கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
கொற்கையை பாண்டிய மன்னர்களான விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியன், வெற்றிவேல் செழியன் ஆகிய மன்னர்கள் ஆண்டது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.

கொற்கையை ஆட்சி புரிந்த மன்னர்கள் பற்றி சங்க இலக்கியங்கள்
விறற்போர்ப் பாண்டியன் பற்றி குறிப்பிடும் அகநானூறு பாடல்,
“வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து”
– (அகம். 201:3-5)
என்று குறிப்பிட்டுள்ளது.
“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன”
– (அகம். 27:8-9)
என்று மறப்போர் பாண்டியனின் சிறப்பினைத் தெரிவிக்கிறது அகநானூறு.
மதுரையில் ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன் பொற்கொல்லன் ஒருவரின் தவறான குற்றச்சாட்டை நம்பி வழங்கிய தீர்ப்பு கோவலனின் உயிரை பறித்தது. தவறான தீர்ப்பு வழங்கியதை எண்ணி நெடுஞ்செழியனும் அவரது மனைவியும் உயிரை விடுகின்றனர். இதில் ஆவேசம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்து சாம்பலாக்குகின்றாள்.
இச்சம்பவம் நிகழும்போது கொற்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த இளவரசன் வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர்கள் மீது கோபம் கொண்டு கொற்கையில் வசித்த ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொன்றான் என்கிறது சிலப்பதிகாரம்.
“அன்று தொட்டு பாண்டியனாடு மழை வறங்
கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயும் குருவும்
தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய
நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.”
இப்படி பாண்டிய மன்னர்கள் கொற்கையை ஆட்சி புரிந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.
சங்க இலக்கியங்களில் கொற்கையின் சிறப்புகள்
கொற்கையின் சிறப்புகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
”அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்”
– (ஐங்குறுநூறு 185; 1 – 2, அம்மூவனார்)
என்று அல்லிப் பூக்கள் தள்ளாடி அசையும் கொற்கைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்தைப்போல, ஒளிரும் பற்களையும் சிவந்த வாயினையும் உடைய இளம்பெண் என்று ஐங்குறுநூறு, கொற்கையின் பெண்கள் வர்ணிக்கப்படுவதை குறிப்பிடுகிறது.
”புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து”
– (அகநானூறு 201; 4 – 5, மாமூலனார்)
மன்னனின் பெருமையை கூறும் விதமாக, பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்து பல வெற்றிகளைப் பெற்றவன் பாண்டிய மன்னன். அவன் ஆளும் கொற்கைத் துறைமுகத்தில் ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது என்ற பெருமிதத்தை தெரிவிக்கிறது அகநானூறு.
”இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை”
– (அகநானூறு 130; 9 – 11, வெண்கண்ணனார்)
கடல் அலைகள் கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. இப்படி கொற்கை கடற்கரையில் சிதறிக் கிடக்கும் முத்துக்களால், செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் முத்துக்கள் மாட்டிக் கொள்கிறது. அந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம் கொற்கை துறைமுகத்தில்.
கொற்கை துறைமுகம் குறித்த அயல்நாட்டு பயணிகளின் குறிப்புகள்
சங்க இலக்கியக்கியங்கள் மட்டுமல்ல. வெளிநாட்டுப் பயணிகளும் பாண்டியர்களைப் பற்றியும், கொற்கை குறித்தும் பதிவு செய்துள்ளனர்.
எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற ஆவணம் பண்டைய ரோமானியர்ளின் கடல் சார்ந்த வர்த்தகத்தின் மிக முக்கிய ஆவணமாக விளங்கியது. இதில் பாண்டிய மன்னனைப் பற்றியும், கொற்கை பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
அந்த ஆவணத்தின் 59-ம் அத்தியாயத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சி உட்பட்ட குமரியானது கொற்கை வரை நீண்டு உள்ளது என்றும், இங்கு முத்துக்குளிப்போர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் பெரிப்ளூஸ் கொற்கையை கொல்சி‘ (Colchi) என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் பாண்டியோன் என்ற ஓரு அரசனிடம் இருந்து அகஸ்தஸ் சீசரைக் காண்பதற்கு தூதுவன் ஒருவன் வந்தான் என்றும், பரிசுப் பொருட்களை வழங்கியதாகவும் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிடுகிறார். அந்த தூதுவன் வழங்கிய பரிசுப் பொருள் கொற்கையின் முத்துதான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முத்துகள் மீது தீவிர ஆசை கொண்ட ரோமப் பேரரசி கிளியோபட்ரா, கொற்கை முத்துகளை மிகவும் விரும்பி அணிந்தாள் என்ற செய்தியும் உண்டு. அந்த நாட்டு பெண்களும் முத்துகளையும் மணிகளையும் வாங்கி ரோமானியக் கருவூலத்தைக் காலிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்று ரோமானிய செனட்டில் தாலமி பேசியதாகவும், கொற்கை முத்தைப் பெரிதும் விரும்பி வாங்கியதால் ரோமானியப் பொருளாதாரமே நலிவுற்றதாக மற்றொரு ரோம நாட்டு மன்னன் திபேரிசு செனட்டில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் வலிமையான குதிரைப்படையைக் கொண்டிருந்தனர். அரேபியாவில் இருந்து பாய் மரக் கப்பலில் வந்த குதிரைகள் கொற்கை துறைமுகத்தில் வந்து இறங்கியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு, கொற்கை துறைமுகத்தின் வணிகச் சிறப்பையும், முத்து குறித்தும் தாலமி, பெரிப்ள்ஸ், பிளினி போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்பிலும், சங்க இலக்கியங்கள், கோயில் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலும், பழங்கால நாணயங்களிலும் அறிய முடிகிறது.
கொற்கையின் அகழாய்வு
மார்க்கபோலோ மற்றும் கிரேக்கர்களின் பயணக் குறிப்புகளிலிருந்து தான் கால்டுவெல் கொற்கையில் 1876-ம் ஆண்டில் அகழாய்வு செய்து 1877-ம் ஆண்டு ஆய்வறிக்கையை வெளியிடுகிறார். இதில் முக்கியமாக 11 அடி உயரமுள்ள தாழி மற்றும் மனித எலும்புகள் கிடைத்தாக கால்டுவெல் தெரிவிக்கிறார்.
இதன் பின்பு தமிழக தொல்லியல் துறை 1968-69 ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்தது. இந்த அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஆறு வரிசையில் இருக்கும் ஒன்பது அடுக்குடன் கூடிய செங்கற் கட்டடப் பகுதியும், கட்டடப் பகுதிக்கு கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் கட்டமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.


பானை ஓடுகளில் திரிசூலம், சூரியன், நட்சத்திரம், அம்பு பொறிப்புகளை காணமுடிகிறது. சங்கு வளையல்கள் ஆபரணங்களும் கிடைத்ததுள்ளது. சங்கு ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை, நாணயம் தயாரிப்பதற்கான அக்கசாலையும் கொற்கையில் இருந்துள்ளதை தொல்லியல் ஆய்வு உறுதி செய்கிறது.


தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும், அடுப்பு கரித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த கரித் துண்டுகள் மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலத்தை அறியும் பொருட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் கரித்துண்டின் காலம் கி.மு.785 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழி எழுத்தின் காலம் கிமு 3-ம் நூற்றாண்டில் இருந்து கிபி 2-ம் நூற்றாண்டு என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாக கொற்கை இருந்திருப்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.



இன்று கொற்கை எப்படி இருக்கிறது?
பாண்டிர்களின் துறைமுக நகரமான கொற்கையில் இப்போது கடல் இல்லை. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடல். கொற்கை இப்போது ஒரு சிற்றூர் மட்டுமே. இங்கு சாய்ந்த நிலையில் உள்ள வன்னிமரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊரில் எங்கு தோண்டினாலும் சங்குகளும், சிற்பிகளும், கிளிஞ்சலுகளும் இன்னும் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. கொற்கையில் விரிவான தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு விரிவான அகழாய்வு செய்தால் புதைந்து கிடக்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்க கால கொற்கை துறைமுகம் கிடைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
– மகிழன்பு, வரலாற்று ஆய்வாளர்
மிகச்சிறப்பான ஆய்வு கட்டுரை, வாழ்த்துகள் , நன்றிகள்
தற்பொழுது கொற்கை பகுதி எந்த மாவட்டத்தில் உள்ளது ,சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதைதெளிபடுத்தவும் நன்றி
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது. அப்போது இருந்ததைப் போல இப்போது அங்கு துறைமுகம் இல்லை. அப்பகுதியை நேரில் காண்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.
வணக்கம். தற்போது கொற்கைப்பகுதியின் பெயர் என்ன?
கொற்கைதான். சென்று பார்க்கலாம்.கண்ணகி கோவவில் இருக்கிறது..