அம்பேத்கர்

மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு சங்கம் அமைக்கவும், தங்கள் உரிமைகளுக்காக அரசிடம் நீதி கேட்கவும் வழிமைத்த அண்ணல்

இன்று டெல்லியில் விவசாயிகள் போராடுவது ஒட்டுமொத்த இந்தியாவின் உணவு உரிமைக்கான போராட்டம் என்று நாம் மெய்சிலிர்க்க 

பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த விவசாயிகளின் போரராட்ட உரிமையை பெற்றுக்கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதுதான் உண்மை.

இன்றும் புரட்சியாளர் அம்பேத்கர் பல்லாயிரம் ஏக்கர் நிலமுடைய பெரு நிலச்சுவான்தார்களைத் தவிர்த்து சிறு, குறு விவசாயிகளுக்கு தொழிலாளர்களாக, ஆலைத் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள் எல்லாம் வேண்டும் என்று பேசி அதற்கு சட்டம் கொண்டுவந்தவர் அம்பேத்கர் ஆவார்.  

“அய்ந்து லட்சம் ரூபாய் வரி செலுத்தக்கூடிய அளவிற்கு நிலம் வைத்திருக்கும் பெரு விவசாய நிலத்தின் உடைமையாளர்களைத் தவிர, பிற விவசாயம் சார் உழைப்பாளிகளை நான் விவசாயத் தொழிலாளர்கள் என்று குறிப்பிடுகிறேன். 

மேலும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்பவர்கள், சொந்தமாக நிலம் வைத்து பயிர் செய்பவர்கள், தன்னிடம் உள்ள நிலத்தில் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலத்திலாவது பயிர் செய்பவர்கள் ஆகியோர் விவசாயத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் அடங்குவர்.

இந்தத் தொழிலாளர்களுக்கு அரசு, விவசாயம் பற்றிய அடிப்படையான கல்வி அளிக்க முயற்சி மேற்கொள்கிறது. விவசாயக் கல்வி, விவசாயம் பற்றிய ஆய்வு, பயிர் பாதுகாப்பு, பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பது பற்றிய விவரங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

இதுவரை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் என்ற வகையில் உள்ள நடைமுறைப் பயன்கள், இனி விவசாயப் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

இதன் மூலம் பிரிவு 21 மற்றும் 24 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள், ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியவர்கள் ஒரே நிலையில் வைத்து நீதி செய்யப்படுவர்.

பிரிவு 28, தொழிலாளர்கள் அமைப்பு உருவாக்கி செயல்படும் உரிமையை விவரிக்கிறது. இத்தகைய அமைப்பு அல்லது சங்கங்களை தொழிற்சாலைப் பணியாளர்கள் போலவே, விவசாயத் தொழிலாளர்களும் அமைத்து நிர்வாகம் செய்யலாம். தங்களின் தேவைகளை சட்டத்தின் முன்வைத்து அதற்கான நீதியைப் பெறலாம்.

விவசாயிகளுக்கு தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து வித உரிமைகளையும் நான் சட்டத்தில் உறுதி செய்துள்ளேன். இதைத் தவிர்த்து, விவசாயிகளுக்குக் கூடுதலான உரிமைகளைப் பின்வரும் சட்டங்கள் மூலம் கிளைச் சட்டங்களை உருவாக்க, நான் போதுமான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளேன்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

மும்பை தமிழர்களுக்காக ஒலித்த குரல்

புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல விரும்பினார் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த வலதுசாரிகள்  கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தங்களது பண்பாட்டை காக்க வேண்டும் என்றும், அவர்கள் பிழைப்பு தேடி இடம்பெயரும்போதும் அவர்களுக்கான மொழி உரிமைகளும்,  தாய்மொழிக் கல்வி உரிமையும் மறுக்கப்படக் கூடாது என்றும் உரக்கச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் ஆவார். 

மும்பைக்கு வேலை செய்யச் சென்ற தமிழர்களுக்கு தமிழ்மொழிக் கல்வி கொடுக்க வேண்டும் என்று பேசுகிறபோது,

”சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள், வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர். இவர்கள் பொதுவாக வந்தேறியாக அல்லது மொழிரீதியாக இந்தியா முழுமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிறுபான்மையினராகக் கொள்ளப்படாவிட்டாலும், தாங்கள் வாழும் பகுதிகளில் மொழி சிறுபான்மையினராகவே வாழ நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர்களை நான் ’கலாச்சார சிறுபான்மையினர்’ (Cultural Minorities) என்று குறிப்பிட விரும்புகிறேன். 

பணிக்காக புலம்பெயர்ந்து செல்பவர்கள், அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புவதில்லை. தங்களின் பூர்வீக இடத்தின் மொழி, வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டைத் துளியும் இழக்க அவர்கள் தயாராக இருப்பதும் இல்லை. மாறாக தங்களது பூர்வீக இடத்துடன் நிரந்தரத் தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். திருமணம், திருவிழா மற்றும் அனைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சொந்த ஊருக்குச் சென்று மகிழ்கின்றனர். 

நடைமுறை இவ்வாறாக உள்ளபோது தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன். இதைப்போலவே அந்தந்த மொழிவாரி மாநிலங்களைச் சார்ந்த மக்கள், தங்களது தேவைகளுக்காக வேற்று மொழி மாநிலங்களுக்குச் சென்று வாழ்ந்தாலும், அவர்களது தாய் மொழிக் கல்வியினை தடையின்றிப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசு தங்களது சட்ட மன்ற விதிகளின் படி வழிவகை செய்ய வேண்டும். இது, அரசமைப்புச் சட்டத்தின் கடமை என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன்.”  என்று பேசியவர் பாபாசாகிப் அம்பேத்கர். 

பிரதேச உணர்வுகளை மதிக்க வேண்டும்

இன்று அகண்ட பாரதம் ஒரே நாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அம்பேத்கரை தங்களின் துணைக்கு சேர்க்கிறார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கரோ இந்த நாடு நலமுடன் இருக்க பிரதேச உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று வாதம் செய்தவர். 

பிரதேச உரிமைகள் குறித்து பேசியபோது, “நம் நாட்டில் நாம் பிரதேச உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், வலிமையான நாடு என்ற பெயரில் செயல்பட்டால் நாம் உள்நாட்டுப் போரை விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதி பூர்வகுடிகளுக்கும் இது நமக்கான நாடு, நமக்கான உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாட்டின் பிரிவுகள் அமைந்துள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில், வருங்கால சந்ததியினர்களுக்கு பூர்வ குடிகளின் போரையும், அமைதியற்ற சூழலையும்தான் விட்டுச் செல்ல இயலும்” என்று எச்சரிக்கை செய்தவர்.

சட்டமேதை அம்பேத்கர் மானுடத்தின் அனைத்து நிலை ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவும் உழைத்த தலைவர் என்பதை சொல்லாமல் விட்டதன் விளைவுதான் அவரால் உரிமைகள் பெற்ற மக்களுக்கே அவரால்தான் அதைப் பெற்றோம் என்று தெரியாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *