ஆதார் பட்டினிச் சாவு

ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?

ஆதார் மற்றும் பயோ மெட்ரிக் விவரங்கள் இணைக்கப்படாததால் 3 கோடி ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் ஏராளமான ஏழை மற்றும் பழங்குடி மக்கள் பட்டினிச் சாவுக்கு தள்ளப்பட்டிருப்பதாக கோயிலி தேவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய சார்பில் மூத்த வழக்கறிஞர் கோலின் கொன்சால்வேஸ் ஆஜரானார். 

வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து, 3 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இது மிகத் தீவிரமான பிரச்சினை. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விரைவில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

11 வயது மகளை பட்டினிக்கு பலி கொடுத்த கோயிலி தேவியின் வழக்கு

இந்த வழக்கினை பதிவு செய்த கோயிலி தேவி என்பவர் 2017-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது 11 வயது மகளை பட்டினிச் சாவுக்கு பறிகொடுத்தவர் ஆவார்.

கோயிலி தேவி
பட்டினிச் சாவடைந்த 11 வயது சந்தோஷி குமாரி – கோயிலிதேவியின் மகள்

ஆதார் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் இணைக்கப்படாததால் 4 கோடி ரேசன் கார்டுகள் வரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் அவையெல்லாம் போலி ரேசன் கார்டுகள் என்று கூறி அப்பிரச்சினையை சாதாரணமாகக் கடந்துவிட்டது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.

ஆனால் ”உண்மையான சிக்கல் என்னவென்றால் ஆதார் கார்டுகள் பெறாத மக்கள் ஏராளம் இருப்பதும், கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி போன்ற விவரங்களை ஆதாருடன் இணைக்க இயலாத தொழில்நுட்பக் கோளாறுகளும் தான் பெரும்பான்மையான காரணமாக இருக்கிறது. மேலும் உட்புற கிராமப் பகுதிகளிலும், பழங்குடி மக்களின் கிராமங்களிலும் மின்சார வசதியிலும், இணையதள வசதியிலும் சிக்கல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இப்பிரச்சினைகளின் காரணமாக சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு தெரியப்படுத்தாமலேயே ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கோயிலி தேவி தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

பட்டினிச் சாவுகள் குறித்த விசாரணை தேவை

ஆதார் இல்லை என்பதைக் காரணம் காட்டியோ அல்லது ஆதாரில் சிக்கல்கள் இருப்பதாகக் காரணம் காட்டியோ மக்களின் உணவுக்கான உரிமை (Right to Food) என்பது பறிக்கப்படக் கூடாது. 

கோயிலி தேவியின் குடும்பத்தின் ரேசன் கார்டானது ஆதாருடன் இணைகப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் அவரின் மகள் பட்டினிச் சாவுக்கு உள்ளாக நேர்ந்தது. எனவே பட்டினிச் சாவுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ரத்து செய்யப்பட்ட ரேசன் கார்டுகளை மீண்டும் வழங்கிட வேண்டும் என்றும், தனது மகளின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

சட்டரீதியான உரிமைகளைப் பெற ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது

சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவதற்கு ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும், ஆதாரை முன்வைத்து அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் கோலின் கோன்செல்வேஸ் குற்றம் சாட்டினார். 

மறைக்கப்படுகிறது பட்டினிச் சாவுகள்

இதன் காரணமாக உத்திரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் பசியில் தள்ளப்பட்டிருப்பதும், பட்டினிச் சாவுகள் தொடர்ந்து நடைபெற்றும் வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த மாநிலங்கள் அத்தகைய இறப்புகளுக்கு மலேரியா, வயிற்றுப்போக்கு என பல காரணங்களை சொல்லிவிடுவதாகவும் தெரிவித்தார்.

மாநிலங்களே ரேசன் கார்டுகளை விநியோகிக்கின்றன – ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமன் லேகி, ரேசன் கார்டுகளை விநியோகிப்பது மாநில அரசுகளின் பொறுப்பில் இருப்பதாகவும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, மனுதாரர் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு வந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அதனை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர் கோன்சால்வேஸ், எந்தவொரு மாநிலத்திலும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் மாநில அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். 

இது தீவிரமான பிரச்சினை

ஒன்றிய அரசின் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, 3 கோடி மக்களின் ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, அதனால் இந்த வழக்கை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *