டீக்கடைகளும் தமிழக அரசியலும்

தமிழக தேர்தல்களில் டீக்கடையும், பாட்டிகளும்

தமிழ்நாட்டில் டீக்கடைகளுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய பாரம்பரியம் உண்டு. தமிழ்நாட்டின் டீக்கடை வாசல்களில் உள்ளூர் எம்.எல்.ஏ தொடங்கி டொனால்ட் ட்ரம்ப் வரை அனைவரும் கிழித்து தொங்கவிடப்படுவார்கள். பெட்ரோல் விலை, கேஸ் விலை தொடங்கி ஈராக்-அமெரிக்கா சண்டை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த பார்வையில் பேசி, வாதம் செய்து கதிகலங்கச் செய்து விடுவார்கள். 

டீக்கடைகளின் அரசியல் வரலாறு

இது ஏதோ இன்று நேற்று தொடங்கியதல்ல. சமூக வலைதளங்களும், 24 மணிநேர செய்தி தொலைக்காட்சிகளும் வருவதற்கு முன்பே பத்திரிக்கைகளை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் அரசின் கண்காணிப்புக்கு உள்ளான இடங்களில் டீக்கடை முக்கியமான ஒன்றாக இருந்ததாக சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இ.சுந்தரம் தினமணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

டீ குடிக்க வருவோர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டக்கூடும் என்று, தொடர் கட்டுப்பாடுகளுக்குள் டீ கடைகளை ஆங்கிலேயர் வைத்திருந்தனர். அந்த காலத்தில் ஒரு டீ கடை தொடங்க வேண்டுமென்றால் காவல்துறையிடம் உரிமம் பெற்றாக வேண்டும். இந்த உரிமம் பெறுவதிலும் நிபந்தனைகள் உண்டு. அதில் முக்கியமானது அரசியல் நடவடிக்கைகளை பேசக் கூடாது என்பது. 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், டீ கடைகளுக்கான உரிமம் பெற வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்தது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதாக சுந்தரம் தெரிவிக்கிறார். டீ கடைகளில் அரசியல் பேசுவதால் பலரும் அரசியல் விழிப்புணர்வைப் பெறுகிறார்கள் என்பதாலேயே ”இங்கு அரசியல் பேசக் கூடாது” எனப் பலகையில் எழுதி வைக்கும் முறையும் திடீரென வந்து சென்றது. 

அரசியல் தலைவர்களின் டீ குடிக்கும் சூத்திரம்

இன்றுவரை பிரச்சாரங்களுக்கு செல்லும் முக்கியத் தலைவர்கள் டீக்கடைக்கு ஒரு விசிட் அடித்து அதனை செய்தியாக்குவது முக்கிய நிகழ்வாய் மாறிப் போயிருக்கிறது. 

நேற்று பிரச்சாரத்திற்குச் சென்ற செல்லூர் ராஜூ டீக்கடையில் 500 ரூபாய்க்கு ஒரு டீ குடித்திருக்கிறார். இதேபோல்தான் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை டீ குடித்து, 2000 ரூபாய்க்கு ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டுவிட்டு வந்தார். 

செல்லூர் ராஜூ டீக்கடையில்
எடப்பாடி பழனிச்சாமி டீக்கடையில்

நமக்கு நாமே என்று பயணம் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினும் டீக்கடைகளை விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த ராகுல் காந்தியும் நேரடியாக ஒரு டீக்கடைக்கு உள்ளே சென்று தானும் வந்துவிட்டேன் என்பதை பதிவு செய்திருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதே பாணியில் சாலையில் இருக்கும் ஹைவே ஓட்டல் ஒன்றில் புகுந்து மதிய உணவை சாப்பிட்டு தன் வருகையை செய்தியாக்கினார்.

டீக்கடையில் மு.க.ஸ்டாலின்
டீக்கடையில் ராகுல் காந்தி
டீக்கடையில் குஷ்பூ

எத்தனை கோடி வைத்திருந்தாலும் தங்களை எளிமையானவர்களாக காட்டிக் கொள்வதற்கு அரசியல் தலைவர்களிடம் தமிழ்நாட்டு டீக்கடைகள் மாட்டிக் கொண்டு பாடாய் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

பாட்டிகளை கட்டிப்பிடிக்கும் புகைப்படம்

இதேபோல்தான், அரசியல் பிரச்சாரங்களின் போது பாட்டிகளை கட்டிப்பிடித்து அந்த புகைப்படத்தினை எங்கு பார்த்தாலும் அடித்து ஒட்டுவதும் ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆர். தொடங்கிவைத்த இந்த பாட்டிகளை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுக்கும் கலாச்சாரத்தினை, எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியலை அப்படியே பின்பற்றி அடுத்தடுத்து வந்தவர்களும் தொடர்ந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த பிம்பச் சிறையிலிருந்து தப்பவில்லை.

எம்.ஜி.ஆர்
மு.க.ஸ்டாலின்

கருப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை முன்னிறுத்திக் கொண்ட விஜயகாந்த் முதல் சீமான் வரை இந்த பிம்ப அரசியல் தொடர்ந்தது. 

விஜயகாந்த்

பாவம் குழந்தைகள்

பாட்டிகளுக்குப் பிறகு குழந்தைகளைத் தூக்கி கொஞ்சுவதைப் போல போஸ் கொடுப்பது அடுத்த அரசியல் ட்ரெண்டானது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின்போது ஒரு குழந்தையை வாங்கி கொஞ்ச முயல அது அழுகையை நிறுத்தவே இல்லை. அவரும் புகைப்படம் எடுக்கும்வரை அழுதாலும் பரவாயில்லை என்று குழந்தையைக் கொஞ்சுவதை நிறுத்தவில்லை. கடைசியில் சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு இது ட்ரால் மெட்டீரியலாகிப் போனது. 

எல்லோரும் பாத்துக்கோங்க நான் ஆட்டோவுல போறேன்

சமீபத்தில் கோவை தொகுதியில் வாக்கிங் செல்வது போல் சென்று கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன், அனைவருக்கும் கைகொடுத்துக் கொண்டே திடீரென ஒரு ஆட்டோகாரரை அழைத்து, தாஜ் ஓட்டல் போவீங்களா என்று கேட்க, ஆட்டோவில் அமர்ந்து கொண்டே கையசைத்துக் கொண்டே சென்றார். ஆட்டோவில் செல்வதன் மூலம் தன் எளிமையைக் காட்ட கமல்ஹாசன் செய்த இந்த ராஜதந்திரம் சரியாக ஒத்துப் போகவில்லை. ”போறது தாஜ் ஓட்டலுக்கு, அப்புறம் எதுக்கு ஆட்டோல போற எளிய மனிதர் மாதிரி காட்டிக்கனும்” அப்டின்னு கமெண்ட்களில் சிதறவிட அதுவும் ட்ரால் மெட்டீரியலாகிப் போனது. 

இப்படி டீக்கடைகள் தொடங்கி, பாட்டி, குழந்தை என்று போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது, ஆட்டோவிலும், பஸ்சிலும் பயணித்து போட்டோ எடுப்பது, வாக்கிங் சென்று கை கொடுத்து போட்டோ எடுப்பது என்று பிரச்சார புகைப்படங்களுக்கான அடையாளங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எம்.ஜி.ஆர் தொடங்கி செல்லூர் ராஜூ வரை இந்த அரசியல் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கவே முடியாத அளவிற்கு பிணைந்து விட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *