வட இத்தாலியில் உள்ள லம்பார்டி நகரில் கடந்த வருடம் கொரோனா தொற்றுப் பரவலில் ஏற்பட்ட இறப்புதான் உலகின் மிகப்பெரும் பேரழிவாக இன்றுவரை உலகம் முழுவதும் கருதப்படுகிறது. ஆனால் அந்த பேரழிவின் போது ஏற்பட்ட உச்சமான இழப்பை விட மிக மோசமான நிலையை இந்தியாவில் வட மற்றும் மேற்கு மாநிலங்கள் இரண்டாம் அலையின் துவக்கத்திலேயே அடைந்து விட்டன என்ற அதிர்ச்சித் தகவலை ஃபைனான்சியல் டைம்ஸ் தகவல் நிபுணர் ஜான் போன் முர்டாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா மூலம் இறந்து எரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்று இந்திய செய்தி நிறுவனங்களின் தகவல்களில் ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிந்துள்ளார்.
வடமாநிலங்களின் நிலையை பேரழிவின் துவக்கமாக பார்க்கும் சர்வதேச ஊடகங்கள்
டெல்லி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகிறது. சர்வதேச ஊடகங்கள் இந்தியாவில் நடக்கும் இந்த தொற்றுப் பரவலை மிகுந்த பேரழிவிற்கான துவக்கமாக பார்க்கிறது. இது தெற்காசியாவையே பாதிக்கும் என்ற எச்சரிக்கையைக் கொடுக்கிறார்கள்.
உலகிலேயே மிக மோசமான தொற்றுப் பரவல் இந்தியாவில்தான் என்ற அச்சப்படக்கூடிய தகவலை சர்வதேச ஊடகவியலாளர்கள் அறிவிக்கிறார்கள். பிரேசிலில் இருக்கும் சில பகுதியைத் தவிர உலகில் வேறு எங்கும் ஆக்சிஜன் இல்லாமல் இறந்தது இல்லை. ஆனால் இந்தியாவில் இது மிக அதிகமாக இருக்கிறது.
தொற்றின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டச் சொல்லி மிரட்டல்
இந்தியாவின் முக்கியமான தொற்றுப் பரிசோதனை நிறுவனமான தைரோகேர் நிறுவனத்தின் தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுமணி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை தொலைபேசியில் அழைத்து, கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையை குறைத்துக் காட்டச் சொல்லி வாய்மொழியாக மிரட்டியதாகவும், இல்லையென்றால் தொழிலை முடக்கி விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
லக்னோவில் உடல்கள் எரிக்கப்படுவதை பெரும் தீ விபத்தாக பதிவு செய்யும் செயற்கைக்கோள்
சர்வதேச அளவில் பெரும் காட்டுத் தீ விபத்துகளை கண்காணிக்கும் செயற்கைகோள், லக்னோவில் கொரோனா தொற்றில் இறந்தவர்களை எரிப்பதை பெரும் தீவிபத்திற்கான எச்சரிக்கையாக பதிவு செய்துள்ளது. அப்படி பதிவு செய்வது இதுதான் முதல் முறை என்பதால், அங்கு எவ்வளவு உடல்கள் எரிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?
ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தியாவின் கொரோனா தொற்றுப் பரவல் நாள் ஒன்றுக்கு 10,000 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த தொற்றுப்பரவல் மேலும் சிக்கலாக மாறியதற்குக் காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பல மருத்துவமனையில் மருத்துவர்கள் அழுகிறார்கள். பற்றாக்குறையின் அடிப்படையத் தெரிந்துகொள்ள இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் பகிர்தலில் உள்ள சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைக்கு நாடு எப்படி வந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது.
இந்தியாவில் ஜனவரி மாதம் நாள் ஒன்றுக்கு 10000 எண்ணிக்கை என்று இருந்தபோதே இரண்டாம் அலை வருகிறது என்று உலகின் தலை சிறந்த மருத்துவ ஆய்வு இதழான லான்செட் Lancet தெரிவித்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டாம் அலை வந்துவிட்டது. சிலியில் மூன்றாம் அலையே வந்துவிட்டது. அதனால் இந்தியாவில் இரண்டாம் அலை வரும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல்தான் ஆட்சியாளர்கள் இருந்தனர். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அரசின் செயலை ஒரு குற்றச்செயலாகவே பார்க்க முடிகிறது. ஒரு நிறுவனத்தில் தீ விபத்து நடக்கும் போது அதைத் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்து தீ விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத் தலைவர் தண்டிக்கப்படுவார். அதேபோலத்தான் கொரோனா பெருந்தொற்று பரவும் என்று எச்சரிக்கை கொடுத்த பின்னும் எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாத குற்றத்தை மத்திய பாஜக அரசு செய்துள்ளது.
இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனும், தொழிற்சாலைக்கு அனுப்பபட்ட ஆக்சிஜனும்
இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
மிச்சம் இருக்கும் 4500 மெட்ரிக் டன் தான் மருத்துவ சேவைக்கு வருகிறது. ஏப்ரல் 22-ம் தேதி ஒரு உத்தரவு போடுகிறது அரசு. ஒன்பது தொழில்களைத் தவிர மற்ற நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கக் கூடாது என்று அந்த உத்தரவு கூறுகிறது. இதைத்தான் டெல்லி உயர்நீதிமன்றம் இதுவரை ஏன் இதைச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. இதைச் செய்யவில்லை என்றால் 1 கோடி பேரை இழக்க நேரிடும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.
அன்றைய தினம் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் தேவை 3842 மெட்ரிக் டன். அன்றைய தினத்தில் தொற்று பரவிய எண்ணிக்கை 12,64,000. நேற்று எண்ணிக்கை 24,28,608. ஏப்ரல் 21-ம் தேதி 8000 மெட்ரிக் டன் என்பது ஒரு நாளைக்கான தேவையாக இருந்தது. நமது இன்றைய தேவையில் இரண்டு முதல் மூன்று வாரம் தான் சமாளிக்க முடியும். இந்தியாவின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் கூட தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.
இந்த மோசமான நிலைக்கு வடஇந்தியா வந்ததற்கு முழு காரணமும் ஆட்சியாளர்கள் தான். இந்த ஆக்சிஜன் நெருக்கடி வந்த பின்னும் தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை அனுப்பியவர்கள் தான் காரணம்.
ஸ்டெர்லைட்டின் நாடக அக்கறை
இப்போது புதிதாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்கிறார்கள். வேதாந்தாவிற்கு உண்மையிலேயே ஆக்சிஜன் கொடுக்கும் அக்கறை என்றால், அது உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படும் வட இந்தியாவில் உள்ள தன் ஆலைகளில் தயாரித்துக் கொடுத்திருக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டால் மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கும் போதும் கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்வதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஏப்ரல் 22-ம் தேதி வரை தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் தடைபடாமல் கொடுத்திருப்பார்களா?
மிரட்டும் யோகி ஆதித்யநாத் அரசு
உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று கூறுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று மக்களை மிரட்டுகிறார். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 0.36% வரை செலவாகும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. நிதி நிலையில் 35,000 கோடி ஒதுக்கியிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். மக்கள் பேரழிவை சந்திக்கும் காலக்கட்டத்தில் காப்புரிமையை தளர்த்தி மருந்து உற்பத்தி செய்து லாபநோக்கம் இன்றி விநியோகம் செய்யலாம் என்பது சர்வதேச விதி. ஆனால் அதனை மோடி அரசு செய்யவில்லை.
பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தாத அரசு
உண்மையிலேயே ஒரு மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளை தயாரித்து தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்கச் செய்திருக்க முடியும். ஆனால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தினை துவங்க கோரிக்கை வைத்துக் காத்திருக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்கள் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை, ஆக்சிஜன் இல்லை. இறந்தவர்களை எரிப்பதற்கு சுடுகாடுகள் கூட இல்லாத நிலையில் தான் இந்த பாஜக அரசு மக்களை வைத்திருக்கிறது.
-Madras Review