மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை தானே உற்பத்தி செய்யத் தொடங்கிய பிறகு, தன் தேவையைத் தாண்டி அதிகமாக உற்பத்தி செய்த பொருட்கள் உபரி எனப்பட்டன. அப்போது இந்த உபரியின் விளைவாக இன்னொரு சக மனிதனிடம் பரிவர்த்தனை செய்யும் முறை உருவானது. அப்படிப்பட்ட பரிவர்த்தனை முறை உருவான காலத்திலிருந்தே உணவுப் பொருட்களுக்கான சந்தை என்பது ஒரு இன்றியமையாத தேவையாக வளர்ந்து வருகிறது.
வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.
உணவை மையப்படுத்தி உருவான சந்தையானது, பின்னர் அனைத்துவித உபயோகப் பொருட்களையும் மையப்படுத்தி விரிவடைந்தது. சந்தையே பொருளாதாரத்தின் மையமாக பிற்காலங்களில் மாற்றப்பட்டது.
சந்தையும் நாடு பிடித்தலும்
ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் சந்தைக்குத் தேவையான மூலப் பொருட்களுக்களைப் பெறுவதற்கும், உற்பத்தி செய்த பிறகு பொருட்களை விற்பனை செய்திடவும் பிரதேச எல்லைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. மன்னர்கள் காலம், காலனி ஆதிக்க காலம் என்று அனைத்திலும் இது தொடர்ந்தது. இதற்காகத் தான் நாடு பிடிக்கும் சண்டைகள் நடந்தேறின.
முதலாளிகளுக்கு சார்பான இத்தேவைகளை நிறைவேற்றுதற்காக நிகழ்த்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகளின் விளைவுகளே இரண்டு உலகப் போர்களையும், காலனி நாடுகளில் பஞ்சங்களையும் உருவாக்கின.
மூன்றாம் உலக நாடுகளை பணிய வைத்திடும் பொருளாதார யுத்தி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகில் பல அடிமை தேசங்கள் காலனி ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுதலை பெற ஆரம்பித்தன. விடுதலை பெற்ற இந்த நாடுகள் சோசலிச தேசங்களின் நட்பை நோக்கி நகர்வதைத் தடுப்பதற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தைக்கு அந்த நாடுகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் பல்வேறு உத்திகளை மேற்குலக நாடுகள் கையாண்டன.
பாரம்பரியமாக மரபுவழி சார்ந்த தானியங்கள் பயிர் செய்யும் முறைகளைத் தடுத்து 1960-70களில் அமெரிக்காவின் துணையோடு ஏற்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி முதற்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை உலக வர்த்தக கழகத்தின் (WTO)மூலம் போடப்படும் ஒப்பந்தங்கள் என அந்த உத்திகள் நீள்கிறது. வளர்ந்த நாடுகளின் சந்தைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வளரும் நாடுகளை தங்கள் வணிக சங்கிகளில் பிணைக்க வகுக்கப்பட்ட திட்டங்களே அவை.
பசுமைப் புரட்சியும் பஞ்சாப் விவசாயிகளும்
அதிக மகசூல் தருபவை என்ற பெயரில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹைபிரிட் விதைகள் மற்றும் வேதி உரங்கள் போன்றவற்றை இந்தியாவில் பசுமை புரட்சிக்காக முதன் முதலில் செயல்படுத்திய இடம் பஞ்சாப். அந்த பஞ்சாப் மாநிலம்தான் (2014-15) ஒரு ஏக்கர் நிலத்துக்கு அதிகமான உரங்கள் பயன்படுத்தும் மாநிலமாக இருக்கிறது. அதிக உரங்கள் அதிக செலவீனத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
என்.சி.ஆர்.பி தரவுகளின் படி 2015-16ம் வருடத்தில் பஞ்சாபில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை 118 சதவீதமாக உயர்ந்தது. இந்த செய்தி பசுமைப் புரட்சி என்பது இந்திய விவசாயிகளின் நலனுக்கு உறுதுணையாக இல்லை என்பதையும், ஏகாதிபத்திய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதையும் காட்டுகிறது.
விவசாயிகளை இறுக்கும் WTO ஒப்பந்தம்
மேலும் நிலையான விவசாயத் திட்டமிடல் இல்லாமல் போனதாலும் விதைகள், உரங்கள் என்று வெளிநாட்டு இறக்குமதியை மட்டும் நம்பி உற்பத்தி செலவீனங்களை அதிகரித்த காரணத்தாலும் தற்போது விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தாங்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படும் சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்களை நிறுத்த சொல்லி நெருக்கிக் கொண்டிருக்கிறது WTO-வில் போடப்பட்ட விவசாய ஒப்பந்தம்.
ஆங்கிலேயர் காலத்தில் உணவுப் பொருட்களுக்கு மாறாக கரும்பு மற்றும் பருத்தி போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்ய விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்தியாவில் உருவான பஞ்சங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் இன்றும் அத்தியாவசியம் அல்லாத விவசாயப் பயிர்கள் முன்னிறுத்தப்படுகிறது. அதேபோல் விவசாயிகளுக்கு அரசு உத்திரவாதம் செய்யும் குறைந்தபட்ச ஆதார விலை(MSP) என்பதை நீக்கம் செய்யும் வேலைகளும் நடக்கிறது.
குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கொண்ட வளர்ந்த நாடுகளுடன், அதிக எண்ணிக்கையிலான சிறு-குறு விவசாயிகளை உள்ளடக்கிய வளரும் நாடுகளை ஒப்பிட்டு எல்லோருக்கும் ஒரே விதமான இறக்குமதி வரி விதிப்பது மோசமான நடவடிக்கையாகும்.
ஹைத்தி குடியரசின் பொருளாதாரத்தை கைப்பற்றிய அமெரிக்க நடவடிக்கை
1994-ம் ஆண்டு வட அமெரிக்காவின் கரிபியன் தீவில் அமைந்துள்ள ஹைத்தி குடியரசு மீது அமெரிக்கா தனது ராணுவ தலையீடுகளின் மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு 1996-ம் ஆண்டு ஹைத்தி குடியரசை ஒரு புதிய பொருளாதார கொள்கைக்குள் சிக்கவைத்தது. அதன்படி 50% ஏற்றுமதி இறக்குமதி கட்டணக் குறைப்புக்குள் தள்ளியது. இதன் விளைவாக 10 ஆண்டுகளில் உள்நாட்டு உணவு சந்தை முழுமுற்றாக அழிக்கப்பட்டது. 80 சதவீத உணவு தானியங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இன்று ஹைத்தி அமெரிக்காவின் ஒரு பொருளாதார காலனிய நாடாக திகழ்கிறது.
WTO ஒப்பந்தத்தின் அம்சங்களை மூன்று அவசர சட்டங்கள் மூலமாக இந்திய அரசு நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் பிடி கார்ப்பரேட்டுகளின் கைகளில் நகர்த்தப்பட்டு, விவசாய மானியங்கள் ரத்து செய்யப்படும் நிலையும் இருக்கிறது. உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அதைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் எந்த சாதகமும் இல்லாமல் முழுவதுமாக முதலாளிகளின் லாபத்திற்கு மட்டும் பலியிடப்படும் நிலையில் விவசாயிகளின் வாழ்க்கை தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.