மார்ச் 20! உலக சிட்டுக்குருவி நாள்!
மனிதர்கள் வாழும் இடங்களில் நெருங்கி வாழும் இயல்புடையவை சிட்டுக்குருவிகள். எனவே இவை ஊர்க்குருவி என்றும் தேன்சிட்டு என்றும் அழைக்கப்படுகின்றன. உருவத்தில் மிகவும் சிறியவை. மேல் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி வெண்மையாக இருக்கும்.
பொதுவாக வீட்டில், மாடியில், இன்னும் நாம் அவற்றுக்குத் தண்ணீர் வைப்பது அல்லது தானியங்கள் வைப்பது எல்லாம் தற்காலிகத் தீர்வே. மற்ற எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் போலவே மனித செயல்பாடுகளின் காரணமாக இவற்றின் அழிவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவிகளை சிதைக்கும் விவசாய நிலங்களின் நஞ்சு
பறவைகள் சத்தம் கேட்காத இடம் என்பது மனிதர்கள் வாழவும் தகுதியற்ற இடமாகவே கொள்ள வேண்டும். விவசாய நிலங்களில் எந்தக் கட்டுப்பாடும் இன்றித் தெளிக்கப்படும் நஞ்சுகளே இவற்றின் அழிவுக்குப் பெருமளவில் காரணமாகும்.
முன்பெல்லாம் விவசாயிகள் வாய்க்கால் வழியாக பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் போது நூற்றுக்கணக்கான காகங்கள், கொக்குகள், தேன்சிட்டுகள் குளித்து மகிழும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும். ஓடும் தண்ணீரில் தங்கள் இணையுடன் அமர்வதும் மேலெழுந்து தலையைச் சிலுப்புவதுமாக இருக்கும். பின் மரங்களில் அமர்ந்து கொள்ளும். பின் மீண்டும் வந்து குளிக்கும்.
நம்மாழ்வார் ஐயாவின் ஒரு முக்கியமான வாசகம் இங்கே பொருத்தமாக இருக்கும்.
“இயற்கையை உற்று நோக்கு” என்பதே அது. உண்மையில் அவைகள் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கை மீது எந்தப் புரிதலும் இன்றி, விளையும் உணவுப் பொருட்கள் மீதே நஞ்சு தெளிக்கிறோம். பால் பிடித்து விளைந்து நிற்கும் கம்பு, சோளம், வரகு போன்ற கதிர்கள் மீது பூச்சித் தாக்குதலைத் தடுக்க நஞ்சு தெளிக்கிறோம். நாமும் உண்கிறோம். இதில் நம்முடைய அறியாமை காரணமாக உணவென்று வந்து நாம் தெளித்த நஞ்சை உண்டு துடிதுடித்து மடியும் காட்சிகளை நாம் அடிக்கடி காண்கிறோம்.
இயற்கை விவசாயத்திற்கு உதவும் சிட்டுகள்
விவசாய நிலங்களில் சிட்டுக்குருவிகள் அமர இடம் இருந்தால் அவை பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகள் முழுவதையும் தின்று விடும். ஆனால் நாம் பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி நஞ்சுகளும், களைக்கொல்லி நஞ்சுகளும் தெளிப்பதால் புழு பூச்சிகள் அனைத்தும் மடிந்து விடுகின்றன. குருவிகளின் உணவும் அத்தோடு அழிக்கப்பட்டு விடுகிறது.
சிட்டுகளின் கண்ணீரை சுமக்கும் மனிதர்களின் சுயநலம்
மனிதர்கள் நாகரிகம் அடைந்த பிறகு காடுகள் அழிக்கப்பட்டு உணவுத் தேவைக்காகத் தானியங்கள் விளைவிக்கப்பட்டன. ஆனால் அதன் பின் பல்வேறு காரணங்களால் மனிதர்கள் மிகவும் சுயநலமாக, பூமியெங்கும் மரங்களே ஏறக்குறைய இல்லாமல் செய்து வருகின்றனர்.
பூமிக்கு அடியில் கிடைக்கும் கனிமங்கள் போன்ற செல்வங்களுக்காக விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்கள் கூட முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. வேலிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கற்களை நட்டுக் கம்பி வேலிகள் அமைக்கின்றனர். வாஸ்து என்ற பெயரில் சில மரங்களைக் கண்டாலே ஆகாது என்கின்றனர். மரங்கள் இருக்கும் இடங்களில் வீட்டைக் கட்டிப் பின் வீட்டின் இந்தத் திசையில் இந்த மரம் இருப்பது வாஸ்துப்படி தவறு என்று முட்டாள்தனமாக வெட்டுகிறார்கள்.
இவ்வாறு பறவைகள் மற்றும் பூச்சியினங்களின் வாழ்விடமாக விளங்கிய மரங்கள் அழிக்கப்பட்டதாலேயே சிட்டுக்குருவிகள் மட்டும் இன்றி மற்ற பறவைகளின் விலங்குகளின் வாழ்வும் இன்று அபாயத்தில் உள்ளது.
மனிதர்களின் பேராசை மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிந்தால் மட்டுமே தேன் சிட்டுகள் திரும்பி வரும்.