தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற பாஜக-வின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் காணொளி மூலமாக உரையாற்றிய ஜே.பி.நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மோசமாக சித்தரிப்பதற்கு முன்னர் ஜே.பி.நட்டா அவர்களுக்கு இந்திய ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட 2020-ம் ஆண்டுக்கான கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை காண்பிக்க விரும்புகிறோம்.
தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடம் அல்ல, அறிவாளிகளின் புகலிடம் என்பதற்கு ஆதாரமாக, இந்த தரவரிசைப் பட்டியலில் பெரும்பான்மையானவற்றில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாடுதான் கல்வியில் சிறந்து விளங்கி நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான காரணமாய் விளங்குகிறது.
ஒரு கட்சியின் தலைவராய் தனது பொறுப்பினை உணர்ந்து, ஒரு மாநிலம் குறித்தான கருத்தினை முன்வைக்கும்போது ஜே.பி நட்டா அவர்கள் கவனத்துடன், ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும். இப்படி வரைமுறையின்றி பேசுவது ஒரு தேசிய கட்சியின் தலைவர் பொறுப்புக்கு அழகல்ல.
தரவரிசைப் பட்டியல் ஒரு பார்வை
நாட்டின் முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலேயே அதிக பல்கலைக்கழகங்களை இந்த பட்டியலில் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்திலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான்.

பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 34 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இந்த எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம். நரேந்திர மோடியின் குஜராத்திலிருந்து இப்பட்டியலில் வெறும் 7 கல்லூரிகள் தான் இடம்பெற்றுள்ளன.

மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை தலைசிறந்த 40 மருத்துவக் கல்லூரிகளில் 7 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. குஜராத்திலிருந்து இப்பட்டியலில் ஒரு கல்லூரி கூட இல்லை.

கட்டிடக் கலை(Architecture) கல்லூரிகளின் சிறந்த 20 கல்லூரிகள் 4 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இதிலும் தமிழ்நாடுதான் முன்னிலை.

அனைத்து கல்லூரிகளையும் சேர்த்த சிறந்த 100 கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையிலும் மற்ற அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடுதான் அதிகம். இதில் குஜராத்தின் பங்கு என்பது இரண்டு கல்லூரிகள்தான்.

மேலாண்மை படிப்பு (Management) குறித்த தலைசிறந்த 75 கல்லூரிகளில் 8 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாடு கல்வியாளர்களின் பிறப்பிடம், அறிவாளிகளின் பிறப்பிடம், படித்தவர்களின் பிறப்பிடம் என்பதைத் தான் இந்திய ஒன்றிய அரசின் இந்த அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியல் நமக்கு உணர்த்துகிறது.
தமிழ்நாட்டினை முன்னுதராணமாகக் கொண்டு இந்தியாவின் பிற மாநிலங்களின் கல்வியையும், பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு எத்தனையோ ஆதாரமான சாதனைகள் இருக்கும்போது, அதைவிட்டுவிட்டு தேசவிரோதிகளின் புகலிடம் என்று ஆதாரமில்லாமல் பேசுவது ஒரு ஆளும் கட்சியின் தலைவருக்கு அழகல்ல.
நாட்டின் GDP-ல் இரண்டாவது பெரிய சக்தியாக விளங்கி இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய தூணாக நின்று கொண்டிருக்கிறது. நாடு வளர்ச்சியடைவதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. அப்படியிருக்க தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியையும், எதிர் கட்சியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வது எந்த அடிப்படையில் பார்த்தாலும் உண்மையில்லை. நாடு வளர வேண்டுமென்றால் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக தமிழ்நாட்டை முன்னிறுத்துவதே சரியானது என்பதை உணருங்கள் ஜே.பி.நட்டா அவர்களே!
தமிழ்நாடு அறிவாளிகளின் பிறப்பிடம்! புரிந்து கொண்டு பேசுங்கள்!
இதையும் படிக்க:
தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!
நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!