ஓ.பி.எஸ்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்

தமிழகத்தில் இரண்டு முதலைமைச்சர்கள் உருவான தொகுதி தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதி.

இந்த தொகுதிக்குள் போடிநாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகா, கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய்க் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி மற்றும் வீரபாண்டி உத்தமபாளையம் தாலுகா, பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள், குச்சனூர்  மற்றும் மார்க்கையன்கோட்டை ஆகியவை அடங்கிய தொகுதி இது.

ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினரான தொகுதி

ஜெயலலிதா முதன்முதலில் கடந்த 1989-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது போடி தொகுதியின் மூலமாகத்தான். 2011-ம் ஆண்டு தேர்தலிலும், 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ் அதன்பின் இரண்டு முறை முதலைமைச்சராகவும், தற்போது துணை முதல்வராகவும் இருக்கிறார்.

கழுதையில் ஏற்றிச் செல்லப்படும் காய்கறிகள்

தமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்   போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச  ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஏனென்றால் அந்த சாலை வசதிகள் காய்கறி விற்பனை செய்கிற வண்டிகள் போக முடியாத  நிலையில் இருக்கிறது என்பதுதான் காரணம்.

போடிநாயக்கனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கொட்டகுடி கிராம ஊராட்சியில் கொட்டகுடி, குரங்கணி, காரிப்பட்டி, டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன், கொழுக்குமலை, முதுவாக்குடி, முட்டம், சாலைப்பாறை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இதில் முதுவாக்குடி மலை கிராமத்தில் மலைவாழ் முதுவாக்குடி இன மக்கள் மட்டும் வசித்து வருகின்றனா்.

கடந்த நாடாளுமன்றத் தேரதலின் போது, சாலைகள் இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, உத்தமபாளையம்   சார் ஆட்சியா் வைத்தியநாதன், மலை கிராமத்திற்கு நடந்து சென்றுதான்  பேசினார். 

5 கி.மீ நடந்தே வந்து வாக்களிக்கும் பழங்குடி மக்கள்

மலை கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலை கிராம மக்கள் 5 கி.மீ. தூரம் நடந்தே வந்து வாக்களித்துவிட்டு, மீண்டும் 5 கி.மீ. தூரம் நடந்தே தங்கள் கிராமத்திற்கு சென்றனா். அதற்குப் பிறகு அந்த பக்கம் எட்டிப் பார்க்காத ஓ.பி.எஸ், சசிகலா தமிழ்நாட்டிற்கு வருகிற தேதியில் தேடி  நடந்தே மலையேறினார்.   

நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும்

அடிப்படை வசதியான சாலை வசதியே இல்லாததால் அங்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் மருத்துவமும் கிடைக்கப் பெறுவது இல்லை. அவசர சிகிச்சைக்குக் கூட மலை மேடுகளில் நடந்து போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள். நோயாளிகளையும், கர்ப்பிணி பெண்களையும் தூலி கட்டித் தூக்கிச் செல்லும் நிலைதான் உள்ளது.

ஒ.பி.எஸ் நடத்திய பூமி பூஜை

நாற்பதாண்டுகளுக்கு முன்பு, கட்டப்பட்டு பழுதடைந்து இருக்கும் வீடுகளை  பத்தாண்டுகளாக கண்டுகொள்ளாத பன்னீர் செல்வம், தற்போது  தேரதல் தேதி அறிவிக்கும் சில நாட்களுக்கு முன் பூமி பூஜை மட்டும் நடத்தியுள்ளார்.

சுற்றுலா தளங்களுக்கும் இதே நிலைமை

பழங்குடிகளின் பகுதிகள் மட்டுமல்ல, போடி பகுதியில் குரங்கணி, டாப்ஸ்டேசன், கொட்டக்குடி போன்ற இயற்கை சார்ந்த சுற்றுலா இடங்களும், குச்சனூர் சனீஸ்வரர் கோவில் போன்ற ஆன்மீகம் சார்ந்த இடங்களும் உள்ளன. இருந்தபோதும் சுற்றுலா தளங்களுக்கு வந்து செல்ல போதிய  பேருந்து வசதி கூட இல்லாமல் தான் இருக்கிறது. சுற்றுலா  தளங்களில் கூட  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை 

தமிழகத்தின் துணை முதல்வர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மலையேறி சென்று வாக்கு கேட்கிறாரே தவிர சாலை வசதி கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *