மருது பாண்டியர்

கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி

இன்று சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.

கோயம்புத்தூர் பகுதி என்பது திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியும் மற்றும் திப்பு சுல்தானின் இறப்புக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியும் என்று இரண்டு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் ஒன்று சேரும் இடம். சுற்றிலும் மலை சூழ்ந்திருந்ததால் இந்த பகுதி பாதுகாப்பு மிக்கது. கோயம்புத்தூர் பகுதி மக்கள் புரட்சியாளர்களுக்கு ஆதரவானவர்கள். அதனால் கோயம்புத்தூரைப் போராளிகள் குறிவைத்தனர். சின்னமலைக்கு செல்வாக்குள்ள பகுதி.

சிறையை உடைத்து கைதிகளை காப்பாற்றும் திட்டம் 

பெரும் சிறை ஒன்றை உடைத்து அங்குள்ள கைதிகளைக் காப்பாற்றினால் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயர்களும் மிரண்டு விடுவார்கள் என்றும், சிறையை உடைத்த போராளிகள் பலம் மிகுந்தவர்கள் என்று பொதுமக்கள் மத்தியில் போராளிகளின் மதிப்பு உயரும் என்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராளிகளுக்கு சொல்லியிருந்தனர். 

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரின் பாஸ்டர் சிறையை பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள் உடைத்து பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போல, கம்பெனி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்ன மருதுவின் தலைமையில் விருப்பாச்சியில் கூடிய குழுவினர் முடிவு செய்தனர். 

யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. சிவகங்கையின் ஆட்களும் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆட்களும் பல்லடம், திருப்பூர்ப் பகுதிகளுக்கு மே மாதம் கடைசி வாரத்தில் வந்து விடுவதென்று முடிவு செய்யப்பட்டது. கான் இஷா கான் நாலாயிரம் குதிரைப் படையினரை குஜெல்கட்டி கணவாய் வழியாக கோயம்புத்தூருக்கு அழைத்து வருவதென்று முடிவாயிற்று. சிறை உடைப்பிற்காக அவர்கள் தேர்ந்தேர்ந்தெடுத்த தேதி ஜூன் 3. மொகரம் விழாவின் ஒன்பதாவது நாள். 

கிருஷ்ணப்ப நாயக்கரையும் துந்தாஜி வாக்கையும் முடக்க திட்டமிட்ட வெல்லெஸ்ஸி

கல்கத்தாவிலிருந்த கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்ஸி, மராத்திய வீரன் தூந்தாஜி வாக்கையும், பெல்ஹாம் கிருஷ்ணப்ப நாயக்கரையும் அவர்கள் பகுதியிலேயே முடக்குமாறு தனது தம்பியும் மைசூர் ரெசிடெண்டுமான லெப்.கர்னல் ஆர்தர் வெல்லெஸ்ஸிக்கு உத்தரவிட்டான். 

ஆர்தர் வெல்லெஸ்லி மைசூர் உடையார் அரசரின் ஆலோசகரான பூர்ணய்யாவிடம் தனது அண்ணனான கவர்னர் ஜெனரலின் உத்தரவைத் தெரிவித்தான். கம்பெனிப் படைகளோடு மைசூர்ப் படைகளும் வர வேண்டும் என்று ஆர்தர் கேட்டுக் கொண்டான். ஏனோ,ஆர்தர் வெல்லெஸ்ஸி தூந்தாஜி வாக்கைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான். முதலில் பெல்ஹாம் கிருஷ்ணப்ப நாயக்கரைத் தேடினான்.

பெல்ஹாம் தாக்கப்பட்டது எனத் தெரிந்தவுடன் தூந்தாஜி வாக் தானாகவே போரட்டத்தைத் துவக்கினார். அவரது குதிரைப்படைக்கு ஷோலாப்பூர், கோல்காப்பூர் அரசர்களின் உதவி கிடைத்தது. 

ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அன்று வருடாந்திரச் சம்பளம் கொடுக்கும் நாள். அவர்கள் சம்பளப் பணத்தை வாங்குவதில் ஆர்வமாகயிருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார்கள். காரணம் தெரியாமலேயே அந்தத் தாக்குதலைத் தொடங்குவதா, வேண்டாமா என ஆங்காங்கு போராட்டக் குழுவினர் தடுமாறிக் கொண்டிருந்தனர். அதனால் கோயம்புத்தூரைத் தாக்குவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை கூட்டம் போட்டு முடிவு செய்யலாம் என போராளிகள் நினைத்தனர். 

போராட்டத் தலைவர்களுடன் சின்ன மருது நடத்திய ஆலோசனை

தன்னோடு “வீரர்கள் யாரும் வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, சாரட் வண்டியில் சின்ன மருது ஏறிக்கொண்டார். வண்டியோட்டியிடம், “எதிரில் ஆங்கில அதிகாரிகள் யாரும் வந்தால் நம் சிவகங்கைச் சீமையின் கொடியை ஆட்டி அவர்களுக்கு வணக்கம் தெரிவி. அவர்கள் வண்டியிலிருந்து நமது வண்டியில் பறக்கும் சிவகங்கைக் கொடியைப் பார்த்து வணக்கம் செய்தால், நீ பதில் வணக்கம் செய். வண்டியை மட்டும் நான் சொல்லுகிற இடத்தைத் தவிர்த்து வேறு எங்கும் நிறுத்த வேண்டாம். இப்போது நேராக நத்தம் செல்” என்றார். 

போராட்டத் தலைவர்களான கோயம்புத்தூர் நரசிங்கப்பா, சின்னமலை, அப்பாஜி கவுண்டர், கோவைப் பகுதி போராளித் தலைவர் இச்சிபட்டிஅமில்தார் சேக் உசேன், அரவக்குறிச்சி கோர்காக் கவுண்டர், ஓசூர் பத்தே முகம்மது, முன்னாள் தாசில்தார் சேசய்யன், சோமைய்யா ஆகியோருடன் சின்ன மருது ஆலோசனை நடத்தினார். “தகவல் தொடர்பு எதுவும் சரியாக அமையவில்லை. தூந்தாஜி வாக்கின் கருப்புக் குதிரையும் போராளிப் பகுதியில் எங்கும் தட்டுப்படவில்லை. நாம் திட்டமிட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தூந்தாஜி வாக் ஆங்கிலேயர்களுடன் போரைத் தொடங்கி விட்டார் எனத் தெரிகிறது. உறுதியான தகவல்கள் இன்னும் நம்மை வந்து சேரவில்லை. எனவே, இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று சின்ன மருது முடிவு செய்தார். 

அதுவரை அந்தந்தப் பகுதிகளில் பதுங்கியுள்ள போராளிகள் பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோயம்புத்தூரில் பதுங்கி உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்து இருப்பதாக நரசிங்கப்பா சொன்னார். 

கோயம்புத்தூர் நரசிங்கப்பா வீட்டில் தாசில்தார் வருகை

கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் கோயம்புத்தூரில் உள்ள நரசிங்கப்பா வீட்டிற்குக் கோயம்புத்தூர் தாசில்தார் வந்தார். வீட்டில் இருந்த பெண்களிடம் “ஒரு வாரமாக உங்கள் வீட்டில் விருந்தும் கோலாகலமுமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்ன விசேசம்?” என்றார்.  நரசிங்கப்பாவின் மனைவி, “ஐயா, நாங்கள் மராத்திய பிராமணர்கள். திருமணத்திற்கு முன்பு சம்பந்திக்கு விருந்து வைப்பது வழக்கம். அவரவர் வசதிக்கேற்ப இரண்டு நாள் விருந்து, ஐந்து நாள் விருந்து, பத்து நாள் விருந்து என்று ஒருமாதம் கூடவிருந்து வைப்போம். எங்களது புதிய சம்பந்திகள் எங்களுக்கு நெடுநாளைய நண்பர்கள். அதனால் நாங்கள் ஒரு வாரமாக விருந்து அளித்துக் கொண்டிருக்கிறோம்” என்றாள். 

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் உங்கள் வீட்டில் விருந்துண்பவர்கள் எல்லோரும் வெளியூர் ஆண்களே. உங்கள் சம்பந்தி வீட்டிலிருந்து பெண்கள், பிள்ளைகள் யாரும் வரவில்லையா?” என்றார் தாசில்தார். “சம்பந்தி வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வரவேண்டாம் என சொல்லிவிட்டோம். இங்க இருக்கிற சண்டை சச்சரவு உங்களுக்குத் தெரியாததா? பெண்கள் எங்கள் வீட்டின் உள்ளேயிருக்கிறார்கள்” என்றாள் நரசிங்கப்பாவின் மனைவி. “நான் அந்தப் பெண்களைப் பார்க்க வேண்டும்” என்றபடி உள்ளே நுழையப் பார்த்த தாசில்தாரை நரசிங்கப்பாவின் மனைவி வழிமறித்தார். “பெண்கள் இருக்கும் பகுதியில் நீங்கள் நுழைவதை ஆட்சேபிக்கிறேன்” என்றாள்.

“எங்கே உங்கள் கணவர்?” என்றதற்கு “அவர் என்ன அய்யா, உங்களை மாதிரி அரசாங்க உத்யோகமா பார்க்கிறார்? இருந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு சம்பாதிக்க? அவர் வியாபாரி. நாலு இடத்திற்குப் போவார்.” “வீட்டில் திருமணத்தை வைத்துக்கொண்டா?” “ஆம், திருமணத்தின் போதுதானே சம்பாத்தியம் தேவை” என்றாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நரசிங்கப்பாவின் வீட்டிற்குச் சாப்பிட வந்த இரண்டு நபர்கள் தாசில்தாரைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்தனர். 

தாசில்தார் அவர்களைப் பிடிக்குமாறு தன்னுடன் வந்த தலையாரிகளுக்கு உத்தரவிட்டார். தலையாரிகள் விரட்டிச் சென்று இரண்டு போராளிகளையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய தாசில்தார், சேலம் கலெக்டர் வில்லியம் மெக்லாய்டிற்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பித்தார். கோயம்புத்தூர் ஜெயில் சூப்பிரண்டு லெப்டினென்ட் கர்னல் மெக்காலிஸ்டருக்கு கலெக்டர் வில்லியம் மெக்லாய்டு தகவல் தந்தார்.

கோயம்புத்தூருக்குள் போராளிகளை தேட ஆரம்பித்த ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயச் சிப்பாய்கள் கோயம்புத்தூர் நகருக்குள் போராளிகளைத் தேட ஆரம்பித்தனர். லெப்டினென்ட் கர்னல் மெக்காலிஸ்டர் ஓய்விலும் விடுப்பிலும் இருந்த ஆங்கிலேயச் சிப்பாய்களை உடனடியாக வரவழைத்தான். இந்தப் போராட்டத்தில் பெருமளவு மராத்தியர்களும் முஸ்லீம்களும் இருப்பதாகச் சந்தேகப்பட்டதால், முஸ்லீம் சிப்பாய்களைக் கலவரத்தை அடக்கப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தான். 

போராட்டம் நடத்த முடிவு செய்தது ஜூன் மாதம் என்பதால் பண்டிகை நடக்க இருந்த மூன்றாம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே போராளிகள் கைதாகினர். நாற்பத்திரண்டு போராளிகளை கலெக்டர் வில்லியம் மெக்லாய்ட் கோயம்புத்தூர் சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்தினான். விசாரணை நடந்து கொண்டிருக்கையிலேயே முகம்மது ஹாசம் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்விட்டார். விசாரணையின் முடிவில் நாற்பத்தொரு போராளிகளையும் தூக்கிலிட கலெக்டர் வில்லியம் மெக்லாய்ட் உத்தரவிட்டான். 

சின்னமலையுடன் திருப்பூர் காடுகளில் இருந்து கோயம்புத்தூர் நிகழ்வுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சின்ன மருதுவிற்குத் தகவல் வந்தது. “கூர்க் காடுகளுக்குள் நடந்த யுத்தத்தில் ஆர்தர் வெல்லெஸ்லி தூந்தாஜி வாக்கைக் கொன்று விட்டான்” என்று சின்ன மருதுவிற்குத் தகவல் சொல்லப்பட்டது. 

டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. எழுதி அகநி பதிப்பகம் வெளியிட்ட ’1801’ என்ற நாவலின் முக்கிய பகுதியினைத் தான் இங்கே அளித்திருக்கிறோம். 

மருது சகோதரர் ஓவியம்: நன்றி – ஓவியர் தெய்வா (ட்விட்டரில் கிடைத்தது).

1801 நாவல்

மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் – தான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை 1801 நாவலுக்கு மலேசியாவின் உயரிய விருதான ‘தான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிசு’ இலக்கிய விருது அறிவித்துள்ளது. இதில் பரிசுத் தொகையாக 10000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இந்திய சுதந்திரப் போரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, பதினெட்டாம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத்து தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை என இந்த நாவலில் பல்வேறு கதைக்களங்களை ஆழமாக விரித்துச் செல்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. 

புத்தகத்தைப் பெற: அகநி பதிப்பகம்

தொலைபேசி எண்: 94443 60421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *