அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கையெழுத்தாகவுள்ள BECA ஒப்பந்தம்
புவிசார் தகவல் பரிமாற்ற கூட்டுறவு ஒப்பந்தம் – ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த 2+2 என்று அழைக்கப்படும் இந்த சந்திப்பில் புவிசார் தகவல் பரிமாற்ற கூட்டுறவு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation for Geo-Spatial Agreement- BECA) கையெழுத்தாக இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வான், நில, கடற் பரப்பில் மிக தொலைவிலுள்ள இலக்குகளையும், மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஏவுகணை தாக்குதல் நிகழ்த்துவதற்கான ‘அமைவிடம்’ குறித்த அதி உயர் செயற்கோள் தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்துகொள்ளும்.
தெற்காசியாவில் தனது ராணுவ நலனை முன்னிறுத்தி 2002-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
இதற்கு முன்பாக அமெரிக்காவுடன் ராணுவம் மற்றும் வெளியுறவு தொடர்பாக 2002-ம் ஆண்டு, இருநாட்டு பொதுப் பாதுகாப்பிற்கான ராணுவ தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது.
LEMOA ஒப்பந்தம்
2016-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் இந்தியாவின் படைத் தளங்களைப் பயன்படுத்தவும், எரிபொருள் நிரப்பவும் அனுமதிக்கும் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement – LEMOA) இந்தியா- அமெரிக்காவிடையே கையெழுத்தானது.
COMCASA ஒப்பந்தம்
அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு ராணுவ தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயலாற்றுவதற்கான ஒப்பந்தம் (Communication, Compatibility And Security Arrangement – COMCASA) கையெழுத்தானது.
QUAD சந்திப்பின் தொடர்ச்சியாக BECA ஒப்பந்தம்
அதன் தொடர்ச்சியாக தற்போது கையெழுத்தாகவுள்ள புவிசார் தகவல் பரிமாற்ற கூட்டுறவு ஒப்பந்தமானது (BECA), அமெரிக்கா இந்தியாவினைத் தளமாகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பயன்படும்; இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்படைத் தளமாக இந்தியா செயலாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்கக் கூடியது.
இம்மாத தொடக்கத்தில் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே, இந்தோ- பசுபிக் கடற்பரப்பில் சீனாவை எதிர்கொள்வது குறித்து நடைபெற்ற நாற்தரப்பு சந்திப்பின் (QUAD Meeting) தொடர்ச்சியாகவே தற்போதைய 2+2 கூட்டம் நடக்கவுள்ளது.
2+2 கூட்டங்கள்
அமெரிக்க வர்த்தகத்தையும், தெற்காசியா மற்றும் இந்தோ- பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்க ராணுவ நலனையும் முன்னிறுத்தி தொடர்ச்சியாக இந்தியா மற்றும் அமெரிக்காவிடையே 2+2 கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் 2+2 கூட்டம் 2018-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது; அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ் மற்றும் அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் அமெரிக்க தரப்பிலும், முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் ஆகியோர் இந்திய தரப்பிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் ராணுவ தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இனைந்து செயலாற்றுவதற்கான ஒப்பந்தம் (COMCASA – Communication, Compatibility And Security Arrangement) ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரண்டாம் 2+2 கூட்டம், 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. தற்போதைய மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க, இந்திய பிரதிநிதிகளே இரண்டாவது கூட்டத்திலும் பங்கேற்றனர்.
மோடி அரசின் அமெரிக்க சார்பு கொள்கை
2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்ததிலிருந்தே அமெரிக்க சார்பான முடிவுகளை எடுத்து வருகிறது. அமெரிக்கத் தரப்பில் மிக நீண்ட நாட்களாக இந்தியாவுடன் விவாதிக்கப்பட்டு, கையெழுத்திடப்படாமல் இருந்த பல ஒப்பந்தங்களில் மோடி அரசு கையெழுத்திட்டிருக்கிறது.
2016-ம் ஆண்டில் கையெழுத்தான தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement – LEMOA) மற்றும் 2018-ல் கையெழுத்தான
ராணுவ தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இனைந்து செயலாற்றுவதற்கான ஒப்பந்தம் (Communication, Compatibility And Security Arrangement – COMCASA) ஆகியவை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவால் இந்தியாவுடன் விவாதிக்கப்பட்டு கையெழுத்திடாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தவை ஆகும்.
மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவசாய உற்பத்தியைப் பாதுகாக்க, பன்னாட்டு விவசாய உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. இத்தகைய கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கும் வகையில், உலக வர்த்தகக் கழகத்தின்(WTO) வணிக வசதி ஒப்பந்ததில் (Trade Facilitation Agreement) இந்தியா கையெழுத்திட வேண்டுமென அமெரிக்க அழுத்தம் தந்து வந்தது.
மோடி அரசின் அமெரிக்க உறவின் விளைவாக அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, வணிக வசதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விளைவாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் தடைகளற்று இறக்குமதி செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கான சிறு வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்காவில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த 200 மில்லியன் மதிப்புடைய இறக்குமதி வரிச் சலுகையை அமெரிக்கா நீக்கியிருந்தது. அமெரிக்காவின் இந்திய இறக்குமதிகளுக்கான முந்தைய வரிச் சலுகையை இந்தியா மீளப் பெற முயன்ற போது, 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தன்னிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்ய வேண்டுமென அமெரிக்கத் தரப்பில் கோரப்பட்டிருந்தது;
மிக முக்கியமாக விவசாய விளைபொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் தந்து வந்தது. எனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாவதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் விவசாய விளைபொருட்களின் இறக்குமதிக்கு சாதகமான சூழலை, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட, பாஜக அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்கள் வழங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மோடி அரசு கொள்கை ரீதியாக அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை முன் வைத்தே மோடி அரசு, அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்பதாக பிரச்சாரங்களை செய்து வருகிறது.
சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்பதில் இந்தியாவிற்கு எத்தகைய பிரச்சனை இருக்கிறதோ, அதே பிரச்சனை அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்பதிலும் இருக்கிறது. இந்தியாவில் நீக்கமற நிறைந்திருக்கும் சீன முதலீடுகளை அனுமதித்துக் கொண்டே, சீனாவை எதிர்க்கிறோமென்ற பெயரில் மோடி அரசு மேற்கொள்ளும் அமெரிக்கச் சார்பானது, இந்திய இறையாண்மையையும், இந்திய உள்நாட்டு உற்பத்தியையுமே அழிக்கக் கூடியதாகும்.