தேர்தல் அரசியலில் சின்னம் என்பது ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிப்பதில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மக்கள் வாக்கு சாவடியில் வேட்பாளரின் பெயரை விட சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரம் செய்யும் நிறுவனமானது, தனது பொருளை மக்கள் மனதில் பதிய வைப்பது எப்படி முக்கியமோ, அதுபோன்றதுதான் அரசியல் கட்சிகளுக்கு சின்னமும்.
தேர்தல் ஆணையம் ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளின் சின்னங்களை அங்கீகரிக்கின்றது. அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்காகச் சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையமானது இரண்டு வகையில் சின்னங்களை ஒதுக்கிறது. இதில் ‘ரிஸர்வ்ட் சிம்பள்’ என்று சொல்லப்படுவது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களாகும். இந்த சின்னங்கள் அதிகாரத்தை தக்க வைக்கும் காலத்தில் அந்த கட்சிகளுக்கு நிரந்தரமாக இருகின்றன.
அதே வேளையில் பதிவு செய்யபட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஓவ்வொரு தேர்தலிலும் ஒரு சின்னம் ஒதுக்கப்படும். அதிலும் ஐந்து சதவீத தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகளுக்கு முன்னரே ஒரே சின்னத்தை ஒதுக்கும் தேர்தல் ஆணையம், மற்ற கட்சிகளுக்கு வேட்பாளார் இறுதி செய்யப்பட்ட பின்னரே ஒதுக்குகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஆறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
2001-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. கடலூரில் உள்ள மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக கூட்டணியில் அம்பு சின்னத்தில் விசிக 9 தொகுதிகளில் போட்டியிட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனிச் சின்னத்தில் 2 தொகுதிகளை வென்று தமிழக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தது விடுதலை சிறுத்தைகள்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இனைந்து போட்டியிட்ட விசிக, 25 தொகுதிகளில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட விசிக, சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் அதன் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் தனித்து நின்று வெற்றி பெற்றார்.
தற்போது வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று வரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தேர்தல் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
தனி சின்னம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளார்களிடம் பேசும் போது, “குறைந்தது 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் முன்கூட்டியே தனிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். இல்லையெனில் வேட்புமனு தாக்கல் முடிந்ததும் தனிச் சின்னம் கிடைக்கும். சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதால் 2 மணி நேரத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டுச் சேர்க்க முடியும். எனவே, தனிச் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிவாய்ப்பைப் பாதிக்காது. அது ஒரு பிரச்சினையாகவும் இருக்காது” என்று கூறினார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் இதேபோல கடைசி நேரத்தில் சின்னம் பெற்று வெற்ற அனுபவத்தில் இதனை தெரிவிக்கிறார்.
ஆனால் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால் இந்திய தேர்தல் ஜனநாயகம் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குகிறதா என்பதே!
பன்முக தன்மையும் பல்வேறு தரப்பு மக்களும் வாழும் நாட்டில் அவர்களது அனைவரது பிரதிநிதிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்கிற பொழுது அவர்களுக்கான சமவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
ஏற்கனவே நிரந்தர சின்னம் பெற்றுவிட்ட நிறுவனமயப்பட்ட கட்சிகள், பெரிய கட்சிகள் தங்களை எதிர்த்து போட்டியிடுபவர்களை, புதியவர்களை
சின்னம் என்ற இடத்திலேயே ஒருபடி முந்திச் செல்ல வாய்ப்பை வழங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.
சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் போட்டியிட்டாளும் தேர்தல் தேதி அறிவிக்கும் போதே சின்னம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் முழு தேர்தல் பிரச்சார காலத்திலாவது சின்னைத்தைக் குறிப்பிட்டு தேர்தல் பரப்புரை செய்யும் அவகாசத்தை வழங்க வேண்டும். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு வழங்க விதமாக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யபட்ட நாளுக்கும் தேர்தல் நாளுக்கும் இடையில் அதிக நாட்கள் இருக்கும் படி செய்ய வேண்டும்.
அதுதான் தேர்தலில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் முயற்சியாக இருக்கும்.