ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா அங்கீகரிக்கபட்டு வருவதற்குக் காரணம் இங்கு பின்பற்றப்படும் தேர்தல் முறைதான். பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுகிறது என்னும் பிம்பம்தான் இந்த ஜனநாயக சொல்லை நாம் தூக்கிக் கொண்டாட அனுமதிக்கிறது.  

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. ஆனால் மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. 

நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த போக்கு தேர்தல் நடைமுறையின் சுதந்திரத்தையும் நேர்மையையும் பலவீனப்படுத்தும்.

இந்தியாவில் ஒரே தேர்தல் முறை ஏன் ஒழிக்கப்பட்டது?

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் வெவ்வேறு காலங்களில் தனித்தனியாக வாக்களிக்கும் நடைமுறையை நீக்கிவிட்டு, இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு நடத்தப்பட்ட முதல் மூன்று தேர்தகளில் (1952, 1957, 1962) மக்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் சேர்த்து வாக்களித்தனர். ஆனால் இந்த போக்கில் 1968-ம் ஆண்டு சில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட பின்பு மாறுதல்கள் ஏற்பட்டது. ஐந்தாண்டு என்று பின்பற்றி வந்த சுழற்சி முறை 1970-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் மாறிவிட்டது. 

ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதற்காகவும், கூட்டாட்சி நடைமுறையை பாதுகாப்பதற்காகவும் இந்த மாற்றங்கள் இயல்பாக நடந்த ஒன்று. பின் 1983-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டில் சட்ட ஆணையம் தனது அறிக்கையில் இதை மீண்டும் வலியுறுத்தியது. பின் இதுகுறித்தான விவாதத்தை 2014-ம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையின் வாயிலாக துவக்கி வைத்துள்ளது.

ஒரே தேர்தல் முறை குறித்து உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?

கேரள அரசை எதிர்த்த கேசவானந்த பாரதி வழக்கில் (Keshavnanda Bharti v. State of Kerala) அரசியலமைப்பு அவை (constitutional bench ) வழங்கிய தீர்ப்பின்படி, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்கும் வகையிலான எந்தவொரு திருத்தமும் செய்யக்கூடாது. அதேபோல் இந்த வழக்கில் ”இந்திய அரசியலமைப்பில் கூட்டாட்சி ஒரு அடிப்படைக் கட்டமைப்பாகும்” எனவே அதை மீற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்திய ஒன்றிய அரசுக்கு எதிரான எஸ்.ஆர்.பொம்மை (SR Bommai v. Union of India) தொடுத்த வழக்கில் மீண்டும் இதே நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டது. எனவே கூட்டாட்சிக் கட்டமைப்பை சிதைக்கும் எந்தவொரு சட்டத் திருத்தமும் நீதித்துறையால் ரத்து செய்யப்படும்.

அவசரநிலை பிரகடனப்படுத்துவது சரியாகுமா?

பாராளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டாலும்,  எதாவது சூழ்நிலையில் மாநில சட்டசபை நம்பிக்கையிழந்து ஆட்சியைத் துறந்தால் மீதமுள்ள பதவிக் காலத்தை நிரப்ப என்ன மாதிரியான முறையைப் பின்பற்றுவது என்ற கேள்வி எழுகிறது. 

அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவின் கீழ் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுமா? அல்லது சிறுபான்மையின  அரசு தனது பதவிக் காலத்தை நிரப்ப அனுமதிக்கப்படுமா? இந்த இரண்டு போக்குகளும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது. குடிமக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம் ஜனநாயகமற்றது. 

மேலும் மாநில சட்டமன்றத்தின் மீதம் உள்ள பதவிக் காலத்தை ஒன்றிய அரசின் ஆளுகைக்குள் கொண்டுவருவது கூட்டாட்சிக்கு விரோதமானது. எனவே என்ன மாதிரியான தீர்வு இதற்கு முன்மொழியப்படுகிறதோ, அதன் அடிப்படையில்தான் இது குறித்தான விவாதம் நியாயப்படுத்தப்படும்.

தேர்தல் செலவா? விலைமதிப்பில்லா ஜனநாயகமா? எது முக்கியம்?

ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தும் யோசனையை முன்மொழிபவர்கள் பொதுவாக சொல்லும் ஒரு காரணம் இது தேர்தல் நடத்தும் செலவைக் குறைக்கும். தேர்தல புள்ளி விபரங்களின்படி 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு 3870 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாநில சட்டமன்ற தேர்தல் செலவுகள் மாநிலத்தின் மக்கள் தெகையைப் பொருத்து அமையும். 

பீகார் தேர்தல் நடத்த தோராயமாக 300 கோடி செலவாகியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் ஆகியவற்றை ஒரே தேர்தல்முறைக்கு உட்படுத்தினால் 4500 கோடிவரை செலவு ஆகலாம் என்று சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வறிக்கை கூறுகிறது. 

இங்கு நாம் செலவு குறித்தான சிக்கலை பொருத்தமானதாக பார்த்தாலும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை செயல்படுத்துவதில் சமரசம் கூடாது. செலவைக் குறைப்பதைவிட விலைமதிப்பில்லாத ஜனநாயகமாக மக்கள் நினைக்கும் தேர்தல் முறையை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

ஒற்றை கட்சி ஆட்சியின் ஆதிக்கம் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு எதிரானது

நடைமுறையில் மாநிலக் கட்சிகளைவிட மத்தியக் கட்சிகள் மிகவும் அதிகாரம் படைத்ததாக செல்வாக்கு மிக்கதாக திகழ்கிறது. எனவே இது இயல்பாகவே மாநிலங்களின் உரிமையை மறுத்து ஒன்றிய அரசை பலப்படுத்தும் நோக்கத்திற்கு இட்டுச்செல்லும். எனவே இது அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும். மத்தியத் துறைகள் சார்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநில அளவிலான வளர்ச்சி திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். 

IDFC அமைப்பின் ஆய்வறிக்கையின் படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 77% தேசிய கட்சிகள்தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வெற்றி பெரும். இது ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் மேலும் அந்த கட்சியின் சித்தாந்தங்கள் குறித்தும், அவர்களின் ஆட்சி அதிகாரம் குறித்தும் மக்களிடம் பொதுக் கருத்துக்களை உருவாக்க அரச இயந்திரம் பயன்படுத்தப்படும். 

இது இந்திய  அரசியல் அமைப்பின் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு (participative democracy) எதிரானது. மாநிலக் கட்சிகள் அதிகாரமற்ற நிலைக்குத் தள்ளப்படும். ஆதிக்கமும் அதிகாரமும் எதேச்சதிகாரத்திற்கு இட்டுச்செல்லும். இந்த போக்கு மக்கள் நலனுக்கு ஆபத்தாக முடியும்.

பாதுகாப்பு கேள்விக்குறியாகும்

தேர்தல் பிரச்சார காலகட்டம் துவங்கி, தேர்தல் நடக்கும் நாள் மற்றும் முடிவுகள் வெளிப்படுத்தும் நாள்வரை தேர்தல் பணிகள் நீண்ட காலம் எடுக்கும். இந்த காலகட்டங்களில் பல்வேறு தேர்தல் கட்சிகளும், அதன் தொண்டர்களும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புண்டு. எனவே பொதுமக்களுக்கும், தேர்தல் பணிக்கும் போதிய பாதுகாப்பினை உறுதி செய்வது கடினம். 

தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் இந்தியா முழுக்க தேர்தல் நடத்த லட்சக்கணக்கான அதிகாரிகள் தேவைப்படுவார்கள். அதேபோல் பெரும் கட்டுமான வசதிகள் தேவைப்படும். இது இப்போதைக்கு இந்தியாவில் இல்லை. மாநில வாரியாக தேர்தல் நடத்தும் இன்றைய சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையம் பல்வேறு  இன்னல்களை சந்தித்து வருகிறது. இதுபோன்ற நிர்வாக நெருக்கடிகள் தேர்தலை திறன்பட செய்வதற்கு தடையாக இருக்கும். 

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஒரு கற்பனாவாத கருத்தாக இருக்கக்கூடாது. அது ஒரு யதார்த்தமாக இருக்க வேண்டும். தேர்தல்களின் முழு கட்டமைப்பையும் மாற்றுவது மக்கள் எதிர்பார்க்கும் தீர்வாக இருக்க முடியாது. அது பாஜக போன்ற அதிகாரம் குவிக்க ஆசைப்படும் கட்சிகளின் உள்நோக்கமாகும். 

மக்களுக்கு சிறந்த சமூக வாழ்வைக் கொடுப்பதற்கு அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் குவிக்கத் தேவையில்லை. அது மக்கள் விரோத செயல்களுக்குத்தான் இட்டுச்செல்லும். வரலாறு முழுவதும் எதேச்சதிகாரம் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கியுள்ளது. எனவே ஆதிக்க மனோபவம் இல்லாமல் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்ட மாற்றங்கள் தான் தேவை. அதுவே மக்களுக்கு சிறந்த சமூக வாழ்வை உறுதிப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *