விவசாயிகள் போராட்டம்

100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!

புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து நவம்பர் 25, 2020 அன்று ’டெல்லி சலோ’ என்று டெல்லியின் எல்லையை நோக்கி கிளம்பிய விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை எட்டியிருக்கிறது. கடும் குளிர், மழை, வெயில் என்று அனைத்தையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்திருக்கிறார்கள். 

விவசாயிகள் போராடவில்லை இடைத்தரகர்கள் போராடுகிறார்கள்; போராடுபவர்கள் வெளிநாட்டுக் கைக்கூலிகள்; இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்; போராடுபவர்கள் வன்முறையாளர்கள்; பிரிவினைவாதிகள் இப்படி ஆளுங்கட்சி தரப்பினர் வைத்த அத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் சோர்வின்றி விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வருமானத்தை இழந்தாலும் பரவாயில்லை, எதிர்காலம் முக்கியம் என்ற ஒற்றை இலக்குடன் டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். 

இந்த வீரமிகு போராட்டம் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

நவம்பர் 26, 2020: விவசாயிகள் 6 மாத காலம் தங்குவதற்கான பொருட்களை டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு அலையலையாய் டெல்லியை நோக்கி பேரணியாய் சென்றனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினால் தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டும், கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. எல்லாவற்றையும் மீறி சிங்கு எல்லையில் சாலையில் அமர்ந்தனர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்.

டிசம்பர் 3, 2020: அரசாங்கம் விவசாயிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அப்பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. விவசாய சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர்த்து வேறெந்த தீர்வையும் ஏற்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. பேச்சுவார்த்தையின் போது அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தினை மறுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த உணவையே உண்டனர்.

டிசம்பர் 5, 2020:  இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று பாஜக அரசு விடாப்பிடியாக இருந்ததால் இதுவும் தோல்வியில் முடிந்தது. 

டிசம்பர் 8, 2020: நாடு தழுவிய பாரத் பந்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். பல்வேறு மாநில விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவினை வழங்கினர். 

டிசம்பர் 9, 2020: மூன்று சட்டங்களில் திருத்தங்களை மட்டும் கொண்டுவருகிறோம், சட்டங்களை நீக்க முடியாது எனும் அரசாங்கத்தின் முடிவை விவசாயிகள் நிராகரித்தனர். 

டிசம்பர் 11, 2020: மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பாரதிய கிசான் யூனியன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. 

டிசம்பர் 16, 2020: உச்சநீதிமன்றம் விவசாய சட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு குழுவினை அமைத்தது. அந்த குழுவில் இருப்பவர்கள் அனைவரும் விவசாய சட்டத்தினை ஆதரித்து பேசியவர்கள் என்று அக்குழுவின் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. 

டிசம்பர் 21, 2020: விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 

ஜனவரி 4, 2021: ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதுவும் தோல்வியில் முடிந்தது. 

ஜனவரி 12, 2021: சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 

ஜனவரி 26, 2021: குடியரசு நாளன்று விவசாயிகள் அனைவரும் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை அறிவித்து நடத்தினர். டிராக்டர் பேரணியின் போது அமைதியான போராட்டத்தில் மர்ம கும்பலால் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டன. பாஜக அரசு திட்டமிட்டு வன்முறையை ஏவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. பேரணியாகச் சென்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.  

இந்த டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற காவல்துறை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 

இந்த வன்முறையைக் காரணமாகக் காட்டி போராட்டத்தை முற்றிலுமாக முடக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. 

இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. டெல்லி எல்லைகள் அடைக்கப்பட்டன. ஊடகங்களுக்கு உள்ளே செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இந்த வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என்பதை விவசாயிகள் சங்கத்தினர் உறுதியாகத் தெரிவித்தனர். 

ஜனவரி 28, 2021: டெல்லியின் காசிப்பூர் எல்லைப் பகுதியில் பகுதியில் குவிந்திருந்த விவசாயிகள் வெளியேற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்தது. ராகேஷ் திகைத் உள்ளிட்ட விவசாயிகள் வெளியேறுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். 

பிப்ரவரி 4, 2021: சர்வதேச இளம் சூழலியல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க், பாப் பாடகி ரிஹானா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

பிப்ரவரி 6, 2021: பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். 

பிப்ரவரி 14, 2021: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரை ஆவணமான டூல் கிட்டினை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கிரேட்டா துன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிந்திருந்தது. அந்த டூல்கிட்டை தயாரித்தவர்களில் ஒருவர் என்று குற்றம்சாட்டி, பெங்களூரைச் சேர்ந்த 21 வயது சூழலியல் செயல்பாட்டாளரான திஷா ரவியை டெல்லி காவல்துறை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது. மேலும் இருவரை அந்த வழக்கில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் துவங்கியது. திஷா ரவியின் கைதுக்கு நாடு முழுதும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பிப்ரவரி 18, 2021: சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய சங்கம் நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து நடத்தியது. 

மார்ச் 5, 2021: பஞ்சாப் சட்டமன்றத்தில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மார்ச் 6, 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த நாளை கருப்பு நாளாக அறிவித்து சில இடங்களில் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *