அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்

1)தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தனியாருக்கு விடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்- வேல்முருகன்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கைக்கு,  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  சார்பில் கடும் கண்டனம் தெவிக்கப்பட்டிருந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படமாட்டாது என்று  அத்துறைக்கான அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், மின்சார பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஓப்பந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, தனியார் மயமாக்கவில்லை என்றும் தமிழக மக்களை முட்டாளாக்குகிறார் அமைச்சர் தங்கமணி.

உண்மையில் வாரியத்தின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு  என அனைத்து பிரிவுகளிலும் கட்டம் கட்டமாக, தனியார்மயத்தை அதிமுக அரசு புகுத்தி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களை பணிநியமனம் செய்வதை விட்டு விட்டு, தனியார் மயத்தின் மூலமாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதாக கூறுவது, மண்ணின் மக்களின் காதில் பூ சுற்றுவது போன்றது.

தமிழகத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மண்ணின் மக்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தனியாருக்கு விடுவது, மண்ணின் மக்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுவது போன்றது.

அதுமட்டுமின்றி, மின்வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அந்த இடங்களில் தமிழகத்தில் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை பணியமர்த்த முடியாதா? .

ஏற்கெனவே மின்வாரிய பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தவர்களை நியமித்ததால், தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்போது பராமரிப்புப் பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கும்?.

மின்வாரியத்திலேயே உள்ள ஒப்பந்ததொழிலாளர்களை பணிநிரந்தரப்படுத்தலாம். மீதமுள்ள வேலைகளில் புதிய ஆட்களை நியமிக்கலாம்.

இதையெல்லாம்செய்யாமல் அதிமுக அரசு மின் வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களை அவுட் சோர்சிங் என்ற பெயரில்  தனியாரிடம் ஒப்படைத்துள்ளது நியாயமற்ற செயல்.

இதனால் மின் வாரியத்தில் வயர்மேன், ஹெல்பர் போன்ற வேலைகளுக்கு செல்லலாம் என காத்திருக்கும் ஐடிஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும், அதிமுக அரசு மண் அள்ளி போட்டுள்ளது. அதிமுக அரசின் நடவடிக்கை, தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா?.  இப்படியே போனால் மின்வாரியத்தை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களோ? என்ற அச்சம் தமிழக மக்களுக்கு எழுந்திருக்கின்றன.

எனவே, தனியாரை ஊக்குவிக்கும் போக்கை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மண்ணின் மக்களை கொண்டும்,  மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டும்,  இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம்  முன்பு, 24.12.2020 அன்று  காலை 10மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எனேவ  மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

2)அறிவியல் மாநாட்டினைஅறிவியலுக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து நடத்துவதா?மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி.

மாண்புமிகு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு,

பொருள்: இந்திய சரவ்தேச அறிவியல் திருவிழாவும், அதில் அறிவியல் முனைப்பற்ற ஓர் நிறுவனத்தை அரசு ஈடுபடுத்துவதும்

தங்களின் 7-12-2020 தேதியிட்ட கடிதம் தொடர்பாக இதை எழுதுகிறேன்.

அக்கடிதத்தில் 2020 டிசம்பர்  22 முதல் 25 வரை மெய்நிகர் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு 5 ஆசிரியர்களையும், 50 மாணவர்களையும் பரிந்துரைக்குமாறு வேண்டப்பட்டுள்ளேன்.

இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவது நல்ல முன்னெடுப்பு. இருப்பினும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சம்பந்தமான விவரங்களை ஆழ்ந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளில் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் கழகம் (CSIR), அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றோடு விஞ்ஞான பாரதி (VIBHA) என்ற அரசு அல்லாத ஓர் நிறுவனமும் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திருவிழாவின் முதன்மையான நோக்கமாக, சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் அறிவியல் முனைப்பை வளர்ப்பது, இளம் உள்ளங்களில் அறிவியல் ஞானம் மற்றும் கருத்துக்களை பகிர்வது, அறிவியல் – தொழில் நுட்பம் – கண்டுபிடிப்புகள் குறித்த அண்மைக் கால வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அதற்கான இந்தியப் பங்களிப்புகளைக் காட்சிப்படுத்துவது உள்ளிட்டவற்றை “சுயசார்பு இந்தியா மற்றும் உலக நலன்” என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு முன்னிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவியல் திருவிழாவின் அறிவிக்கப்பட்ட லட்சியத்திற்கு முற்றிலும் எதிராக இயங்குகிற ஓர் அரசு சாரா அமைப்பான விஞ்ஞான பாரதியை இதில் இணைத்திருப்பது வேதனைக்குரியது ஆகும். அந்த அமைப்பின்  செயல்பாடுகள் அறிவியல் முனைப்புடன் இருக்கிறதென்ற நம்பிக்கையை தருவதாக இல்லை. மதச் சார்பின்மை விழுமியங்களைக் கொண்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை. மக்களின் மத உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்கிற அமைப்பாகவும் இது இருக்கிறது என்பதே பரவலான கருத்து. அறிவியல் உலகளாவியது. அது சீராக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மக்களைப் பிரிக்கிற சிந்தனைகளுக்கு  இடம் தராமல், சமூகத்தின் பொது நலனுக்கு அதைப் பயன்பட செய்ய வேண்டும். 

மும்பையில் 2015 இல் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் விஞ்ஞான பாரதி அமைப்பின் தலைவர் விஜய் பாட்கர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்பது அப்போதைய செய்தி. அவரே ஒரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட போது, சர்ச்சைகள் எழுந்த காரணத்தால் இந்தியக் குடியரசுத் தலைவரால் அம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது என்பதும் ஊடகங்கள் தந்த இன்னொரு செய்தி.

மேற்கூறப்பட்ட மும்பை மாநாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வுத் தாள் சமர்ப்பிக்கப்பட்டதையும் நினைவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆகாய விமானங்கள் ஆதி இந்தியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதென்றும், அத்தகைய தொழில் நுட்பத்தை வளர்த்தெடுத்து பிரதமரின் “மேக் இன் இந்தியா” முன்முயற்சி யின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குமாறும் அந்த ஆய்வுத் தாள் கூறியிருந்தது. இது ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது போன்ற போலி அறிவியல் கருத்துக் களையும் மற்றும் இது போன்ற கருத்துக்களை கொண்டுள்ள நபர்களால் தலைமை தாங்கக்கூடிய  அமைப்புகளையும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது.

“நாக்பூர்” வேர்களைக் கொண்ட இந்த

இந்த அரசு சாரா அமைப்பை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஊடுருவ அனுமதிப்பதன் குறுகிய நோக்கம், இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்கே; இது அறிவியல் திருவிழா என்ற திரையின் பின்னால் செய்யப்படுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சில திட்டங்கள் பற்றி குறிப்பிட விழைகிறேன். தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு போன்றவை அவை. இந்தியா முழுமையும் உள்ள வானவில்லை ஒத்த அமைப்புகளை உள்ளடக்கி இவை நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவது  காலத்தால் சோதிக்கப்பட்ட மேற்கண்ட முன் முயற்சிகளை சிதைக்கிற உள் நோக்கம் கொண்டவை என்று நான் அழுத்தமாக கருதுகிறேன்.

இந்தியாவில் இரண்டு முக்கியமான நிறுவனங்கள் சமூகத்தில் அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில், வளர்ப்பதில் நற்பெயரை பெற்றுள்ளன. ஒன்று, தேசிய அறிவியல் தொழில் நுட்ப தொடர்பு மையம் (NCSTC). இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட வானவில் அமைப்புகளைக் கொண்ட வலைப் பின்னல் ஆகும். இந்தியா முழுவதும் விரிந்துள்ள பின்னல் எல்லா மாநிலங்களிலும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வருகிறது. இரண்டாவது, விஞ்ஞான பிரச்சார் அமைப்பு. இது தனித்து இயங்கும் பல நிபுணர்கள், அமைப்புகளை இணைத்து இயங்கும் சுயேச்சையான நிறுவனம் ஆகும். இத்தகைய நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இவற்றை ஒதுக்குவது நீண்ட கால விளைவுகளை உருவாக்கும். இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ள வலுவான அடித்தளத்தை நொறுக்கி விடும்.

நமது அரசியல் சாசனம், அறிவியல் முனைப்பை இந்தியச் சமூகத்தில் உருவாக்க வேண்டுமென்று நமக்கு கட்டளை விடுத்துள்ளது. விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவது இக் கட்டளையின் சீவனை மறுதலிப்பது ஆகும்.

நம் தேசத்தின் எதிர் காலத் தலைமுறை அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டுமென்று உள்மார விழைகிறேன். அத்தகைய உண்மையான உணர்வோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு  துணை நிற்க எப்போதும் தயாராக இருக்கிறேன்.

எனது கருத்துக்களை உரிய முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை இது போன்ற அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் அரசு ஈடுபடுத்துவதை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். 

3)தஞ்சை செல்வோம்!பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

பன்னாட்டு நிறுவனங்களின் வணிகக் கொள்ளைக்கு வழிவகுத்திடும் வேளாண் சட்டங்களை எதிர்த்திட..

தில்லியில் நடக்கும் உழவர் போராட்டங்களை ஆதரித்திட..தமிழ்நாட்டு உழவர்களை ஒரு முனையில் ஒருங்கிணைத்திட..தஞ்சையில் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி நடத்தும் பேரணிக்குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துப் பங்கேற்கிறது..

திசம்பர் 29 தஞ்சையில் குவிவோம்..

