பேரரசுகள் காலம்தொட்டு இன்றைய ஏகாதிபத்திய காலம் வரைக்கும் அதிகாரவர்க்கம் போர் வீரர்களையும், ஆயுதத்தையும், ராணுவத்தையும் கொண்டு கட்டியெழுப்பிய ரத்த சகதிகளுக்குள் வீழ்ந்த பெரும் மனித சமூகத்தை மீட்ட வரலாறு செவிலியர்களுடைய வரலாறாக இருக்கிறது.
முதல் உலக போரிலும், இரண்டாம் உலக போரிலும் ஏற்பட்ட மாபெரும் மனித இழப்புகள் செவிலியர்களின் தேவையை உலகிற்கு உணர்த்தியது. இரண்டு உலகப் போர்களிலும், போர் முனைகளிலும் உள்நாட்டிற்குள்ளும் ஏற்பட்ட பெரும் மனித இழப்புகளை தடுக்கப் போராடியது அடித்தட்டு மக்களில் இருந்து உருவான செவிலியர்களே.

இந்தியாவில் அசோகர் காலத்திலேயே பொது மருத்துவத்திற்காக கட்டமைப்புகள் துவங்கியதற்கான வரலாறுகள் கிடைக்கின்றன, அசோகரில் துவங்கி பவுத்தம் செழித்து வழங்கிய கிபி 750 வரையிலும் இந்தியாவில் மருத்துவம் செழித்து வளர்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
ஐரோப்பாவில் ரோமப் பேரரசு காலத்திலேயே மருத்துவமனைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மத்திய கால ஐரோப்பாவில் மதத்தோடு பிணைத்து மந்தமாக வளர்ந்த மருத்துவ செவிலியர் சேவைகள் 1850 களில் நடந்த கிரிமன் போரில் புகழ்பெற்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்றவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு மறுமலர்ச்சி கண்டது.
மனித இனம் போர்களை முன்வைத்த தோற்ற போதெல்லாம் அன்பையும் கருணையையும் முன்வைத்து செவிலியர்கள் வென்றிருக்கிறார்கள். இன்றைக்கு உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனோவிற்கு எதிராக வல்லரசுகளின் பேராயுதங்கள் அவமானகரமாய் விழுந்து கொண்டிருக்கும்போது மருத்துவர்களும் செவிலியர்களும் எழுந்து நின்று மனித இனத்திற்காக போராடிக்கொண்டிருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பர்.
இப்படிப்பட்ட வரலாறுடைய செவிலியர்கள் ஆளும் அரசுகளால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற உரையாடலை துவக்குவதுதான் இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.
கொரோனோவிற்கு எதிரான போரில் மருத்துவப் பணியாளர்கள்தான் படைவீரர்கள், இந்திய மக்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்று திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தபோது மருத்துவப் பணியாளர்கள் தங்களுடைய பாதுகாப்பு உபகாரணங்கள் கேட்டு போராடிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி இறுதியில், கொரோனோ பேராபத்தை எதிர்கொள்ள மருத்துவர்களுக்கான PPE கிட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அரசிற்கு அனுப்பப்பட்ட பரிந்துரை 6 வார காலம் கிடப்பில் போடப்பட்டதை பற்றிய எந்த தயக்கமும் இல்லாமல் நம்மை கைதட்டவும், விளக்கு ஏற்றவும் சொல்லிக் கொண்டிருந்தது ஆளும் பாஜக அரசு.
தமிழ்நாட்டின் செவிலியர்களில் பெரும்பாலானோர், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர். பல மணிநேரங்கள் பேருந்துகளில் பயணம் செய்துதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு மாதத்திற்கு 7700 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. காலமுறை ஊதியம் வழங்கக் கோரி பலமுறை பல போராட்டங்கள் நடத்தியும் இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இரவும் பகலுமாக மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவரகளின் போராட்டத்தையும் தமிழக அரசு அவமதிக்கவே செய்தது. அவர்கள் போராடிய வளாகத்தின் கழிவறைகள் மூடப்பட்டன. செவிலியர்கள் போராட்டம் நடத்திய போது, ஊதியம் போதவில்லை என்றால் விலகிக் கொள்ளவேண்டியது தானே என்றார் அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.

இன்று நாம் செவிலியர்களை பல்வேறு மொழிகளில் புகழ்ந்து புனிதப் படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் புனிதப்படுத்தலில் என்ன இருக்கிறது? அவர்களின் போராட்டங்களின் கோரிக்கைகள் அப்படியேதானே இருக்கின்றன. அரசு கைத்தட்டுவதற்கு பதிலாக அவர்களுக்கு முறையான சம்பளத்தைக் கொடுப்பதுதானே சரியான வழியாக இருக்க முடியும். நூறுக்கும் மேற்பட்ட கி.மீ பயணிக்கும் செவிலியர்கள் கூட இருக்கிறார்கள். செவிலியர்களுக்கு மருத்துவமனைகளுக்கு அருகே குடியிருப்பினை கட்டித் தருவதில் என்ன தயக்கம் இருக்கிறது? செவிலியர்களுக்காக நாம் கைதட்டுவது போதாது. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்போம்.
இன்றுவரைக்கும் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு எந்த தயக்கமும் இல்லாமல் செவிலியர்களின் அர்ப்பணிப்பை நம்பியே கோரனோ பேரிடரை சமாளித்து வருகிறது. எப்போதும் போல இப்போதும் செவிலியர்களே மனித இனத்தை காக்க படைவீரர்களாக முன்வருகிறார்கள். அப்பாவி சாமானியர்களுக்குத்தான் யார் நமக்கான படைவீர்கள் என்பதில் குழப்பம் தீர்ந்த பாடில்லை.