ஹரியானா பாஜக அமைச்சர்

காலை செய்தித் தொகுப்பு: தடுப்பூசி போட்டும் பாஜக அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி உள்ளிட்ட 10 செய்திகள்

1. தடுப்பூசி போட்டும் கொரோனா பாதித்த பாஜக அமைச்சர்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஹரியானாவின் சுகாதார அமைச்சரான அணில் விஜ், பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தடுப்பூசியினை எடுத்துக் கொண்டார். கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு தனது மாநிலத்தில் முதல் தன்னார்வலர் என்று அவரே ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் விஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2. தமிழக காவல்துறை ஆட்சேர்ப்பில் முறைகேடு வேல்முருகன் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”தமிழக காவல்துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, நேர்முகத்தேர்வு என்பது ஒரு இடத்திற்கு 2 பேர் என்றளவில் நடப்பது வழக்கமாகும்.

அப்பணியிடங்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாதது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற துணை காவல் ஆய்வாளர் தேர்விலும் இதேபோன்ற முறைகேடு நடைபெற்றது. எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும். 

இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ் வழியில் பயின்றோருக்கான இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் துணை காவல் ஆய்வாளர் பணி உள்பட எந்த அரசு பணிகளிலும் சேர முடியும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்விவகாரத்தில் தலையிட தமிழக அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

3. தமிழகத்தில் கொரோனா

நேற்று டிசம்பர் 5 அன்று தமிழகத்தில்,

புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் – 1,366

சென்னையில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் – 353 பேர்

தமிழகத்தில் கொரோனா மரணம் – 15

தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் – 10,882

நேற்று குணமடைந்தவர்கள் – 1,407

3. அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தி; திருமா, டி.ஆர்.பாலு கண்டனம்

இன்றுஅனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும் இந்தியிலேயே பேசினர். டிஆர்.பாலு MP இதனைக் கண்டித்தார். விசிக உள்ளிட்ட ஒரு உறுப்பினர் கட்சிகளுக்கு ஒரு நிமிடம்கூட பேச அனுமதிக்கவில்லை. இப்போக்கு கண்டனத்துக்குரியது என்று தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

4. மத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை – மு.க.ஸ்டாலின்

விவசாய சட்டங்களுக்கு  எதிராக சேலத்தில் திமுகவின் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

”டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாராட்டையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாயப் போராட்டம் நடைபெற்றதில்லை. விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் மத்திய பாஜக அரசு உள்ளது.

பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக விவசாய விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சர்  ஒருவர் ராஜினாமா செய்தபோதாவது மத்திய அரசு விழித்து இருக்க வேண்டும். அவசர அவசரமாக விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

5. லாரி ஸ்ட்ரைக்

வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மதுரை உயர்நீதிமன்றம் எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டுக் கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

மேலும் காலாண்டு வரியைச் செலுத்துமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் பொருத்துவது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27-ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

7. துணை மின்நிலையத்தில் வெள்ளம் 

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ஏரியில் கட்டப்பட்ட துணைமின் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் ராட்சத மின்மாற்றிகள் தண்ணீரில் மிதந்தன – தற்காலிகமாக அலுவலகம் மூடல்.

8. கல்லூரி திறப்பு புதிய அறிவிப்பு

இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் வரும் 7 ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் திங்கள்கிழமை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.ஆளுநர் எப்போது பதில் அளிப்பார் உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் வழியில் படித்தோர்  20% இடஒதுக்கீடு மசோதா ஆளுநரிடம் 8 மாதங்களாக காத்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில் ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

10. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

இந்த ஆண்டு 3 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைத் தாண்டி இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது  ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன மாவட்ட நிர்வாகம் சார்பாக பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெருகிறது. 

4 தேதி வரை கணக்கெடுக்கப்பட்டதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும்  21 ஆயிரத்து 785 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இவற்றில் 3 ஆயிரத்து 750 ஏக்கரில் மூழ்கியவை முன்பட்ட சம்பா நெற்பயிர்களாகும். இவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளவை என்றும், மீதமள்ள 18 ஆயிரத்து 35 ஏக்கரில் மூழ்கியவை இளம்பயிர்களாக இருந்தவை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் காட்டூர், வரவுக்கோட்டை, சூரக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகளும் சாய்ந்துள்ளன. இதுவரை 25 ஏக்கரில் கரும்பு சாய்ந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *