மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

2019-ம் ஆண்டிற்கான மனித மேம்பாடு குறியீட்டில் (Human Developement Index) இந்தியா 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது. 


கடந்த செவ்வாய் கிழமையன்று ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மனித வளர்ச்சி குறியீடு 2020 ஆய்வறிக்கை(UNDP- United Nations Development Index) வெளிவந்தது. இதில் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 189 நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்திலும், இதனைத் தொடர்ந்து அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களையும் பிடித்தன.


பின்தங்கிய இந்தியா


மனித மேம்பாடு குறியீடு என்பது ஒரு நாட்டின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை குறிக்கும் அளவீடு ஆகும்.


இந்தியா மிக மோசமாக பின்னுக்கு தள்ளப்பட்டு 131வது இடத்தை பிடித்து இருப்பதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை (2018-ம் ஆண்டு) 130-வது இடத்தை இந்தியா பிடித்து இருந்தது. இந்த ஆண்டு 0.645 புள்ளிகளை பெற்று மேலும் ஒரு படி குறைந்து 131-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் வெளிவந்த வறுமை குறித்த (multidimensional poverty index) கணக்கெடுப்பைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இருக்கும் மக்கள்தொகையில் 27.9% (சுமார் 377,492 மக்கள் தொகை) வறுமை குறித்த (multidimensional poverty index) பட்டியலில் வருவதாகவும், மேலும் கூடுதலாக 19.3% (260,596 ஆயிரம் மக்கள்தொகை) விளிம்புநிலை மக்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது ” இதை ஐ.நா- வின் தற்போதைய அறிக்கையிலும் தெரிவிக்கபட்டுள்ளது. 


பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பிற ஆசிய நாடுகள்


ஆசியா அளவில் ஆய்வு பட்டியலில் இந்தியாவை விட மிக சிறப்பான புள்ளிகளை பெற்று பல நாடுகள் முன்னணியில் உள்ளனர். குறிப்பாக சிங்கப்பூர் 11வது இடத்தையும், சவூதி அரேபியா 40வது இடத்தையும் பிடித்து “மிக உயர்ந்த மனித மேம்பாடு” பெற்ற நாடுகளாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 இடங்கள் முன் நகர்ந்து சீனா 85-வது இடத்தை பிடித்துள்ளது. தாய்லாந்து 79-வது இடத்தையும், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இருநாடுகளும் இணைந்து 107-வது இடத்தையும் மற்றும் வியட்நாம் 117வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான் (129), பங்களாதேஷ் (133), நேபாளம் (142), பாகிஸ்தான் (154) ஆகிய நாடுகளை “நடுத்தர மனித வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக” பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.


பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யா (52), பிரேசில் (84), சீனா (85) ஆகியவை இந்தியாவை விட முன்னணிலையிலே உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.


வங்கதேசத்தவர்களின் ஆயுட்காலத்தை விட குறைவான இந்தியர்களின் ஆயுட்காலம்


ஒரு குழந்தை பிறக்கும் போது வெவ்வேறு நாடுகளில் சராசரியான ஆயுட்காலம் என்பது வெவ்வேறாக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களின் ஆயுட்காலம் 69.7 ஆண்டுகளாகவும், வங்காளதேசத்தின் ஆயுட்காலம் 72.6 ஆண்டுகளாகவும், பாகிஸ்தானுக்கு 67.3 ஆண்டுகளாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“கம்போடியா, இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *