ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுடன் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர் என்று எப்போதும் பெருமையாக பேசப்படும் வீரன் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் கொலை செய்த பின்பு, அவன் கட்டிய பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையை இடித்து தரைமட்டமாக்கினர்.

35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.

கட்டபொம்மன் அளித்த மரியாதை
கட்டபொம்மனுக்கு எதிராக ஆங்கிலேயர் நடத்திய போரின் போது இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். அந்த போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றார். போரில் உயிரிழந்த ஆங்கிலேய வீரர்களின் உடல்களை அவர்கள் அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், எதிரியின் வீரர்களின் உடல்கள் என்றாலும் கோட்டைக்கு அருகே மரியாதையாக அடக்கம் செய்தார் கட்டபொம்மன். இந்த ஆங்கிலேய வீரர்களின் கல்லறை இன்றும் உள்ளது.
மீண்டும் கோட்டையை எழுப்பிய ஊமைத்துரை
கட்டபொம்மன் தூக்கிலடப்பட்டபோது கோட்டை முற்றிலுமாக இடிக்கப்பட்டது. பின்பு அவரின் சகோதரர் ஊமைத்துறை 7 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு, நவீன யுத்திகளுடன் ஐந்து நாட்களில் புதிய கோட்டையைக் கட்டினார். இந்த கோட்டையையும் ஆங்கிலேயர்கள் இடித்ததோடு அங்கிருந்த செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
1968-69 அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரண்மனை

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையின் எச்சங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் 1968-69ல் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. இந்த அகழாய்வின் போது அரண்மனையின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய நுழைவாயில், மாளிகையில் இருந்த அறைகள், தர்பார் மண்டபம், மக்கள் கூடும் சபை, அடுக்களை, அந்தப்புரம், கல்யாண மண்டபப் பகுதியும் வெளிக்கொணரப்பட்டது. அழகிய வேலைப்பாடு கொண்ட கற்பீடங்களும், சுண்ணாம்பு சாந்து பூசிய செங்கற்கட்டுகளையும் காணமுடிந்தது.


அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பீங்கான் வகை மட்கலன்கள், பீங்கான் வகை தட்டகள், கிண்ணங்கள், குவளை போன்றவையும் கிடைத்துள்ளது. இந்த மட்கலன்கள் போர்ஸலைன் வகையைச் சார்ந்தவை. சீனாவில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. அகழாய்வில் கிடைத்த நாணயங்கள், அணிகலன்கள் போன்ற தொல்பொருட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.


புதிதாக எழுப்பப்பட்ட அரண்மனை வடிவம்
தற்போது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இருந்த இடத்திற்கு அருகே 1974 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கோட்டையைப் போன்ற வடிவத்தில் அரண்மனை கட்டப்பட்டு கட்டபொம்மனின் சிலையும், அவரின் வரலாற்றை எடுத்துக் கூறும் புகைப்படங்களும் ஓவியங்களும் இடம்பெற்று மீண்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை.
– மகிழன்பு, வரலாற்று ஆய்வாளர்