தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்நாட்களில் நடைபெறும் நெற்பயிர் அறுவடை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளன; மழையினால் பயிரிலே நெல் முளைக்கத் தொடங்கிவிட்டது. தென் மாவட்டங்களிலும் கடும் மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயப் பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
மழை பாதிப்பு குறித்து இதுவரை அரசினால் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது மட்டுமன்றி, பாதிப்பு குறித்த கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை.
கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகள்
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து மூழ்கிப் போயுள்ளதால் விவசாயிகளும், அவர்தம் குடும்பங்களும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீரும், கம்பலையுமாக நிற்கின்றனர். சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட தமிழக அரசோ, அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது வேதனையான விசயமாகும். இதனால் விவசாயிகள் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என குறிபிட்டுள்ளார்.
அடுத்தடுத்த பேரிடர்
கடந்த அறுவடை பருவத்தின் போது நிவர் புயல் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை விளைவித்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்லும் கூட கொள்முதல் நிலையங்களில் கிடந்து மழையினால் சேதமடைந்தன. தற்போதைய அறுவடை பருவத்திலும் விவசாயிகளின் பாதிப்பு தொடர்கிறது. இந்நிலையில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வைகோ கோரிக்கை
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில்,” தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் குறுவட்ட வாரியாக கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து பெரும் துயரில் வாடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதி விவசாய செயற்பாட்டாளர்கள் இந்த பாதிப்பினை “அறுவடை பேரிடராக” அடையாளப்படுத்துகின்றனர். அவர்கள் சார்பாக கீழ்காணும் கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பிலிருந்து கீழ்காணும் கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. அவை,
1) ஒரு மணிநேரத்திற்கு 3000 ரூபாய் செலவாகும் அறுவடை இயந்திரத்தின் வாடகைக்கு அரசு உடனடியாக மானியம் வழங்க வேண்டும்.
2) அறுவடை எந்திர தட்டுபாட்டைத் தவிர்க்க அரசு வாடகை மானியத்தோடு வேறு பகுதிகளிலிருந்து அறுவடை எந்திரங்களை உடனடியாக இறக்க வேண்டும். தாமதமானால் மீதமுள்ள நெல்மணிகளும் முளைவிட்டு விடும்.
3) நெல் கொள்முதல் நிலையங்களில் 14% ஈரப்பதத்திற்கு அதிகமாக இருந்தால் கொள்முதல் செய்யாத நடைமுறை தற்போது உள்ளது. இந்த பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு 20% ஈரப்பதம் மிகுந்திருப்பினும் அரசே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். (1971, 1986 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய அரசு இதை செய்தது)
4) ஏக்கருக்கு 25000 ரூபாய் முதலீடு செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் கூட திரும்பப் பெற இயலாத நிலையில் உள்ள இந்த பருவம் தப்பிய பெருமழையை இயற்கைப் பேரிடராக அறிவித்து ஏக்கருக்கு 30000 ரூபாய் வழங்கிட வேண்டும்.
5) கஜா புயலில் பாதிக்கபட்ட தென்னை மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னம்பிள்ளைகளை மறுநடவு செய்ததில் இரண்டாண்டு மட்டுமே ஆன நிலையில், இளம் தென்னம்பிள்ளைகளில் தண்ணீர் தேங்கி முழுமையாக சேதமடைந்துவிட்டது. அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
6) நீண்டகாலத் திட்டமாக வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கிடவும். வடிகால்களை தூர்வாருவதற்கான பணிகளை இந்த கோடையில் துவங்க வேண்டும்.