டிஜிட்டல் மீடியா சுதந்திரம்

டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

ஆன்லைன் ஊடகங்களுக்கு புதிய விதிகளை பிறப்பித்து மோடி அரசு அனுப்பியுள்ள அறிவுறுத்தலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editor Guild Of India) எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் அறிக்கை

’தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) 2021’ (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021.) என்ற பெயரில் பிப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டுள்ள விதிகள் ஊடக சுதந்திரத்தினை பறித்திடும் வகையில் அமைந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற மேற்பார்வை இல்லாமலேயே ஒன்றிய அரசாங்கம் தானாக எந்தவொரு செய்தியையும் நீக்கவும், தடை செய்திடவும், மாற்றி அமைத்திடவும் இந்த புதிய விதிகள் அனுமதித்திருப்பதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது. 

செய்தி பதிப்பாளர்கள் இணையதளத்தில் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான அடிப்படை விதிகளையே மாற்றி அமைத்திருப்பதாகவும், மேலும் இந்த புதிய விதிகள் டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதித்திட வழிசெய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விதிகளை அறிவிப்பதற்கு முன்பு அரசாங்கம் எந்தவொரு ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை என்றும், இப்படிப்பட்ட விதிமுறைகளை கொண்டுவருவதற்கு முன்னர் முறையான ஆலோசனைகளையும், கருத்துக் கேட்பினையும் நடத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

கட்டுப்பாட்டில் இல்லாத சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அரசாங்கமானது, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சுதந்திர ஊடகத்திற்கான உரிமைகளை மூழ்கடிக்கக் கூடாது. ஊடக சுதந்திரமே நமது ஜனநாயகத்தின் அடித்தளமாகும் என்று எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது. 

DIGIPUB அமைப்பின் எதிர்ப்பு

டிஜிபப் (DIGIPUB) எனப்படும் டிஜிட்டல் மீடியா சங்கமும் இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செய்தி என்பதன் அடிப்படை கொள்கைக்கும், ஜனநாயகத்தில் செய்திகள் ஆற்றுகின்ற பங்கிற்கும் இந்த புதிய விதிகள் எதிரானதாக இருப்பதாக இச்சங்கம் தெரிவித்துள்ளது. டிஜிபப் என்பது TheWire, Scroll.in, Newsclick, TheQuint, TheNewsMinute, AltNews, Article14, NewsLaundary உள்ளிட்ட 11 முன்னணி டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து உருவாக்கிய சங்கமாகும். டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் அவற்றின் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இச்சங்கம் உருவாக்கப்பட்டது. 

இந்த விதிகளின் அடிப்படையில் குறிவைக்கப்பட்ட முதல் ஊடகம்

மார்ச் 2-ம் தேதி பாஜக அரசு வெளியிட்ட இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மணிப்பூரைச் சேர்ந்த Frontier Manipur என்ற செய்திதளத்தினை குறிவைத்து முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அச்செய்தி தளத்தின் ஊடகவியலாளர்களில் ஒருவரான கிஷோக் சந்திர வான்கெம் மோடி அரசினை விமர்சித்து பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நோட்டிஸ் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *