பிரசாந்த் பூஷன்

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரண்டு ட்வீட்களுக்காக அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அத்தீர்ப்பின் மீது மறுவிசாரணை கோரி ஆதரவு குவிந்து வருகிறது.

முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 3000 பேரின் குரல்

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் விமர்சனக் குரல்களை நெறிப்பது நாட்டின் எந்த நிறுவனத்திற்கும் நல்லதல்ல என்றும், குறிப்பாக நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கு அது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளான சுதர்சன் ரெட்டி, ரூமா பால், மதன் லோக்கூர், வரலாற்றியலாளர் ரொமிலா தப்பார் உள்ளிட்டோரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரசாந்த் பூஷனின் விமர்சனங்களை நீதிமன்றம் நல்ல நோக்கில்தான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும், ஒரு தனிநபரின் ஒரு ட்வீட் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையினை அழித்துவிட முடியும் என்று கருதினால், நீதித்துறைக்கு அதன் மீதே உறுதியான நம்பிக்கை இல்லாதது போல் ஆகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த பூஷனின் வழக்கை விசாரிக்க இத்தனை அவசரம் காட்டியது ஏன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மல் லோதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

1800 வழக்கறிஞர்களின் குரல்

இந்த 3000 பேரின் அறிக்கை மட்டுமல்லாது, மேலும் பார் கவுன்சிலைச் சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மீதான உச்ச நீதிமன்றத்தின் முடிவினை கேள்வி எழுப்பியுள்ளனர். 

மூத்த வழக்கறிஞர்களான ஸ்ரீராம் பன்ச்சு, அர்விந்த் தாதர், மேனகா குருசுவாமி, ஷ்யாம் திவான், நவ்ரோஜ் சீர்வை, ராஜூ ராமச்சந்திரன், பிஸ்வஜித் பட்டாச்சார்யா, கருணா நந்தி, இக்பால் சக்லா, உள்ளிட்டோரும் இந்த 1800 பேரில் உள்ளடக்கம்.

முழு பட்டியலை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
https://docs.google.com/spreadsheets/d/1B_MDUNwikNs2momE2EV5hh4AoMWeVx31FOMaIpSWcdA/edit#gid=700758088

நீதிமன்றத்தின் சுதந்திரம் என்பது நீதிபதிகளை ஆய்விற்கு உள்ளாக்குவதை தடுப்பதோ, அவர்களைக் குறித்து கருத்து தெரிவிப்பதை தடுப்பதோ அல்ல என்று தெரிவித்துள்ளனர். பிரசாந்த் பூஷனின் கருத்துகள் நீதித்துறையினை அவமதிக்கும் நோக்கத்தில் இல்லை என்று தாங்கள் அனைவரும் ஒருமனதுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தொற்று முடிந்த பிறகு, திறந்த நீதிமன்றத்தில் ஒரு பெரிய நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக நீதிமன்ற அவமதிப்பின் குற்றவியல் நடைமுறைகள் குறித்து மறுஆய்வு செய்யும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அதுவரை இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். 

இன்னும் இரண்டு நாட்களில் ஆகஸ்ட் 20-ம் தேதி பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை என்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் எழுப்பியுள்ள இந்த குரல் முக்கியமான விவாதத்தினை உருவாக்கி இருக்கிறது. 

மேலும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோரும் இத்தீர்ப்பினை விமர்சித்துள்ளனர். 

கடந்த 6 ஆண்டு காலமாக நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை(Emergency) நிலவுவதாகவும், அது வரலாற்றில் ஆய்வு செய்யப்படும்போது அதில் உச்ச நீதிமன்றம் மற்றும் 4 தலைமை நீதிபதிகளின் பங்கும் இருக்கும் என்று ஒரு ஜூலை 26ம் தேதி ஒரு ட்வீட்டினை பிரசாந்த் பூஷன் பதிவு செய்திருந்தார்.

அதன் பிறகு ஜூலை 29-ம் தேதி தலைமை நீதிபதி SA பாப்டே அவர்கள் விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, ”நீதியைப் பெறுவதற்கான குடிமக்களின் உரிமைகளை மறுத்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தினை லாக்டவுன் மோடில் வைத்துவிட்டு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாக்பூரின் ராஜ்பவனில், பாஜக தலைவர் ஒருவரின் 50 லட்ச ரூபாய் மோட்டார்சைக்கிளை முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் இன்றி ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டிருந்தனர்.

இந்த இரண்டு ட்வீட்கள் மீதும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதிவுசெய்து, அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பு தான் இன்று வழக்கறிஞர் மற்றும் முன்னாள் நீதிபதிகள் மத்தியில் மிகபெரும் விமர்சனத்தையும், விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது.

இதையும் படிக்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *