ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ஊழல் குறித்து மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை அறிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலின் எழுத்துப் பிரதி ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி ஊழல்
போலி டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கொண்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்த ஊழல் ஊடகத் துறையில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. யார் யார் எவ்வளவு நேரம் என்னென்ன சேனல்களைப் பார்க்கிறார்கள் என்பதைக் கணக்கிடும் (தொலைக்காட்சி ஒளிபரப்பு நேயர்களின் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcasting Audience Research Council- BARC) வெளியிடும் முடிவுகளை, தந்திரமாக தங்களது சேனலை அதிகம் பேர் பார்ப்பது போல் மோசடி செய்துள்ளது ரிபப்ளிக் தொலைக்காட்சி. இதனை அறிந்த BARC தனது ஒப்பந்த நிறுவனமான ஹன்சா ரிசர்ச் மூலம் இம்முறைக்கேடு தொடர்பாக வழக்குத் தொடுத்தது.
மேலும் படிக்க: தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி
இவ்வழக்கு தொடர்பான விசாரனையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கன்ச்சந்தினி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் அர்னாப் கோஸ்வாமி தொடர்புடைய மிக முக்கியமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மும்பை காவல்துறை வெளியிட்ட வாட்சப் ரகசியங்கள்
இந்நிலையில் மும்பை காவல்துறை அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலை, டி.ஆர்.பி ஊழல் தொடர்பான முக்கிய ஆதாரமாக குற்றப்பத்திரிக்கையுடன் இணைத்துள்ளது. அதில்தான் BARC நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடனான வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடலில், நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பாலகோட்- சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதுபற்றி பர்தோ தாஸ்குப்தாவுடனான
தனது வாட்ஸ் அப் உரையாடலில் கூறும் அர்னாப் கோஸ்வாமி, தொடர்ந்து அதற்கு முந்தைய நாள் மோடி காஷ்மீர் பகுதியில் கலந்துகொண்ட கூட்டம் குறித்து, “நாங்கள் கலந்து பேசிய பிறகு சில இட்டுக்கட்டுக்களை (பில்ட் அப்) திட்டமிட்டோம். அதனைக் கொண்டு ஒரு பெரும் உணர்வெழுச்சியை உருவாக்கும் திட்டமிருந்தது. அதனால் நேற்றைய அவரின் பேச்சை பயன்படுத்திக் கொண்டோம் மற்றும் அதை முன்னுக்குத் தள்ளினோம்” என்றும் தொடர்ந்து,
”This Attack We Won Like Crazy” என அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டுள்ளார்.
பாலகோட் தாக்குதல் அர்னாப்புக்கு முன்பே தெரிந்திருந்ததா?
புல்வாமா தாக்குதலையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதி மீது இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத ரகசிய-ராணுவத் தாக்குதல் திட்டமாக சொல்லப்பட்ட இந்தியாவின் பாலகோட் தாக்குதல் பற்றி அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய நபர்களுக்கு மட்டும் தெரிந்த விடயம் குறித்து அர்னாப் கோஸ்வாமி அறிந்துள்ளது அவருக்கு மோடி அரசுடன் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது.
பிப்ரவரி 23-ம் தேதி பர்தோ தாஸ்குப்தாவுடன் வாட்ஸ் அப் தட்டச்சில் உரையாடும் அர்னாப், “ஏதோ ஒன்று பெரிதாக நடக்கவுள்ளது
(On another note something big will happen)” என குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து,
பர்தோ தாஸ்குப்தா: தாவூத்தா (Dawood)?
அர்னாப்: இல்ல சார் பாகிஸ்தான். இந்த முறை பெரிதாக நடக்கும் (No sir Pakistan. Something major will be done this time)”
ப. தாஸ்குப்தா: நல்லது
ப.தாஸ்குப்தா: “இந்த (தேர்தல்) காலத்தில் ‘பெரியவருக்கு’ இது நல்லதாக அமையும்.
(It’s good for big man in this season)”.
ப. தாஸ்குப்தா: பிறகென்ன அவர் வாக்குகளை அள்ளிவிடுவார் (He will sweep polls then).”
ப. தாஸ்குப்தா: “விமானத் தாக்குதலா அல்லது அதைவிட பெரிதா? (Strike? Or bigger)”.
அர்னாப்: “எப்பொழுதுமான இயல்பான தாக்குதலைவிட பெரிது. அதே நேரம் காஷ்மீரிலும் பெரிதாக ஒன்று. பாகிஸ்தான் மீதான தாக்குதல் மக்களை உற்சாகப்படுத்தும் என அரசாங்கம் நம்புகிறது. அதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது (Bigger than a normal strike. And also on the same time something major on Kashmir. On Pakistan the government is confident of striking in a way that people will be elated. Exact words used).”
மேலும், மற்றொரு உரையாடலில், பர்தோ தாஸ்குப்தா பிரதமர் அலுவலகத்தில் தனக்கு ஊடக ஆலோசகர் பொறுப்பை பெற்றுத் தரும்படி கோர, அர்னாப்,” சரி, வேண்டியதைச் செய்கிறேன்” என்கிறார்.
யார் அந்த AS? விசாரிக்கப்படுவாரா அர்னாப்?
இன்னொரு உரையாடலிலோ, டி.ஆர்.பி தொடர்பான தகவல்களை மக்கள் பார்வைக்கு வைக்கும்படி கூறும் ட்ராய் விதிமுறைகள் தமக்கு இடையூறை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி, ‘AS’ ஸிடம் சொல்லி அதனை சரிசெய்யுமாறு பர்தோ தாஸ்குப்தா அர்னாபிடம் கேட்கிறார்.
இவர்கள் குறிப்பிடும் ‘AS’, அமித் ஷா (Amit Shah) வாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
1000 பக்கங்களுக்கு மேலுள்ள அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் தட்டச்சு உரையாடல்கள், ஆளும் பாஜக அரசுடன் அவருக்கிருந்த நெருக்கத்தையும், தனது செய்திகள் மூலம் பாஜகவிற்கு ஆதரவாக அவர் கட்டமைத்த ஊடக பிரச்சாரத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தங்களுக்குள்ள ஊடக பலம் மூலம், தங்களை தேசியவாதிகளாகக் கூறிக் கொண்டு, மக்கள் செயற்பாட்டாளர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கும் இவர்கள், ராணுவத்தினர் மரணத்தை தேர்தல் ஊடக வியாபாரமாக்கியுள்ளனர்.