பத்மநாபபுரம்

தேர்தல் களம் 2021: பத்மநாபபுரம், கிள்ளியூர் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 3

பத்மநாபபுரம் தொகுதி யார் பக்கம்?

விளவங்கோடு தொகுதியைப் போலவே கன்னியாகுமரியின் மேற்கு மாவட்ட சட்டமன்றத் தொகுதியான பத்மநாபபுரம் முழுக்க முழுக்க விவசாயத்தையும்  சுற்றுலாவையும் மட்டுமே நம்பியிருக்கும் தொகுதியாகும். விவசாயிகளும் பழங்குடியினரும் வாழும் இந்த தொகுதியின் முக்கிய நகரமாக பத்மநாபபுரமும், திருவனந்தபுரம் நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தக்கலையும் உள்ளது. அது இல்லாமல் மிகப் பிரபலமான  சுற்றுலாத் தளமான திருப்பரப்பும் இந்த தொகுதிக்குள் இருக்கிறது.

கடந்த தேர்தல்கள் வரலாறு

இந்த தொகுதியின் தேர்தல் வரலாறு மிகவும் சுவராசியமானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வலுவாக இருக்கும் காங்கிரஸ் இந்த தொகுதியில் ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை. ஆனால் ஜனதா கட்சியின் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிரிவு ஒருமுறை வென்றுள்ளது. 1984 தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் பாலச்சந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார். 

1996-ம் ஆண்டு பாரதிய ஜனதா தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் நின்ற பாரதிய ஜனதா  தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், அதன்பின் நடந்த மூன்று தேர்தல்களிலும் இரண்டாவது இடம் கூட வரவில்லை. 

2006, 2011, 2016 என்று திமுக தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் இந்த சட்டமன்றத் தொகுயில் வாங்கிய வாக்கு 1,02,963. ஆனால் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன் 53,212 வாக்குகளை மட்டுமே பெற்றார். கிட்டத்தட்ட பாஜக வாங்கியதை விட திமுக கூட்டணி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளை அதிகம் பெற்றது.

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

புதிய ரப்பர் தொழிற்சாலை, மலைப்பகுதியில் விளையும் வாசனை பொருள்கள், தென்னை சார் தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருக்கிறது. அதிக  மழை பெய்கிறபோது கோடையில் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இந்த தொகுதியின் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.  

முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த மனோ தங்கராஜ் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதி இது.

மக்கள் போராட்டங்களில் பங்கேற்பதால் எம்.எல்.ஏவுக்கு இருக்கும் நல்ல பெயர்

தொகுயின் முக்கியப் பிரச்சனையான கிராமப்புற சாலைகள் விவகாரத்தில் தனது நிதியில் இருந்து சிறப்பாகவே செய்திருப்பதாக கருத்து நிலவுகிறது. விளவங்கோடு விஜயதாரணியைப் போல அல்லாமல் பெரும்பாலும் தொகுதிக்குள்ளேயே இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதேனும் போராட்டங்கள் நடந்தால் அதில் மனோ தங்கராஜை காண முடிகிறது. ஒக்கி புயலின் போது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் தொடர் உண்ணாவிரமும் இருந்தார்.

அப்போராட்டத்தில் அவர் வைத்திருந்த கோரிக்கைகளும் மக்களை வெகுவாக ஈர்க்கவே செய்தது. அந்த போராட்டத்தினால் பத்மநாபபுரம் தாண்டி ஒட்டுமொத்த குமரி மாவட்டதிலும் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. 

தொடர்ந்து திமுக வெற்றிபெரும் இந்த தொகுதியை ஒருமுறை கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கேட்பதாக தகவல் வருகிறது. ஆனால் மாவட்டச் செயலாளரான மனோ தங்கராஜ் தான் திமுக கூட்டணி வேட்பாளர் என்று உடன்பிறப்புகள் பரப்புரையைத் துவங்கிவிட்டார்கள். கூட்டணி கணக்குகள், கடந்த கால தேர்தல் வரலாறு, தொகுதி மக்களிடம் இருக்கும் நல்ல பெயர் மனோ தங்கராஜை வெற்றி பெற வைக்கும் என்றே கணிக்க முடிகிறது.

கிள்ளியூர் தொகுதி யார் பக்கம்?

மாவட்டத்தில் அதிக கடற்கரை கொண்ட தொகுதி இது. குமரியின் தந்தை மார்சல் நேசமணி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. தேசிய கட்சிகளின் தொகுதி என்று சொல்வதை விட காங்கிரசின் தொகுதி என்றே கூறிவிடலாம். 

கடந்த தேர்தல்கள் வரலாறு

1996-ல் இருந்து மூப்பனாரின் த.மா.க இரண்டு முறையும், காங்கிரஸ் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதற்குமுன் ஜனதா தளமும் ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால்  இங்கு மீனவ வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

கருங்கல் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் 2 எல்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். குமரி மாவட்டம் கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர், புதுக்கடை, மத்திகோடு, பாலூர், திப்பிறமலை, முள்ளங்கினாவிளை, மிடாலம், இனையம் புத்தன்துறை, பைங்குளம், முஞ்சிறை ஆகிய 13 ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

கொல்லங்கோடு, கிள்ளியூர், புதுக்கடை உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளையும்   கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. விவசாயமும், மீன்பிடி தொழிலும் மட்டுமே இங்கு பிரதான தொழில்களாக இருக்கிறது. ஒக்கி  புயலின் போது அதிக உயிர் பலி நடந்த தொகுதி இது. தற்போது தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளால் மீனவர்கள் பலியாவதும் இந்த தொகுதியில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 

கருங்கல், புதுக்கடை, ஏழுதேசம் உள்ளிட்ட பேரூராட்சிகளே இந்த தொகுதியின் மக்களின் வணிகத் தளங்களாக இருக்கிறது. நீரோடியில் இருந்து சின்னதுறை வரும் கடற்கரை சாலை கடல் அரிப்பில் காணமல் போனதை இன்னும் சரி செய்யாமல் இருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கால்வாய்களை தூர் வாராதது, கிராம சாலைகளை இன்னும் மேம்படுத்தாதது போன்றவை சரிசெய்வதும், இங்கு விளையும் நெல்லிற்கு  மாவட்ட தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஈரப்பத அளவை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலுவாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பே வெற்றியை முடிவு செய்யும்

சட்டமன்றத்தில் அதிக கேள்வி கேட்ட உறுப்பினர்கள் பட்டியலில்  இருந்தாலும் ஒக்கி புயலின் போது உடனடியாக களத்திற்கு வராதது உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகள் சட்டமன்ற உறுப்பினர் மீது இருக்கிறது. ஆனாலும்  மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் வலுவான கட்டமைப்பும் திமுக கூட்டணியைக் கரையேற்றும் வாய்ப்புள்ளது. 

குளச்சல்,கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகள் குறித்து நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *