எட்டு வழி சாலை

எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்

தமிழகத்தில் சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. 

அதனால், சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய. பூவுலகின் நண்பர் அமைப்பு உட்பட 50 பேர் தொடுத்த வழக்கில், கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சேலம் – சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் – சென்னை சாலை திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 

புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தீர்ப்பின் சாராம்சங்கள்

  • 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கை செல்லாது.
  • ஆனால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும். 
  • முறையாக எல்லா துறைகளிலும் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாகத் தொடங்கலாம்.
  • நெடுச்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தீர்ப்பில் நிலவிய குழப்பங்கள் குறித்து விளக்கிய பத்திரிக்கையாளர் அருள் எழிலன்

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு குழப்பமான நிலை நிலவியது. மூத்த பத்திரிகையாளர் அருள் எழிலன் அவர்கள் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த தீர்ப்பின் பாதகங்கள் என்று பின்வருமாறு பட்டியல் இட்டுள்ளார்.

  • சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் அகற்றி விட்டது. 
  • இதன் மூலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 
  • ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் நிலங்களை அளவீடு செய்தும், கையகப்படுத்தியும், நிலங்களை உரிமை மாற்றம் செய்திருப்பதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
  • உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அதாவது சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி  மீண்டும் முறைப்படி நிலங்களை கையகப்படுத்தலாம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
  • இன்னும் சொன்னால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பாதியை ஏற்றுக் கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் அகற்றி விட்டது. 
  • உரிய விதிமுறைகளுடன் நிலங்களை எடுக்கச் சொல்கிறது. மேலும் இத்திட்டம் தொடர்பாக  ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையும் ரத்து இல்லை. அதே அறிவிப்பாணையில் நிலங்களை மட்டும் உரிய விதிகளோடு கையகப்படுத்தி திட்டத்தை தொடரலாம். இதுதான் தீர்ப்பு.     

என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுத் துரோகம் – பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன் சமூகவலைதள பக்கத்தில் மக்களுக்கு உச்சநீதிமன்றம் வரலாற்றுத் துரோகம் இழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவு பின்வருமாறு:

10,000 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை அழித்து, ஆயிரக்கணக்கான கிணறுகளை காலிசெய்து, 19 கி.மீ காப்பு காடுகளை நாசம் செய்யப்போகும் சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது மக்கள் விரோதமானது. 

புயல்கள், வறட்சி, வெப்பம், தீவிர மழைப்பொழிவு என எல்லாவற்றையும் அதிகரிக்கத் துணைபுரியும் இத்திட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்திய மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்துள்ளது உச்சநீதிமன்றம்.  

என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *