வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவு வெளியேற்றப்படுகிறது. இதனை சேமிக்க பக்கிங்காம் கால்வாய், உப்பங்கழி, அத்திப்பட்டு, செப்பாக்கம் பகுதியில் 1,126 ஏக்கா் பரப்பளவில் குளம் அமைக்கப்பட்டது. அனல்மின் நிலையத்தில் இருந்தது 6 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள குளத்திற்கு குழாய்கள் மூலம் சாம்பல் கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
குழாய்களில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டதன் காரணமாக, கடந்த புதன்கிழமை சுடுநீருடன் நிலக்கரி சாம்பல் கழிவு நீா் வெள்ளம்போல் செப்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்தது. இந்த கழிவுநீா் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் ஊரை விட்டு வெளியேற முயன்றபோது அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் சாம்பல் கழிவுநீரிலேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சாம்பல்கழிவு நீரின் காரணமாக நிலத்தடி நீர் மாசடைந்து பருக முடியாத நிலையில் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே இந்த பகுதிகளில் காற்றில் பரவும் சாம்பல் துகள்களின் காரணமாக சுவாசக் கோளாறுகள், உடல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் உள்ளாகி வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடசென்னை அனல்மின் நிலையத்திற்காக தங்கள் இடங்களை வழங்கிய மக்கள் தற்போது, இந்த கழிவுகளில் வசிக்கும்படி நிந்திக்கப்பட்டிருப்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். மேலும் செப்பாக்கம் கிராமத்தில் இக்கழிவைக் கொட்டுவதற்கான குளத்திற்கான இடத்தினை வாங்கும்போது, அனல்மின் நிலையத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக சொன்னதாகவும், ஆனால் இதுவரை அதையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சாம்பல் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை குறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முறையிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த தீர்வும் அளிக்கப்படவில்லை.
இந்த குழாயின் கழிவுகள் அடிக்கடி உடைந்து கொற்றலை ஆற்றில் கலப்பதும் நடந்து வருகிறது. மெர்க்குரி, காட்மியம், ஆர்சனிக் போன்ற வேதிப் பொருட்களும் இந்த சாம்பல் கழிவில் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது மழைக்காலங்களில் எண்ணூர் கழிமுகப் பகுதியில் கலந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
அனல்மின் நிலையங்களில் தொடரும் பராமரிப்பு சிக்கல்களால் நிகழும் விபத்துகள்
சமீபத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நடந்த விபத்தில் 15 பேர் மரணமடைந்தனர். இதுபோன்ற அனல்மின் நிலைய விபத்துகள் தொழிலாளர்களின் உயிர்களைப் பறிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய கேட்டினை ஏற்படுத்துகிறது. அனல்மின் நிலைய பாய்லர்களிலோ, கழிவுநீர் குழாய்களிலோ விபத்துகள் ஏற்படாவண்ணம் அடிக்கடி மேலாண்மை பணியினை செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஆண்டு காலம் இயக்கி முடிக்கப்பட்டு வயது கடந்த பாய்லர்களையும், குழாய்களையும் மாற்றுவதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட தவறுகள் சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் நிலையான மாற்று எரிசக்தி குறித்து அரசுகள் திட்டமிட வேண்டியதும் அவசியமானது.