சட்டத்திற்கு புறம்பானதாக சொல்லப்படும் பதிவுகளை 36 மணிநேரத்தில் நீக்கியாக வேண்டுமென ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி புதிய சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ளது. அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ சட்ட விரோதம் என்று சொல்லக் கூடிய பதிவுகளை இந்த அடிப்படையில் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படவுள்ளது.
IT சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தம்
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2011-ன் (IT Act) 79-வது பிரிவில் உள்ள விதிகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாஜக அரசின் சார்பில் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு சமூக வலைதள நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டவுடன் உடனடியாக இந்த திருத்தம் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது. சட்டத்திற்கு புறம்பான பதிவுகளைக் கண்டறிந்திட சமூக வலைதள நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக அரசாங்கம் தொடர்பில் இருக்கும் என்றும், அப்படிப்பட்ட பதிவுகளை தானாகவே நீக்கிடும் வகையில் Automated tool-களை கொண்டுவருவதற்கும் அறிவுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி Koo செயலிக்கே அரசின் முன்னுரிமை
அரசாங்கத்தின் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு இனி Koo செயலிக்கே முன்னுரிமை தரப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அனைவரையும் Koo செயலியில் இணைந்திட பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சமூக வலைதளங்களில் பரப்புரையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பரவுகிற தவறான வதந்திகள் தடுக்கப்பட வேண்டும் என்பது சரியானதுதான். உண்மை கண்டறிந்து தெளிதல் என்ற நடைமுறைக்கு முன்னுரிமை அளிக்காமல், சமூக வலைதளங்களில் இருக்கிற கருத்து சுதந்திர வெளியினை முடக்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறதோ என்பதுதான் முக்கியமான கவலை தரும் விடயமாக இருக்கிறது.
சமூக வலைதளங்கள் ஏன் அரசாங்கத்தால் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது?
கார்ப்பரேட் ஊடகங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளையும், அதிகாரிகளின் தவறுகளையும் கேள்வி கேட்கத் தவறுகிற இடங்களில் சமூக வலைதளங்கள்தான் அந்த தளத்தினை மக்களுக்கு வழங்குகின்றன. ஒரு சாமானியன் கூட அரசாங்கத்தினை தனக்கு பதில் சொல்வதற்கு பொறுப்பான ஒன்றாக மாற்றுவதற்கு சமூக வலைதளங்களே துணை நிற்கின்றன.
கீழ்மட்ட அதிகாரிகளின் லஞ்சத்தில் தொடங்கில், பல லட்சம் கோடி ஊழல் வரை அனைத்தையும் வெளிக்கொண்டு வந்து அம்பலப்படுத்தும் வெளியாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன. பட்ஜெட் தொடங்கி அணுசக்திக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் வரை அனைத்தும் இந்த வெளியில் விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன, விமர்சிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் சமூக வலைதளங்களின் ஊடாக எழுந்த எழுச்சியானது உலகம் முழுக்க விவாதத்திற்கு உள்ளாகியது. அதனால்தான் உலகின் மிகப்பெரிய வல்லரசுகள் சமூக வலைதளங்களின் கேள்வி கேட்கும் சுதந்திர வெளியினை நீக்கிடவும், அந்த வெளியினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திடவும் தொடர்ந்து முனைந்து வருகின்றன.
வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு மாற்றாக செயல்படும் சமூக ஊடகங்கள்
வட இந்திய ஆங்கில ஊடகங்களில் பெரும்பான்மையானவை பாஜகவின் ஊதுகுழல்களாகவே மாறிவிட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மட்டுமே பாஜகவின் சித்தாந்த கனவிற்கு தடையாக நிற்கின்றன. பெரிய ஊடகங்கள் விவாதிக்கத் தவறும் பெட்ரோல் விலை உயர்வு, ரஃபேல் விவகாரம், பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகள் போராட்டம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் சமூக ஊடகங்களால் மட்டுமே விவாதமாக மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் என இரண்டுமே மக்கள்மயமாவதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக அமைந்தன.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தரும்போதெல்லாம் #GoBackModi என்று ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிறது. பாஜகவின் சர்வாதிகார கனவிற்கு தடையாக மக்களுக்கான வெளியை சமூக ஊடகங்கள் வழங்குவதால்தான் அவற்றை இறுக்கிட மோடி அரசு முயல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 1435 கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தது. அவற்றில் 1398 ஐ.டிகளை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.
பதிவுகளை நீக்குவதில் இரட்டைத் தன்மை; பாஜகவின் Fake News Factory
எந்த பதிவுகளெல்லாம் வன்முறையைத் தூண்டுபவை என்பதில் கூட ஒரு இரட்டைத் தன்மையே இங்கு இருப்பதைக் கண்கூடாக பார்த்திட முடியும். பாஜகவின் IT விங்கானது ஒரு Fake News Factoryயாக செயல்படுவதாக ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. பாஜகவின் IT செல் பொறுப்பாளரான அமித் மாளவியா தொடர்ச்சியாக Fake Newsகளை பரப்பி வருவதை Scroll.in இணையதளம் அம்பலப்படுத்தியிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு திஷா ரவி கைது செய்யப்பட்டபோது, ஹரியானாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் அனில் விஜ், ”தேச விரோத சிந்தனைகளை தனது மூளைகளை கொண்டிருப்பவர்கள் திஷா ரவியாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். முதலில் அவரது ட்வீட்டை நீக்கிய ட்வீட்டர் நிர்வாகம், பின்னர் அந்த ட்வீட்டில் வன்முறை இல்லை என்பதாக அனுமதித்துள்ளது. 1398 ஐடிகள் நீக்கப்பட்ட ட்விட்டரில் பாஜகவின் அமைச்சரின் பதிவு நீக்கப்படவில்லை.
இப்படி எந்த பதிவுகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று அடையாளம் காணுவதில் கூட இரட்டைத் தன்மை இருக்கவே செய்கிறது. சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பரப்பும் போலி செய்திகள், வன்முறையைப் பரப்பும் பதிவுகளும் முடக்கப்படாமல் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதும் தொடர்கிறது.
ஐ.ஐ.டி ஆய்வில் முஸ்லீம் விரோத பதிவுகள்
ஐ.ஐ.டி காரக்பூர் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் முஸ்லீம்களுக்கு எதிரான பதிவுகள்தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் 5000 வாட்சப் குழுக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட அந்த ஆய்வில் மூன்றில் ஒரு செய்தி முஸ்லீம்களுக்கு எதிரானதாக பரப்பப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெறுப்பு பேச்சுகளைக் கண்டறிவதற்கு ஏராளமான Algorithmகள் இருக்கின்றன. ஆனால் இவற்றைத் தடுப்பதற்கு ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்று இந்த ஆய்வை மேற்கொண்ட கிரண் காரிமெல்லா டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்கள் குறித்த ஒரு வெறுப்பு செய்தியானது தொடர்ச்சியாக 25 நாட்களுக்கு சுற்றிக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்கள் குறித்த அச்சத்தை உருவாக்கும் நோக்கில் இந்த பொய் தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. முஸ்லீம் மருத்துவர்கள் ’மெடிக்கல் ஜிகாத்’தில் ஈடுபடுவதாகவும், முஸ்லீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றும் ’லவ் ஜிகாத்’தில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து பரப்பப்பட்டுள்ளது. அந்த குழுக்களில் இருப்பவர்களில் 10% நபர்களே தொடர்ந்து இப்படிப்பட்ட 90% சதவீத செய்திகளை பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
இப்படி ஆய்வுகள் கூறும் தகவல்கள் வெறுப்புப் பேச்சுகளையும், பொய் செய்திகளையும் பரப்புவதில் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும், பாஜகவினரையுமே பெரும்பாலும் கைகாட்டுகின்றன. இப்படிப்பட்ட வெறுப்பை விதைக்கும் தங்கள் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முனையாமல், அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களின் பதிவுகளையே தொடர்ந்து சட்டவிரோத பதிவுகளாக அரசாங்கம் சுட்ட முயல்வதுதான், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் நடப்பதை காட்டுவதாக உள்ளது.