அத்வானி கைது லாலு

ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்

அயோத்தி ராமஜென்மபூமியே என்பதாக சொல்லி அத்வானி செப்டம்பர் 25, 1990 அன்று குஜராத் மாநிலத்தின் சோம்நாத்பூரிலிருந்து அயோத்தியை நோக்கி மாபெரும் ரத யாத்திரையைத் தொடங்கினார். உத்திரப்பிரதேசத்திலுள்ள அயோத்தியை அடைவதற்கு ஒவ்வொரு மாநிலமாகச் சென்று அக்டோபர் 30 அன்று “கர்சேவா” எனும் பெயரில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை தொடங்குவதற்காகத் திட்டமிட்டே இது நடத்தப்பட்டது. 

ஆனால் அக்டோபர் 23 அன்று அன்றைய பீகார் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், அத்வானியை அயோத்தி செல்லவிடாமல் பீகாரிலேயே கைது செய்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வி.பி.சிங்கிற்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. 

இந்த ரத யாத்திரையின் மூலமாகவே இந்திய அளவில் மிக முக்கியமான அரசியல் கட்சியாக “பாரதிய ஜனதா கட்சி” வட மாநிலங்களில் மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டிசம்பர் 6, 1992-ல் வலதுசாரி சங்பாரிவாரால் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. லாலு தடுக்கவில்லை என்றால் அதை 1990-ம் ஆண்டே நிகழ்த்தியிருப்பார்கள்.

என்.டி.டி.வி பத்திரிக்கையின் மணிஷ் குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டியில், அத்வானியைக் கைது செய்ததோடு அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். மேலும் பாபர் மசூதி இடிப்பு என்பதே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்றும் பேசியிருக்கிறார். 

இனி லாலு பேசுகிறார்

லாலு பிரசாத் யாதவ்

நேற்று “சௌரிய திவாஸ்” எனும் பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை மக்கள் கொண்டாடும் காணொளிகளைக் கண்டேன். பாபர் மசூதி பாஜக-வின் முக்கிய அரசியல் தலைவர்களின் முன்னிலையில் தான் இடிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை டிசம்பர் 6, 1992 ஒரு சோகமான நாள். உச்சநீதிமன்றத்தில் ஒன்றைக் கூறிவிட்டு அதனை மீறுதல் வெற்றி என்றால், அது வெற்றிக்கே புதிய அர்த்தம் தருவதாகிவிடும்.

நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன்.

ஆட்சியை இழந்து நாட்டைக் காப்பாற்றினோம்

நான் நினைத்திருந்தால் அத்வானி அவர்களுக்கு பீகார் வழியாக பாதுகாப்பான பயணத்தை அமைத்துக் கொடுத்திருக்க முடியும். அப்படிச் செய்வது அன்றைய பிரதமர் வி.பி.சிங் அரசையும் பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனாலும் நான் அந்த தியாகத்தை செய்யத் துணிந்தேன். ஆம், எங்களது  ஆட்சியினை இழந்து, அந்நேரத்தில் நாட்டினை நாங்கள் காப்பாற்றினோம்.

எல்கே.அத்வானி அவர்களின் ரத யாத்திரை உத்திரப்பிரதேசத்தை அடைந்திருந்தால் எப்படியான கலவரங்களை அது உருவாக்கி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ஏற்கனவே அந்த யாத்திரை சிறிய அளவிலான மத உரசல்களை ஆங்காங்கே துவக்கியிருந்தது.

OBC இடஒதுக்கீட்டுக்கு எதிரானதே அத்வானியின் ரதயாத்திரை

சோமநாத்பூரில் தொடங்கி அயோத்தியில் முடிய வேண்டிய அத்வானியின் ரதயாத்திரை, விபி.சிங் அரசு கொண்டுவந்த மண்டல் கமிஷனின் பிற்படுத்தப்பட்டோர்(OBC) இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான எதிர்வினையே ஆகும். இது மண்டலுக்கும் கமண்டலுக்கும் இடையிலான போர். நாங்கள் கமண்டல் வெல்லக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தோம். ஏனெனில் அது மறைமுகமாக பல பிரிவினை எண்ணங்களைக் கொண்டிருந்தது.

ரயிலில் வைத்து கைது செய்ய போடப்பட்ட திட்டம்

நான் அத்வானியை அயோத்திக்கு அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் டெல்லியில் பல களேபரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. பல கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டு பல முறை அத்வானியின் பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

அத்வானி தான்பாத்தில் இருந்து தனது யாத்திரையைத் தொடர திட்டமிட்டிருந்தார். நானும் அப்போது உயரதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். சரியாக இரண்டு மணி அளவில் அத்வானி வரும் ரயிலான ஹவுரா ராஜதானி, பீகாரில் நுழையும்போதே சரஸ்ரம் என்ற இடத்தில் வைத்து கைது செய்வதாகவே முதலில் திட்டமிட்டிருந்தோம்.

ரோத்தாஸ் மாவட்டத்தின் நீதிபதியான மனோஜ் ஸ்ரீவஸ்தவா, ரயில்வே அதிகாரிகளிடம் ரகசியமாக பேசித் தயார் செய்தார். ரயில்வே கேபினில் வைத்து ரயிலை நிறுத்தி எல்.கே.அத்வானி அவர்களை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டது. 

ஆனால் இத்திட்டம் வெளியே கசிந்தது. திட்டம் தோல்வியடைந்த இச்செய்தியை ஏற்கனவே ரயில்வே தளவாடத்தில் நிற்கும் மாவட்ட நீதி பதிமனோஜிடம் கொண்டு சேர்த்தல் கடினமான காரியமாயிருந்தது. ஏனெனில் அது கைபேசிகள் இல்லாத காலம்.

அடுத்த திட்டம்

அதற்குப் பின் அத்வானியை தான்பாத்தில் வைத்து கைது செய்ய முடிவெடுத்தோம். ஆனால் சில உள்ளூர் அதிகாரிகளால் அங்கும் குழப்பம் ஏற்பட்டதால் முடியவில்லை. 

மூன்றாவது முறை  நான் திட்டத்தை எவ்வளவு ரகசியமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், மிகச் சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இது பற்றி தெரியவேண்டும் என்றும் அறிந்துகொண்டேன். 

ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது திட்டம்

நான் முதலில் அழைத்தது மாவட்ட நீதிபதியான சுதிர்குமாருக்குத் தான். அவரிடம் ஆடம்பரமான விருந்தினர் மாளிகை ஒன்று மசஞ்சோர் என்னுமிடத்தில் இருந்தது. விசயம் என்னவென்று அவரிடம் கூறாமல், நான் அடுத்த நாள் அங்கு வரப்போவதாகவும் பாதுகாப்பு மிகத் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். மேலும் யாருக்குமே அங்கு அனுமதி இருக்கக் கூடாது என்றும் மிக அழுத்தமாய் கூறினேன்.

அத்வானியின் ரத யாத்திரை அப்போது பாட்னாவை அடைந்திருந்தது. அவர்கள் சமஸ்திபூருக்கு சென்று, அந்த இரவு ஒரு விருந்தினர் மாளிகையில்  தங்குவதாக திட்டமிட்டிருந்தனர். நான் சில அதிகாரிகளை வீட்டிற்குச் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தேன். அதில் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் இப்போதைய அமைச்சரான ராஜ்குமார் சிங்கும், அப்போதைய டி.ஐ.ஜி யும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ்வர் ஓரவ்னும் அடக்கம். மேலும் தலைமை விமானியை அழைத்து செல்லுமிடத்தைப் பற்றி கூறாமல், தயார் நிலையில் இருக்கும் படியும் கூறியிருந்தேன்.

அடுத்த நாள் காலை ராஜ்குமார் சிங்கையும், ரமேஷ்வர் ஓரவ்னையும் அழைத்துக்கொண்டு விமானி அவினாஷ் குமார் சமஸ்திபூர் விருந்தினர் மாளிகை அருகிலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார். 

முந்தைய இரவு 2 மணியளவில் விருந்தினர் மாளிகைக்கு தொலைபேசியில் அழைத்தேன். நான் கோனு ஜா என்கிற உள்ளூர் பத்திரிக்கை நிருபர் எனக்கூறி மைதிலி மொழியில் அத்வானியைக் குறித்து விசாரித்தேன். எதிர்புறத்தில் இருந்த நபர் அத்வானி உறங்கிவிட்டார் என்றார். மேலும் அவரது ஆதரவாளர்கள் கிளம்பிவிட்டனர் என்பதையும் உறுதி செய்துகொண்டேன். அவரைக் கைது செய்கையில் எனது அதிகாரிகள் அத்வானியின் அதிகமான ஆதரவாளர்களை எதிர்கொண்டு குழப்பமேதும் நிகழாமல் இருக்கவேண்டுமென்பது என் எண்ணமாக இருந்தது.

அத்வானியின் ரதயாத்திரையைத் தொடர்ந்துவரும் ஊடகத்துறையினர் பாட்னாவிலேயே தங்கியது எனக்கு பெரிய ஆறுதல். அவர்கள் என்னையும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்களிடம் அத்வானியைக் கைது செய்யும் எண்ணமில்லை என்றே சொன்னேன். அவர்களில் சிலர் அத்வானிக்கும், பாஜக-வுக்கும் நெருக்கமானவர்கள்.

எல்.கே.அத்வானியையும், அசோக் சின்ஹாலையும் கைதுசெய்த பிறகு விமானம் மசஞ்சோருக்குத் திரும்பாமல் பாட்னாவுக்குச் சென்றது. சிறிதுநேரம் நான் எங்கும் தவறு நிகழ்ந்துவிட்டதோ என பதட்டமானேன். ஆனால் அவர்கள் எரிபொருள் நிரப்புவதற்கே சென்றார்கள். வேறெந்த சிக்கலும் இல்லையென அறிந்த பின்னரே நிம்மதியடைந்தேன்.

அத்வானி மசஞ்சோரை அடைந்தவுடன் அவருக்கு அழைத்து, “வேறு வழியின்றியே உங்களைக் கைதுசெய்ய வேண்டியதாகிவிட்டது. தனிப்பட்ட விரோதமாக நினைத்து என்மேல் கோபம்கொள்ள வேண்டாம்” என்றேன். மேலும் அந்த இல்லத்தில் ஒரு சமையல்காரர், ஒரு மருத்துவர் என சகல வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டிருப்பதையும் தெரிவித்தேன். 

அவர்களது கருத்தியலே எனக்கு எதிரி

அவர் மசஞ்சோர் விருந்தினர் மாளிகையில் பலநாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவரிடம் பலமுறை அழைத்துப் பேசினேன். அவரது குடும்பம் அவரைப் பார்க்க வருகிறபோது அவர்களிடமும் பேசினேன். அவர்களை மாநிலத்தின் சாப்பரிலேயே மசஞ்சோருக்கு பயணம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டேன். அவர்களது கருத்தியல் தான் எதிரானதே தவிர, அவர் எனக்கு எதிரியில்லை.

நம் கலாச்சாரத்தை நாம் மறந்துவிட்டோம். இந்நாளின் அரசியல் சூழலில் பல வெறுப்புப் பேச்சுக்களைக் காணமுடிகிறது. அந்நாட்களில் நிலவிய நல்லிணக்கத்தை எல்லாம் இப்போது நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை.

நாங்கள் மத்தியில் ஆட்சியை இழந்தோம். இருப்பினும் அந்நேரத்தின் தேவையை நிறைவேற்றியதில் இன்று வரையிலும் எனக்குப் பெருமையே. பிரவினைவாதிகள் மூர்க்கமடைந்து பெரும் கலவரங்கள் நிகழாமல் இருந்தமைக்கு திரு.எல்.கே.அத்வானியின் கைது அவசியமானது. 

(லாலுபிரசாத் யாதவ் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியிலிருந்து).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *