் வலிமை பெருகுவதாக

என எழுதியவர் முத்துக்குமார்

அவரது ஹைகூக்கள் சில 

அடித்து அடித்து 
சோர்ந்து போனார்கள்
மார்பு வேகாத பிணத்தை 

– கணையாழி ஏப்ரல் 93

அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன

”மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி

உறவுகளின் பெருமையை வலிமையை உணர்த்தும் விதமாக ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதி பின்னர் அது புத்தகமாகவும் வந்தது. அதில் ஒரு பாகத்தில்,

”பெரியம்மா எனக்காக பார்த்துப் பார்த்து செய்யும். மீன் வாங்கும், கறி வாங்கும், கிடைத்து இருந்தால் மான்கூட வாங்கி இருக்கும். விடுமுறை முடியத் தொடங்கும் கடைசி வாரத்தில், எனக்காக துணி எடுத்து, அளவு கொடுத்து வரும்.

நுனியில் மஞ்சள்வைத்து அணியவைத்து அழகு பார்க்கும். ஏனோ அந்த தருணத்தில் அது அழத் தொடங்கிவிடும். அம்மா இல்லாத என்னை நினைத்து என்பது அப்போது புரியாத வயசு. தங்கை பிள்ளையானாலும் தன் பிள்ளைதானே!

ஆயினும் அப்படியும் சொல்லிவிட முடியாது. விடுமுறை நாள் சம்பவம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. பெரியம்மா மகனான தம்பி, பந்து எறிந்து தொலைக்காட்சியை உடைத்துவிட்டான். பெரியம்மா ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்கத் துரத்தியது. பிஞ்சு வயதின் வேகத்தில் நான் ஓடிச் சென்று அவனைப் பிடித்தபடி, ”பெரியம்மா! இங்க வாங்க மாட்டிக்கிட்டான்” என்றேன்.

மூச்சு வாங்க ஓடி வந்த பெரியம்மா, கட்டையைக் கீழே போட்டுவிட்டு, ”ஏன்டா, என் புள்ள அடி வாங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?” என்றது.

அந்தக் கணம் என் கால்களுக்குக் கீழே தரை நான்கு அடி பிளந்தது. உள் மனசில் இருந்து ஒரு குரல் சொன்னது ‘உறவு வேறு, உதிரம் வேறு!’.. ”

என்று ஒரு தாயில்லா பிள்ளையின் வலியை வார்த்தையாக்கியிருப்பார்.

தமிழ் கவிதைகள் இரண்டு வகை. தமிழ்ப் புலமையையும், அறிவையும் காட்டும் கவிதைகள் ஒருவகை. அதை Intellectual Poetry என்பார்கள்.  எளிமையான வரிகள், உணர்வுப் பூர்வமான  வார்த்தைகளால் எழுதுவது இன்னொரு வகை. அதை Emotional Poetry என்பார்கள். எனக்கு எப்போதும் எமோஷனல் போயட்ரி தான் பிடிக்கும். நான் அந்த வகை பாடல்களையே அதிகம் எழுத விரும்புகிறேன் என முத்துக்குமார் கூறுவார்.

தமிழ் திரையிசை உலகில் கவிஞர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சில அளவுகோல் இருந்தாதாகவும், கவிஞர்கள்னா மதுரை, காரைக்குடி பக்கம் இருந்துதான் வருவாங்க, நீங்க காஞ்சிபுரமா என்று தயாரிப்பாளர்களே கேட்ட காலமுண்டு என்று எழுதியிருப்பார். அப்படி இருந்த தமிழ்ச் சூழலில் தனது உணர்வுப்பூர்வான மொழியால் எல்லோரையும் கட்டிப்போட்ட கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுநாள் இன்று .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *