ritchie street

கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?

ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும்  பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவின் சில்லறை வர்த்தக மதிப்பு என்ன?

சில்லரை வணிகம் என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% பங்களிக்க கூடிய ஆதாவது ஆண்டுக்கு 50,50,000 கோடி ரூபாய் மதிப்பிலானது என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இதில் 93% Informal Sector என்று சொல்லக் கூடிய அமைப்பு சாரா தொழிலாக இயங்குகிறது, நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 கோடியே 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் இது இருக்கிறது. தற்பொழுது இந்த துறைகளில் 25% பேர் தங்கள் வணிகத்தை விட்டு வெளியேறுகிற  அபாய நிலையில் உள்ளார்கள்.

இது உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர் என்று பல கட்டங்களைக் கொண்ட ஒரு சங்கிலித் தொடர். இது முழுமையாக  சிதைந்துள்ளது. காய்கறி, கனிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தவிர மற்றவற்றின் விற்பனை 100 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.

என்னென்ன வர்த்தகத்தில் பாதிப்பு?

குறிப்பாக ஆடைகள், மின்னணு சாதனங்கள், ஃபா்னிச்சா்கள், வன்பொருள், குழந்தைகளுக்கான பொம்மைகள் போன்ற அனைத்து கடைகளும் பாதிப்புக்குள்ளாகியிருகிறது. பெரும்பாலும் காய்கறிகள், பழங்களைப்  பொறுத்தவரை சாலையோர வீதி விற்பனையாளர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அவை அனைத்தும் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழகத்தில் நேரடியாக 70 லட்சம் பேர் இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளாதாகவும், இதன்மூலம் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பு  பெறுகிறார்கள் என்றும் வணிகர் சங்கங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் பெரும்பான்மையான வணிகம் என்பது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை மையப்படுத்தி  செயல்படுவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

சிதைவுக்குள்ளான தி.நகரின் சிறு தொழில்கள்

உதாரணமாக சென்னை தியாகராய நகரைச் சுற்றி பல பெரிய சில்லரை வணிக நிறுவனங்களும், அந்த பெரிய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை நம்பி நூற்றுக்கணக்கான சிறிய கடைகளும், பலநூறு  சாலையோர விற்பனையாளர்களும், டெய்லர்களும், இதர தொழிலாளர்களும் என்று  பல்லாயிரக்கணாக்கானோரின் வாழ்வாதாரம் இருக்கிறது. இனி  அந்த பெரிய கடைகள் திறந்து வாடிக்கையாளர்கள் வருவதற்கும் மக்களிடம் பண புழக்கம் இருக்கும் பட்சத்தில் தான் வருவார்கள். இதுவும் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. 

தி.நகரின் சில்லறை வர்த்தகம்

இன்று  கோயம்பேடு சந்தை  திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.    கோயம்பேட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வணிகர்கள் மட்டுமே இல்லை. தினமும் தண்டல் வாங்கி காய்கறிகளை சில்லரைக்கு விற்கும்  நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இதே தான் பாண்டி பஜாருக்கும்  ரிச்சி தெருவுக்கும், மதுரை விளக்கு தூணுக்கும், கோவை ஒப்பனக்கார வீதி மற்றும் டவுன் ஹால் சாலைக்கும் பொருந்தும். ஏன் நாடு முழுமைக்குமே   பொருந்தும் என்பது தான் உண்மை.

கோயம்பேடு சந்தை

இதில் பெரும்பான்மையான சிறு வணிகர்கள், வங்கி கடன் எல்லைக்குள் எல்லாம் இன்னும் வராதவர்கள். தினந்தோரும் நாள் வட்டிக்கு கடன் வாங்கி  வணிகம் செய்யும் இவர்களிடம் சேமிப்பும் பெரிதாக இருக்காது.

இந்த இரண்டு மாத ஊரடங்கு காலத்தின் அன்றாட  தேவைகளுக்கே கடன் பட்டிருப்பவர்கள், வணிகத்தை மீண்டும் துவங்குவதற்கான மூலதனம் இன்றி, மேலும் கடன் வாங்கும் நிலையிலேயே இருக்கிறார்கள்.

கோயம்பேடு – திருமழிசை மாற்றத்தால் என்ன பாதிப்பு?

சென்னையின் மிகப்பெரிய கோயம்பேடு சந்தை முற்றிலும் நிர்மூலமாகி  தொழிலாளர்களும் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில்  இருக்கிறார்கள். எபொழுது அது  இயல்பு நிலைக்கு திரும்பும் என்றே தெரியவில்லை. இதற்குமுன் சென்னை முழுக்க உள்ள காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் கோயம்பேட்டில் தான் கொள்முதல் செய்தார்கள். இப்பொழுது அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசைக்கு செல்ல வேண்டும் .

வியாபாரம் பெரிதாக நடக்காத காலத்தில் இது கூடுதல் செலவு. இந்த பெரிய வணிக சந்தைகள் மட்டுமல்லாமல், சென்னை பல்லாவரம் முதல்  கன்னியாகுமரி மாவட்டம் ஊரும்பு வரை நூற்றுக்கணக்கான வார சந்தைகளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம். அத்தனை பேரும் இன்று சேமிப்பும் இல்லாமல், தொழிலும் இல்லாமல், மூலதனமும் இல்லாமல்  அன்றாட பாடுகளுக்கு கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள் . இவர்களுக்கான பொருளாதாரத் திட்டங்களை அரசு  செய்யவில்லை என்றால் கந்து வட்டிகாரர்களிடம்  சிக்கி இன்னும் பெரும் ஆபாயங்கள்  உருவாகும்  வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *