Delhi riot Whatsapp Weapon

டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த மதக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 23-ம் தேதி பாஜக-வின் கபில் மிஸ்ரா இஸ்லாமியர்கள் குறித்து பொதுவெளியில் வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்குப் பிறகுதான் இந்த கலவரம் மிக மூர்க்கமாக நடந்தேறியது. 

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி ’Kattar Hindu Ekta’  எனும் இந்துத்துவ வாட்சப் குழுவின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 125 பேரை உள்ளடக்கிய கொண்ட இந்த குழுவில் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த குழுதான் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை ஒருங்கிணைத்து, அதற்கு வாட்சப் மூலமாக ஆட்களை ஒன்று திரட்டும் வேலையை செய்துள்ளது. 

பொது இடத்தில் செல்லக்கூடிய மக்களிடத்தில் அவர்களுடைய அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லி, அவர் இந்துவாக இருந்தால் விட்டுவிட்டு, இஸ்லாமியராக இருக்கும்பட்சத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடச் சொல்லி அடித்துத் துனபுறுத்தியுள்ளனர்.

அதேபோல் பிப்ரவரி 25-ம் தேதி பாராளுமன்றத்தில் அமித்ஷா டெல்லியில் கலவரம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற பேசிய பிறகு, இந்த ’Kattar Hindu Ekta’ குழு மூன்று கொலைகளை செய்துள்ளது. இவர்களுக்கு இடையில் நடந்த வாட்சப் உரையாடல்களை சட்டவிரோத ஒப்புதல் வாக்குமூலமாக காவல்துறை எடுத்துக்கொண்டது. 

காவல்துறை அறிக்கையின் படி ‘Kattar Hindu Ekta’ குழு 25 பிப்ரவரி 2020 அன்று மதியம் 12:49 மணிக்கு உருவாக்கப்பட்டது. முதலில் அந்த வாட்சப் குழுவில் 125 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

“கண்ணில்படும் அனைத்து இஸ்லாமியர்களையும் அடித்துக் கொல்லுங்கள்”

என்ற முழக்கம் தொடர்ந்து அந்த குழுவில் பரப்பப்பட்டுள்ளது. அந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் பிப்ரவரி 25 அன்று மதியத்தில் இருந்து அடுத்த நாள் பிப்ரவரி 26-ம் தேதி இரவுக்குள் 9 இசுலாமியர்களை அடித்துக் கொலை செய்துள்ளனர். அதேபோல் நூற்றுக்கணக்கானவர்களை அடித்து மிகக் கொடூரமாக காயப்படுத்தியுள்ளனர். இவ்வனைத்து சம்பவங்களும் பகிரதிவிகார் என்ற பகுதியில் நடந்துள்ளது. இந்த குழுவை ஒருங்கிணைத்தது இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த லோகேஸ் சோலானி எனும் நபர்.

அவன் அந்த வாட்சப் குழுவிலும், இன்னும் பல இந்துத்துவ குழுக்களிலும்

“நான்தான் லோகேஸ் சோலானி, ஏதாவது ஆள் பற்றாக்குறை இருந்தால் சொல்லவும், நமது கங்கால் விகார் குழுவை அனுப்புகிறேன். எங்களிடம் போதுமான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் பல ஆயுதங்கள் உள்ளது”

என்று கூறியுள்ளான்.

சரியாக பிப்ரவரி 26 அன்று இரவு 11:44 மணிக்கு அவன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளான். அதில் 

“வினய் உனது சோதரன் மிகவும் திறமைசாலி. அவன் எப்போதும் வேலைகளை திறமையாக செய்து முடிக்கிறான். இன்று அவன் 2 இசுலாமியர்களைக் கொன்று சாக்கடையில் தூக்கி எறிந்தான்“ 

என்று குறிப்பிட்டுள்ளான்.

பின்னர் ஒரு மிக முக்கியமான செய்தி பகிரப்பட்டுள்ளது. 

”நான் கங்கா விகார், கோகுல்பூரி, ஜோர்பூரி பகுதிகளில் 23 இஸ்லாமியர்களின் மண்டையை உடைத்தேன்” 

அதேபோல் Kattar Hindu Ekta வாட்சப் குழுவில் கபில் மிஸ்ராவின் வெறுப்புப் பிரச்சாரம் தொடர்ச்சியாக பரப்பப்பட்டுள்ளது. 

”இதை ஒரு உணர்ச்சிப்பூர்வமான உந்துதலாக எடுத்துக்கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடும் அனைவரையும் அடித்து நொறுக்குவோம். அதுவே நமது தேசக் கடமை” 

என்று பரப்பப்பட்டுள்ளது.

“சகோதரர்களே பிரிஜ்புரி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் நேரடியாக நம்முடன் களத்தில்  இறங்கியுள்ளனர். இங்கு 9 இஸ்லாமியர்கள்  வெற்றிகரமாக கொல்லப்பட்டுள்ளனர்”

என்றும் செய்தி அனுப்பியுள்ளனர். 

சாகில் என்ற இஸ்லாமியரின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த 16 பேர் அந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய செயல்வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் இந்துத்துவ வலதுசாரி தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்குவதற்காக இதுபோன்று பல்வேறு வெறுப்புப் பிரச்சாரங்களையும், பொய் செய்திகளையும் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் பரப்பிய பொய் செய்திகளை ‘Fake News Factory’ என்று வர்ணித்து பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வன்முறை நோக்கத்திற்காகவும், மதவாத பிரிவினை நோக்கத்திற்காகவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் இந்துத்துவ குழுக்களை முடக்குவதற்கு காவல்துறை தவறி வருகிறது. காரணம் ஆளும் அரசான பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவே அப்படிப்பட்ட பரப்பலைத்தான் செய்து வருகிறது. 

சிறுபான்மையினர் மீது நடக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஏறத்தாழ 93% Whatsapp மற்றும் Facebook வழியாகத்தான் நடக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Islamophobic எனும் இஸ்லாமிய பீதி 100% சமுகவலைதளங்களின் ஊடாகத்தான் வளர்ந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் எதேச்சையாக நடப்பது இல்லை. அது திட்டமிட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையாகத் (Organised Violence) தான் நடக்கிறது. எல்லாவித முன்னேற்பாடுடன்தான் இந்த வன்முறைகள் நடத்தப்படுகின்றன. இதன் துவக்கம் மற்றும் முடிவு அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் உறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பதை Kattar Hindu Ekta’ போன்ற குழுக்களின் செய்பாடுகளில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. 

இதற்கு இவர்களுக்கு சமூகவலைதளங்கள் களம் அமைத்துத் தருகின்றன. எனவே இதுபோன்ற மதவாத சக்திகள் சமூகவளைதளங்களில் மேற்கொள்ளும் வன்முறை வெறுப்புப் பிரச்சார செயல்பாடுகள் சட்டப்படி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு முடக்கப்பட வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தண்டனைக்கு உட்படுத்தாமல் ஒன்றிய அரசு பாதுகாக்க முயல்வது தவறான நடவடிக்கையாகும். இந்தியாவின் அமைதியை ஒழித்து கலவர பூமியாக மாற்றும் சூழலுக்கு இது போன்ற செயல்கள் வித்திட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *