சுறா குஞ்சுகள்

கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக சுறா மீன்களின் குஞ்சுகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே அதன் முட்டைகளில் இருந்து வெளியேறி விடுவதாக புதிய ஆராய்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

40 % சுறாக்கள் முட்டையிடும் வகையைச் சார்ந்தவை

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பரப்பில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் திட்டான “கிரேட் பேரியர் ரீஃப்” அமைந்துள்ளது. சுமார் 2300 கீ.மீ தொலைவிற்கு அமைந்துள்ள இந்த பவளப் பாறைகளில் தனித்துவமாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஈபோலெட் சுறா(epaulette sharks) இனத்தை ஆய்விடுகையில், வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக ஈபோலெட் வகை சுறா முட்டைகளில் இருந்து சுறா குஞ்சுகள் விரைவாக வெளியேறி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் வாழும் சுறா இனங்களில் சுமார் 40% முட்டையிடும் வகையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

இங்கிலாந்து நாட்டில் பாஸ்டன் நகரில் செயல்பட்டு வரும் நியூ இங்கிலாந்து அக்வாரியத்தில் 27 ஈபோலெட் வகை சுறா மீன்களின் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர். இதில் சில ஈபோலெட் முட்டைகளை 27°C வெப்பநிலையிலும் மற்றும் சில ஈபோலெட் முட்டைகளை 31°C  வெப்பநிலையிலும் வைத்து வளர்க்கப்பட்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஈபாலெட் சுறா முட்டைகள் ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்டவை என்பதால், ஆராய்ச்சியாளர்கள் முட்டையினுள் இருக்கும் சுறா குஞ்சுகள் வளர்ந்து வருவதையும், முட்டையினுள் இருக்கும் மஞ்சள் கருவை எவ்வளவு விரைவாக சாப்பிடுகின்றன என்பதையும் தொடர்ச்சியாக கவனித்து ஆய்வு செய்து வந்தனர்.

அதிர்ச்சியான முடிவுகள்

இதில் 31°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருந்த முட்டைகளில்  மஞ்சள் கருவை சுறா குஞ்சுகள் வேகமாக சாப்பிடுவதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிச்சியடைந்தனர்.

மேலும் சாதாரண வெப்பநிலையில் (28°C) சுறா குஞ்சுகள் 125 நாட்களுக்குப் பிறகு முட்டைகளில் இருந்து வெளிவருவதாகவும், அதேசமயம் 31°C நீரில் வைக்கப்பட்ட முட்டைகளில் இருந்து அவை 100 தினங்களிலேயே வெளிவந்ததாகவும் ஆய்வில் முடிவுகள் தெரிவிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவ்வாறு 125 நாட்களுக்கு முன்னரே வெளியேறும் சுறா குஞ்சுகளின் உடற்தகுதியை அளவிட்டதில் அவை பலவீனமாக இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

அழிவின் விளிம்பில் சுறா இனங்கள்

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளரான கரோலின் வீலர் தெரிவிக்கையில் “வெப்பமான நிலைமைகளில் எல்லாமே வேகமாக நடக்கின்றன, இது சுறாக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.” என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட “வெப்பமண்டல பவள பாறைகளில் வாழும் சுறா இனங்கள்” பற்றிய ஆய்வில், உலகெங்கிலும் சுமார் 20%-க்கும் மேலானவை அழிந்துபோகும் நிலைமைகளில் இருப்பதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே பல சுறா இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் தருவாயில், தற்போது ‘ஜர்னல் சையின்டிஃபிக்’ ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் எதிர்காலம் குறித்தான கவலையை ஏற்படுத்துவதாகக்” கூறி கரோலின் வீலர் வருந்தியுள்ளார்.

கடல் வெப்ப உயர்வால் ஏற்படும் மூன்று விளைவுகள்

சுறாக்கள் வேட்டையாடும் உயிரினங்களில் முக்கியமானவை ஏனென்றால் அவை பலவீனமான மற்றும் காயமடைந்த கடல் உயிரினங்களை வேட்டையாடி கடலின் சமநிலை மாறாமல் வைத்திருக்க உதவும். ஆரோக்கியமான பவளப்பாறைகளுக்கு தேவை ஆரோக்கியமான  வேட்டையாடும் உயிரினங்கள். தொடர்ச்சியாக கடல் நீர் வெப்பமடைவதால் முட்டை இடும் சுறாக்களுக்கு மூன்று விளைவுகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • முதலாவதாக, வெப்பம் அதிகரிக்கும் சூழலில் சுறா இனங்கள் குளிர்ந்த வெப்பநிலையுடன் கூடிய பகுதிகளைக் கண்டுபிடித்து அந்த இடங்களில் முட்டைகளையிட்டு இனபெருக்கம் செய்யும். ஆனால் அவைகளுக்கு ஏற்ற வாழ்விடத்தை கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியப்படும்.
  • இரண்டாவதாக, வெப்பமான வெப்பநிலைக்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் மரபணுக்களை  மாற்றியமைக்க முயற்சிக்கும். சுறாக்களின் பாலியல் முதிர்ச்சி மற்றும் இனப்பெருக்க வேகம் என்பது குறைவே. அதுமட்டுமின்றி “நாம் கிரகத்தை மாற்றியமைக்கும் வேகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் எந்த உயிரினங்களும் இந்த பூமியில் இல்லை.
  • மூன்றாவது மற்றும் இறுதி விளைவாக, இந்த இனங்கள் இந்த  கிரகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்.

2012-ம் ஆண்டிலிருந்து சுறாக்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் ஜே.டி.ரும்மர், “நாங்கள் 2012-ம் ஆண்டு முதல் இந்த சுறா இனத்தை ஆராய்ந்து வருகிறோம். பவளப் பாறைகளின் வெப்பநிலைகளில் ஏற்படும் மாறுபாடுகளை சமாளிப்பது இவைகளுக்கு கடுமையான சவாலாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் அவர் “கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது மற்றும் கடலில் ஆக்சிஜன் அளவுகள் குறைவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கூட  எபாலெட்டுகள் தாங்கக்கூடும், ஆனால் வெப்பநிலை அதிகரிப்பது அவைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகத் இருக்கும்” என தெரிவித்தார்.

“புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பதின்  முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும், ஏனெனில் காலநிலை மாற்றத்தால் கடினமான சுறாக்கள் கூட பாதிப்படைக்கிறது” என ரும்மர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *