சென்னையில் பல பகுதிகளில் இரண்டாவது நாளாக ஸ்விக்கி ஊழியர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக் குறைப்பினை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று பூந்தமல்லி பகுதியிலும், இன்று ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஸ்விக்கி ஊழியர்கள் இன்று ராயப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஸ்விக்கி நிறுவனத்தின் சார்பில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்களின் உழைப்பின் மூலமாக வருமானம் ஈட்டும் ஸ்விக்கி நிறுவனம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், ஊதியத்தையும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் மட்டும் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலோனார் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள். வேலையின்மை காரணமாகவும், குடும்ப வறுமை சூழல் காரணமாகவும் உணவு டெலிவரி செய்யும் வேலையினை செய்து வருகிறார்கள். ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆரம்ப காலங்களில், டெலிவரி செய்யும் தங்களின் உழைப்பை பயன்படுத்தி வளர்ந்து விட்டு,இன்று ஸ்விக்கி நிறுவனமானது உழைப்பினை உதாசீனம் செய்வதாகவும், தங்களுக்கு ஊதியத்தைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் தங்களின் உரிமைக்காக நிறுவனத்தின் மேலாளர்களிடம் பேசும்போது, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த பணிக்கு வர தயாராக இருப்பதாகவும்,. அதனால் விருப்பம் இருந்தால் வேலை செய்; இல்லையென்றால் போய்விடு என்று மோசமாக நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட காத்திருப்பு கட்டணம் (Waiting Charge), ஊக்கத் தொகை(Incentive) போன்றவையும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை தங்களுக்கு வழங்கப்பட்ட டார்கெட்டினை முடிப்பதற்காக வேலை செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காலை 6 மணிக்கு பணிக்கு வந்து இரவு 10 மணி வரை வெறும் டீ, காபியை குடித்துக் கொண்டு ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். டார்கெட் டார்கெட் என்று ஓய்வின்றி ஓடி பல இளைஞர்கள் விபத்துகளில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு தாங்கள் 400 ரூபாய் அளவுக்கு வண்டி ஓட்டி சம்பாதித்தால், அதில் 200 ரூபாய் வரை பெட்ரோலுக்கு போய்விடுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்விக்கியில் மாதம் 45,000 வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, இளைஞர்களை உள்ளே இழுத்த பின்னர், ஒரு அடிமாட்டு ஊதியத்திற்கு தாங்கள் வேலை வாங்கப்படுவதாகவும், இரண்டு மூன்று ஆண்டுகள் உழைத்த பின்னரும் தங்களுக்கு எந்த உரிமையும் அந்த நிறுவனத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையபடி தாங்கள் பெற்ற ஊதியத்தினை மீண்டும் வழங்கிடவும், ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் அளித்திடவும் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டால் என்னவாகும் என்பதை, தொழிலாளர் சட்டங்களை பின்பற்றாத ஸ்விக்கி நிறுவனத்தின் நிலை நமக்கு வெளிப்படுத்துகிறது. தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை பலப்படுத்தாத வரையில் இது போன்ற பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு இளைஞர்கள் உட்படுவதை தவிர்க்க முடியாது.
ஸ்விக்கி நிறுவனம் அதன் ஊழியர்களை முறையான பணிப்பாதுகாப்புடனும், ஊதிய உத்தரவாதத்துடனும் நடத்துவதை அரசும், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறையும் உறுதி செய்திட வேண்டும்.
ஸ்விக்கி ஊழியர்களின் போராட்டம் காணொளி (நன்றி: நக்கீரன்)