வேளாண்மைக்கு எதிரான கார்ப்பரேட் – காவி பயங்கரவாத சட்டங்களைத் திரும்பப்பெறும்வரை.மின்சாரம் 2020  சட்ட முன்வரைவைத் திரும்பப் பெறும்வரை.. வலியுறுத்தியும்  போராடுவோம்..தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அழைக்கிறது..பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

4)உயர்மின் கோபுரங்கள் திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர் உறவுகளுக்கு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் எழுதும் நமது உண்மை நிலை குறித்த மடல்

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், தமிழக அரசின் வருவாய்த் துறையும் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ உயர்மின்கோபுரம் திட்டத்தையும், தந்தி சட்டத்தையும் எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ம வருவாய்த்துறையும், தொடரமைப்பு நிறுவனமும் இணைந்து உழவர்களின் ஆட்சேபனைகளை மீறி வேளாண் நிலங்களுக்குள் அளக்கு முயற்சிப்பதற்க்கும், திட்டப்பணிகளை செய்து வருகிறது.

இன்னொருபுறம் ஏற்கனவே 14 திட்டங்களால் பாதிக்கப்பட்ட 13 மாவட்ட உழவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 கோடி ரூபாய் என இழப்பீட்டை சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி அவர்கள் அறிவிப்பு செய்துவிட்டு தற்போது 50 ஆயிரமும் ஒரு லட்சமும் கொடுத்து விவசாயிகளை தமிழக அரசு மிகக் கடுமையாக வஞ்சித்து வருகிறது.

நிலம் மற்றும் பயிர்கள் மரங்களுக்கான இழப்பீடு கொடுப்பதில் 2013ஆம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி சோலேசியம் என்று அழைக்கக்கூடிய 100 சதவீத ஆதாரத் தொகை தராமல் திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது

திட்டப் பாதைக்குள் மின்காந்த அலைகளால் மிகக்கடுமையான பாதிக்கப்படும் உழவர்களுக்கு கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், வீடுகளுக்கு இழப்பீடு தராமல் துரோகம் இழைத்து வருகிறது.

தென்னை மரம் உள்ளிட்ட மரங்களுக்கு 50% இழப்பீடு குறைவாகக் கொடுத்து வருகிறது, மற்ற நிலம் எடுப்பு சட்டங்களில் தென்னை மரத்திற்கு ரூபாய் 72 ஆயிரம் கொடுத்து வருகிறது, ஆனால் உயர்மின் கோபுரம் திட்டத்தால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ரூபாய் 36 ஆயிரம் மட்டுமே கொடுப்பது தமிழக அரசுக்கு நியாயமாக தெரிகிறதா??

 எண்ணெய்/ எரி காற்று குழாய் திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயர்மின் கோபுரம் திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களைவிட நிலம், பயிர்கள், மரங்களுக்கு 10 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்கி அரசாணை எண் 54 வெளியிட்டு அதை உயர் மின் கோபுரம் திட்டங்களுக்கும் கொடுக்கச் சொன்னால் போராடும் விவசாயிகளை ஏளனம் செய்து வருகிறது.

எனது அன்பிற்குரிய உழவர் உறவுகளே, நம்மீது திணிக்கப்பட்ட இந்த போராட்டத்தை வென்றெடுப்பது தவிர நமக்கு வேறு வழியில்லை, நான்காண்டுகளாக தொடர்ச்சியாக அறவழியில் போராடி சில முன்னேற்றங்களை நம் கண்டிருந்தாலும், கோரிக்கைகளை வெல்வதற்கு மீண்டும் போராட வேண்டிய கட்டாய சூழ்நிலையை தமிழக அரசுதான் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டு நீதி கேட்டுப் போராடும் உழவர் பெருமக்களை உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று குறை சொன்ன தமிழக அரசும், மின்சார துறை அமைச்சரும் தற்போது போராட்டங்கள் சற்று அமைதியாக இருந்தபோது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  இழப்பீடு வழங்காமலேயே  காவல்துறை, வருவாய்த்துறை வைத்து பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அதிகாரிகளும் விவசாயிகளை வயிற்றில் அடித்து உழவர்கள் மீதான விரோதத்தையும், குரோதத்தையும், வெறியையும் வெளிப் படுத்தி கொடுமையிழைத்து வருகிறார்கள், இதை வன்கொடுமையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது, ஏன் என்று கேள்வி கேட்டால் இது உழவன்மகனின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.

நமது கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் அனைவரும், ஒவ்வொருவரும், ஒருங்கிணைப்பாளர்களாக இணைந்து கோரிக்கைகளை வெல்லும் வரையில் தொடர்ந்து தொடர் போராட்ட பாதையில் பயணித்து அறவழியில் புரட்சிக்கு கூட்டியக்கத்தோடு தயாராக இருங்கள்

முன்பு 13 மாவட்டங்கள், தற்போது 17 மாவட்டங்களாக நமது கூட்டு இயக்கத்தின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும், உழவர்களையும் ஒருங்கிணைத்து மிக மிக விரைவில் கூட்டியக்கம் போராட்ட செய்தியோடு உங்களை சந்திக்கும்

இப்படிக்கு

வழக்கறிஞர் ஈசன்

ஒருங்கிணைப்பாளர் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *