காஷ்மீர் பிரிவு 370

பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

இக்கட்டுரையின் முதல் பாகத்தினை இந்த இணைப்பில் படிக்கலாம்.
பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

முதல் பாகத்தின் தொடர்ச்சியே இது.

இணையதள சேவைகள் முடக்கப்பட்டதால் காஷ்மீருக்குள் என்ன நடக்கிறது என்று வெளிஉலகிற்கு முழுமையாக தெரிவிக்க முடியாமல் ஊடகங்கள் தவித்து வருகின்றன. குறிப்பாக 2G சேவையைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை தெரிவிக்க முயலும் பத்திரிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களின் சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான வழக்குகள்

C:\Users\Admin\Desktop\inde_20200423_ok.jpg

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜம்மு காஷ்மீர் சைபர் காவல்துறை புகைப்பட பத்திரிக்கையாளர் மஸ்ரத் சஹ்ரா (Masrat Zahra) மீது UAPA சட்டத்தின் பிரவு 13-ன் கீழ் வழக்கு பதிந்துள்ளது. கூடுதலாக அவர் மீது IPC பிரிவு 505-ன் கீழ் தேசவிரோத வழக்கும் பதியப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு துப்பாக்கிச் சுட்டில் கணவனை இழந்த ஆரிஃபா ஜேன் (Arifa Jan) மன அழுத்தத்திற்கு உள்ளானர். அவருடைய வாழ்க்கையை புகைப்படமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக மஸ்ரத் சஹ்ரா (Masrat Zahra) மீது தேசத்துரோக வழக்கு பதிந்துள்ளது. புகைப்படங்களின் ஊடாக இதுபோன்ற சம்பவங்களை சொல்வது சட்டவிரேதமாகாது, இருந்தும் புகைப்படங்களைக் கண்டும் பாஜக அரசு அச்சப்படுகிறது.

ஏப்ரல் 19-ம் தேதி தி இந்து பத்திரிக்கையில் “Kin allowed to exhume bodies of militants in Baramulla” என்ற கட்டுரை எழுதியதற்காக பீர்ஸாடா ஆஷிக் (Peerzada Ashiq) எனும் பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதியப்பட்டது. சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தால் கொல்லப்பட்ட இருவர் என்று பொய்யான கட்டுரை எழுதியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. பின் 12 மணிநேரம் காவலர்கள் அவரை விசாரித்தனர்.

ஏப்ரல் 21-ம் தேதி சைபர் காவல்துறை பத்திரிக்கையளர் கெளஹெர் கிலானி (Gowher geelani)-ன் மீது UAPA சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் வழக்கு பதிந்துள்ளது. அத்தோடு IPC பிரிவு 505-ன் கீழும் வழக்கு பதிந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவர் எழுதும் பதிவுகள் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று வழக்கு பதியப்பட்டது. இதுபோன்று தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களையும் ஊடகத் துறையையும் முடக்கி வருகிறது ஜம்மு காஷ்மீர் நிர்வாகம். அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறது மோடி அரசு.

கல்வி

2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2020 மார்ச் மாதம் வரை ஏறத்தாழ 8 மாதத்தில் 60 நாட்களுக்கும் குறைவாகத்தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கல்விக் கூடங்களைத் திறக்க அனுமதி கொடுத்தாலும், பெற்றறோர் தங்கள் குழந்தைகளை அனுபுவதற்கு தயாராக இல்லை. ராணுவக் குவிப்பும், காவல்துறையினரின் நெருக்கடியும் குழந்தைகளை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அவ்வப்போது ராணுவத்திற்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிடக்கூடாது என்ற அச்சம் நிலவுகிறது. செல்போன் வசதிகள் துண்டிக்கப்பட்டதால் பள்ளிக்குச் செல்லும் குழுந்தைகளை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இயல்பாகவே பெற்றோர்கள் கல்விக் கூடங்களை தவிர்க்கிறார்கள்.

மார்ச் 2020 கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தி வருகின்றன. ஆனால் 2G சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளும் தடைபட்டுள்ளது. Child Relif and You (CRY) என்ற அமைப்பு நடத்திய அய்வின் படி, இணையதளத்தினூடாக 27.62% மாணவர்கள் மட்டும் கல்வி கற்க முடிகிறது அதுவும் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகுதான் நிகழ்கிறது.

ஆன்லைன் வகுப்புகளும் முறையாக நடத்தப்படாத சூழ்நிலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் பல்வேறு மன ரீதியான சோர்வுகளுக்கும் உள்ளாகின்றனர் என்றும் CRY அமைப்பு தெரிவிக்கிறது. 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் தனது வயதுக்கு மீறிய கேள்விகளை கேட்பதும், அவற்றில் ஆர்வம் காட்டுவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளது. ஏறத்தாழ 150 அரசு, 80 தனியார் கல்லூரிகள் இந்த இரு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் அந்த வகுப்புகளை கவனிக்க இணையதள வசதி முறையாக ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. 

பொது சுகாதாரம்

கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் பாம்பு கடித்த தன் மகனுக்கு மருந்தைத் தேடி 16 படையினரின் தடுப்புகளைத் தாண்டி 16 மணிநேரம் அலைந்த காஷ்மீரி தாய் சாஜா பேகம்

ஊரடங்கின் மையமாக தொலைதொடர்பும், இணையமும் தடை செய்யப்பட்டது. பின்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டடது. இந்த இரண்டு நடவடிக்கையும் நோயாளிகளை பெரிதும் பாதித்துள்ளது. போக்குவரத்து தடைபட்டதால் மருத்துவமனைகளுக்கு செல்ல வசதியில்லாமல் மக்கள் முடங்கியுள்ளனர். மருத்துவ உதவிக்கு அவசர ஊர்திகளை தொடர்பு கெள்ளமுடியாமல் செல்போன் தடைகள் அமைந்துள்ளது. ஏதாவது வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்ல முயன்றாலும் ராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்வதற்கு பல தடைகள் இருந்துள்ளது. அதேபோல் பிரதான சாலைகள் மூடப்பட்டதால் அவசர ஊர்திகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கையான KASHMIR FACT-FINDING REPORT தெரிவிக்கிறது. இதனால் இறப்புகள் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் மீதான அத்துமீறல்

செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. தனது சொந்த வாகனத்தில் வரும் மருத்துவ ஊழியர்கள் அரசின் ஆயுதப் படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. 2020 ஜுன் 3-ம் தேதி பிரபல தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் முசாபர் ஜேன் (Dr.Muzzaffar Jan) CRPF காவலர்களால் பந்திபூரா மாவட்டத்தில் தாக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 26-ம் தேதி தலைமை மருத்துவ அதிகாரி ஆய்வுக்கு செல்லும்போது சோதனைச் சாவடியை கடந்து செல்ல விடாமல் தடுக்கப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை ஆய்வு செய்யச் சென்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மே 23-ம் தேதி ஸ்ரீநகரில் மூத்த இருதய நோய் மருத்துவர் சையத் மக்பூல் (Dr.Syed Maqbool)  மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் காவலர்களால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவர்கள் அரச வாகனத்தில் சென்றபோதும் அவர்கள் தாக்கப்பட்டடுள்ளனர். காஷ்மீர் மருத்துவர் சங்கம் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அவசர ஊர்தி ஓட்டுனர்களும் துணை மருத்துவ ஊழியர்களும் மிக மேசமான முறையில் நடத்தப்பட்டதால் அவர்கள் பணிக்கு வருவது குறைந்து விட்டது என மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

C:\Users\Admin\Desktop\Feature-Photo-Doctors-protesting-in-this-file-photo.jpg

அதேபோல் மருந்துத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு உள்ளாகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு விவரிக்க முடியாத பின்னடைவைச் சந்தித்து வருகிறது. செவிலியர்கள், மருத்துவர்களின் போதாமையால் கொரோனா நோயாளிகள் மருத்தவமனை வசதி இல்லாமல் பல்வேறு தனியார் இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இணையதள முடக்கத்தால் மருத்துவத்துறையில் ஏற்பட்ட சிக்கல்கள்

முறையான இணையவழி இல்லாத காரணத்தால் பெருந்தொற்று காலகட்டத்திலும் மக்களுக்கு கொரோனா குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாமல், மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். மத்திய சுகாதராத் துறை நடத்தும் கொரோனா குறித்தான ஆன்லைன் கூட்டங்களில் கூட அவர்களால்  பங்கெடுக்க முடியவில்லை. இந்தபோக்கு காஷ்மீர் மக்களின் வாழ்வை மிக மோசமாக பாதித்துள்ளது.

இது குறித்து சிறுநீரக மருத்துவர் ஒமர் சலீம் கூறுகையில் “சில தீவிர சிகிச்சை நோயாளிகளின் நிலை குறித்து மூத்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க தொடர்பு கொள்ள முடியவில்லை. குறிப்பாக அவர்களுடன் வீடியோ அழைப்பின் மூலமாக தொடர்பு கொள்ள முடியவில்லை, எனது நோயாளி ஒருவருக்கு Pancreatic புற்றுநோய் முற்றிய நிலையை அடைந்துவிட்டது. அவருக்கு தொடர்ந்து மும்பையில் இருக்கும் மூத்த மருத்துவரின் ஆலோசனையில்தான் சிகிச்கை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் மாத ஊரடங்கிற்குப் பிறகு மருத்துவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் நவம்பர் மாதம் அவர் இறந்துவிட்டார்.“ என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக காஷ்மீர் மருத்துவ சங்க தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா துவங்கியதற்குப் பிறகு, பொது சிகிக்சைப் பிரிவு தடைபட்டுள்ளது என்றும், 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 77% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றும் Child Relif and You என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜம்மூ காஷ்மீர் பகுதியில் ENT என்றழைக்கப்படும் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனைகளும், பல் மருத்துவமனைகளும் முழுமையாக மூடப்பட்டுவிட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு துணை மாவட்ட மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டதால் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் 50 கி.மீ-க்கும் அதிகமான தூரம் செல்ல வேண்டியதுள்ளது. போக்குவரத்து வசதியில்லாததால் நடந்தே மக்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் இருக்கும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையான மருத்துவத்துக்கு செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அதேபோல் மருந்து சப்ளை தடைபட்டதால் போதிய மருந்துகள் இல்லாமல் மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வெளிவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *