தூத்துக்குடியில் மக்கள் போராட்டங்களின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பினை அளித்திருக்கும் நீதிமன்றம் ஆலையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் இத்தீர்ப்பினை அளித்துள்ளனர். 42 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கின் மீதான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று ஜனவரி 8, 2020 அன்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தமிழக அரசின் சார்பிலும், மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேராசிரியர் பாத்திமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ஜூனன், மக்கள் அதிகாரம் அமைப்பின் ராஜூ உள்ளிட்டோரும் மனுதாரர்களாக வாதிட்டனர்.
வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வாதிட்ட ஆர்யமா சுந்தரம், பி.எஸ் ராமன் ஆகியோர் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடியதன் பின்னணியில் சீனா நிறுவனங்கள் இருப்பதாகவும், சீன நிறுவனங்கள் பணம் கொடுத்து போராட்டக்காரர்களை தூண்டியதாகவும் வாதிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் வசிக்கும் ஒருவர் அண்ணா நகரில் வசிப்பவரை விட பாதுகாப்பானவர் என்றும் வாதிட்டனர்.
எதிர் மனுதாரர்கள் ஸ்டெர்லைட்டை மூடிய பிறகு, தூத்துக்குடியில் சுற்றுச் சூழல் முன்னேற்றமடைந்திருப்பதாக வாதிட்டனர்.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு அளித்திருந்த உத்தரவு தொடரும் என்றும், ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இத்தீர்ப்பினை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 15 தியாகிகளுக்கு கிடைத்த நீதி இத்தீர்ப்பு என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் கட்சிகள் அனைவரும் இத்தீர்ப்பினை வரவேற்று வருகிறார்கள்.
திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமனா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பில் சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை
1993-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் கொண்டுவரப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அங்கு எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக 1994-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பல்வேறு உடல்நிலை பாதிப்புகளுக்கு உள்ளானதால், சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் 1996-ல் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் 1998-ம் ஆண்டு முதன்முதலில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது.
பின்னர் ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றது. 2010-ம் ஆண்டு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. மீண்டும் உச்சநீதிமன்றம் திறக்க அனுமதித்தது.
2013-ம் ஆண்டு ஆலையிலிருந்து விசவாயுக் கசிவு ஏற்பட்டதாக மூடப்பட்டது. பின்னர் அதற்கு இழப்பீடாக 100 கோடி வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணியில் இறங்கிய காரணத்தினால் 2018-ம் ஆண்டு மீண்டும் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இப்போராட்டத்தின் 100வது நாளின் போது 22 மே 2018 அன்று மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மக்களின் போராட்டங்கள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. இப்படி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த மக்களின் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
இத்தீர்ப்பினை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.