மோடி ராஜபக்சே

இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 46 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்றது. கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை அரசு குறித்தான தீர்மானத்தினை முன்வைத்தன. 

தீர்மானத்தினைப் படிக்க கிளிக் செய்யவும்

இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர்

இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியதற்கு இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜெனீவாவில் காட்டிய ஆதரவை இலங்கை பாராட்டுகிறது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தமிழர்களிடத்தில் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. 

ஏற்கனவே இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்று உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீர்மானத்தினை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணித்தது, இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

ஈழத் தமிழர்களின் கோரிக்கையும், ஐ.நா தீர்மானமும்

இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்று வருவது இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுமே தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள தீர்மானமானது இனப்படுகொலை என்பதை எந்த இடத்திலும் பேசவில்லை. சர்வதேச விசாரணை குறித்தும் தெளிவாகப் பேசவில்லை. எனவே இத்தீர்மானம் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. 

அமெரிக்க-சீன பனிப்போரும், ஐ.நா தீர்மானமும்

இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்க – சீன பனிப்போரின் விளைவாக, அமெரிக்கா உருவாக்கிய அமெரிக்கா-இந்தியா-ஆஸ்திரேலியா-ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பான QUAD-ன் புவிசார் அரசியல் பேரங்களுக்கான ஒரு கருவியாகவே இத்தீர்மானம் அமைந்துள்ளதாக தமிழ்நெட் இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் இத்தீர்மானத்தில் வாக்களிப்பை தவிர்த்ததன் மூலம் இந்த இரு நாடுகளின் வழியாக இலங்கையுடன் பேரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகள்

இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை ஏற்காமல் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரின. அதில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், பொலிவியா, கியூபா, எரித்ரியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 11 நாடுகள் தீர்மானத்தினை எதிர்த்து வாக்களித்தன. 

வாக்கெடுப்பை புறக்கணித்த நாடுகள்

இந்தியா, பஹ்ரைன், பர்கினோ பாசோ, கேமரூன், கபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மரிட்டானியா, நமீபியா, நேபாள், செனேகல், சூடான் மற்றும் டோகோ உள்ளிட்ட 14 நாடுகள் இத்தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தன. 

தீர்மானத்தை ஆதரித்த நாடுகள்

தீர்மானத்தினை ஆதரித்து 22 நாடுகள் வாக்களித்தன. அர்ஜெண்டினா, ஆர்மீனியா, ஆஸ்ட்ரியா, பஹாமஸ், பிரேசில், பல்கேரியா, கோட் டிவோரி, செக் குடியரசு, டென்மார்க், ஃபிஜி, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து, தென்கொரியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் ஆதரித்தன.

அடுத்தகட்டம் என்ன?

மனித உரிமைகள் ஆணையர் இலங்கை குறித்து தொடர்ந்து கண்காணிப்புகளை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 48வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வாய்மொழி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 49-வது கூட்டத் தொடரில் எழுத்துப்பூர்வ அறிக்கை அளித்திட வேண்டும் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்கள் மற்றும் சாட்சியங்களை திரட்ட 13 பணியாளர்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் செயல்படுவர். இந்த தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதற்கான நிதியாக 2.9 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிதியில் பெரும்பங்கு 13 பணியாளர்களின் சம்பளத்திற்கும், பயணச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்திய அரசின் முடிவுக்கு எதிராக கொதிக்கும் தமிழ்நாட்டு கட்சிகள்

திமுக

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்றும், இதனை தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மதிமுக

இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்றும், இந்திய அரசு செய்த துரோகத்திற்கு தன்னுடைய பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி

இலங்கை அரசு ‘வெஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினல்’ திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது. அதனால் இந்தியா தம்மைத்தான் ஆதரிக்கும் என்று இலங்கை அரசு கூறி வந்தது. ஊடகங்களிலும் இது தொடர்பான யூகங்கள் வெளியாகி வந்தன. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்று பாஜக அரசு எடுத்த நிலைப்பாடு அமைந்துள்ளது. அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழர் நலனை பாஜக அரசு பணயம் வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திராவிடர் கழகம்

இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசு எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும் துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது. தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

மறைமுகமாக சிங்களப் பேரினவாத அரசுக்கு மோடி அரசு துணை போயுள்ளது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கும் துரோகமிழைத்தது கண்கூடாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *