கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் நாடு முழுதும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் சட்டம் (Working Journalists act) மற்றும் தொழில்துறை சிக்கல்கள் சட்டம் (Industrial Disputes Act) ஆகிய இரண்டுமே பத்திரிக்கையாளர்கள் விவகாரத்தில் மதிக்கப்படவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் 30,000 பத்திரிக்கையாளர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பேரிடர் காலத்தில் பத்திரிக்கையாளர்கள் மிக முக்கியமான பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்கினை பத்திரிக்கையாளர்கள் செய்து வருகிறார்கள். அவர்களது உழைப்பினை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, இந்த பேரிடர் சூழலில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது என்பது தவறான போக்காகும்.
தேசிய ஊடகவியலாளர் கூட்டமைப்பு, மெட்ராஸ் பத்திரிக்கையாளர் சங்கம், கேரளா பத்திரிக்கையாளர் சங்கம், மற்றும் டெல்லி பத்திரிக்கையாளர்களின் சங்கம் உள்ளிட்டவை இணைந்து ஜூலை 9 -ம் தேதியினை தேசிய போராட்ட நாளாக கடைபிடிக்கும் அழைப்பினை விடுத்துள்ளனர். இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்களால் இணைய வழி போராட்டமும், நேரடி களப் போராட்டங்களும் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து இந்த ஊடகவியலாளர்கள் சங்கங்கள் இணைந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அதில் பத்திரிக்கையாளர்களை பணி நீக்கம் செய்யப்படுவதைக் கண்டித்துள்ளனர். மேலும் ஊதியக் குறைப்பு செய்யப்படுவது மோசமான செயல் என்று தெரிவித்துள்ளனர். பல பத்திரிக்கை நிறுவனங்கள் ஊடகவியலாளர்களை ஊதியம் அளிக்காமல் கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளனர். மேலும் பல நிறுவனங்களில் 10 முதல் 50 சதவீதம் வரை ஊதியக் குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்களின் இந்த செயலைக் கண்டித்து பத்திரிக்கையாளர்களின் உரிமைகளையும், ஊடகவியலையும் காப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜார்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் பொதுச்செயலாளரான சங்கர் பேசுகையில், தமிழ்நாட்டில் விகடன் மற்றும் தி இந்து குழுமங்களில் நடைபெற்றுள்ள சட்டவிரோத வேலை நீக்கங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றிருப்பதாக தெரிவித்தார். பத்திரிக்கைத் துறையின் தூணாக ஊடகவியலாளர்கள் தான் இருக்கிறார்கள். கொரோனா நேரத்தில் ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலிலிருந்து மீண்டு வர, நிறுவனங்களை ஆதரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்வதோ, அவர்களுக்கு ஊதிய குறைப்பு செய்வதோ தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தங்கள் சங்கம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.