modi meeting with chief ministers

கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!

கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் பிரபல ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார். அவர் எழுதியதன் சாராம்சங்களை இங்கு அளிக்கிறோம்.

ஊரடங்கு 1.0, 2.0, 3.0 என்று மேலிருந்துகொண்டு மாநிலங்களுக்கு உத்தரவிடும் முறையினை இந்திய ஒன்றிய அரசு செய்து வருகிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-னை பயன்படுத்தி மாநிலங்கள் மீதான மேலாதிக்கத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. பொது நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடு என்பதோ, வர்த்தக செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடு என்பவையோ மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டியவையே. ஆனால் கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகளை மாநிலங்களின் மீது திணித்து, கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் அதிகாரத்தை மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கி, தளர்த்தும் உரிமையை மறுத்திருக்கிறது. இத்தகைய மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையானது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே உண்மை.

சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்திருக்கிறது. இதில் பல பகுதிகளை சிவப்பு மண்டலங்களாக அறிவித்திருப்பதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனென்றால் அந்த மாவட்டங்கள் களத்தின் அடிப்படையில் பரந்த பெரிய மாவட்டங்களாக இருக்கின்றன. ஒரு மாவட்டத்தின் சிறிய பகுதியில் மட்டுமே தொற்று கண்டறியப்பட்டிருக்கும் போது மொத்த மாவட்டத்திலும் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவது தேவையில்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலமான கேரளா அரசு, புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு, நோயிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், ஏப்ரல் மாதத்தின் மத்தியில், ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டுவர திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால் தளர்த்தப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசு கேரள அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது. இது சட்டப் பூர்வமான அணுகுமுறை அல்ல.

கூட்டாட்சி எப்படி இயங்குகிறது?

கூட்டாட்சி அணுகுமுறையின் படி ஒன்றிய பட்டியலில் (Union List – பட்டியல் I) இருக்கக் கூடிய விடயங்களில் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியும். மாநில பட்டியலில் (State List – பட்டியல் 2) இருக்கக் கூடிய விடயங்களில் சட்டமன்றம் சட்டமியற்ற முடியும். பொதுப்பட்டியலில் (Concurrent List – பட்டியல் 3) இருக்கக் கூடிய விடயங்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டுமே சட்டமியற்ற முடியும்.

பட்டிய 2 மற்றும் 3-ல் குறிப்பிடப்படாத விடயங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தினை அரசியலமைப்பு சாசனத்தின் விதி 248 பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது (பகுதி 97 -ன் வழியாக பட்டியல் 1-ன் கீழுள்ள விடயங்கள் இணைக்கப்பட்டு இந்த அதிகாரம் வழங்கப்படுகிறது).

அரசியலமைப்பு சாசன விதி 73 மத்திய அரசுக்கு பாராளுமன்றம் தொடர்பான விவகாரங்களில் மட்டும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் , விதி 162 மாநில அரசுக்கு சட்டமன்ற விவகாரங்களில் மட்டும் சட்டமியற்றும் அதிகாரத்தினையே அளித்திருக்கிறது.

பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act) மாநில அரசுகளுக்கு விதிமுறைகளையை அளித்திட ஒன்றிய அரசை அனுமதிக்கிறது. ஆனால் பேரிடர் மேலாண்மை சட்டம் என்பது ஒரு பெருந்தொற்றை (Pandemic) எதிர்கொள்வதில் பொருந்துமா என்பதே இங்கு முக்கியமான கேள்வி.

’பொது சுகாதாரம்’ (Public Health and Sanitation) என்பது மாநில பட்டியலின் கீழாக பகுதி 6-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் குறித்த விடயங்களில் முடிவெடுப்பதற்கு மாநில அரசுகளுக்கே பிரத்யேக அதிகாரம் உள்ளது என்பதையே இது குறிப்பிடுகிறது. எனவே சுகாதாரப் பெருந்தொற்றினை எதிர்கொள்ள ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு விதிமுறைகளை அளிப்பது என்பது, மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக அதிகாரத்தினை பறிக்கும் நடவடிக்கையாகும்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், ’இரண்டு மாநிலங்களுக்கு இடையில் பரவும் தொற்றுநோய்’ (‘Prevention of inter-State spread of contagious and infectious diseases’) குறித்தான விடயங்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசு இரண்டுக்கும் அதிகாரம் அளிக்கும் பொதுப்பட்டியலின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே கோட்பாட்டளவில் பார்த்தால், கொரோனா போன்ற, மாநிலங்களுக்கு இடையிலும் பரவும் தொற்று குறித்து ஆணைகளை அளிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவே தெரியும்.

தொற்று நோய்கள் சட்டம் 1987

ஆனால் தொற்று நோய்கள் சட்டம் 1987 (Epidemic Diseases Act 1987), தொற்று நோய்கள் பரவலை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தொற்று நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கே அதிகாரம் உண்டு. ஒன்றிய அரசின் அதிகாரம் என்பது இதில் நாட்டிற்கு உள்ளே அல்லது வெளியே பயணிக்கும் நபர்களை கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் மட்டுமே பொருந்தும்.

மாநிலங்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் தொற்று நோய்கள் சட்டத்தை விட்டுவிட்டு, பேரிடர் மேலாண்மை சட்டத்தினை பயன்படுத்துவதன் மூலம் மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு சவாரி செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகளுக்கு மாநில அரசுகள் சட்டப்படி கட்டுப்படத் தேவையில்லை. அவர்கள் இதனை நீதிமன்றத்தில் கொண்டு சென்று ஒன்றிய அரசுக்கு சவால் அளிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *