கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் நடைபெற்று வரும் ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (5/1/2021) ’41வது’ நாளை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் விவசாய சங்கத் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்றது.
ஆனால் அரசாங்க தரப்பில் முழு சட்டத்தையும் திரும்பப் பெற மறுத்து சில மாற்றத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருந்த காரணத்தால் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே சென்றது.
ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையிலும் விடாப்பிடியாக நிற்கும் மோடி அரசு
நேற்று (4/1/21) திங்களன்று நடந்த ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையில் அரசு மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்ற காரணத்தினால் மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அரசாங்கம் மீண்டும் சட்டங்களை திரும்பப் பெறுவதை தவிர்த்து சில மாறுதல்களை மட்டும் செய்வதிலேயே குறியாக இருந்து வலியுறுத்தியது. அதே நேரத்தில் விவசாய சங்கங்கள் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதோடு குறைந்த பட்ச ஆதார விலைகளுக்கு சட்டத்தின் மூலமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளில் தெளிவாக நின்றன.
மீண்டும் சொந்த உணவையே உண்ட விவசாயிகள்
முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் போலவே, இம்முறையும் மதிய உணவு இடைவேளையின் போது விவசாயிகளின் பிரதிநிதிகள் தாங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்து கொண்டுவந்த உணவையே சாப்பிட்டதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக தலைவர்களுக்கு கண்டனம்
ஆளும் பாஜக அரசாங்கத்தின் தலைவர்கள் புதிய சட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வழங்கி வருவதையும், விவசாயிகளுக்கு அச்சட்டங்கள் நல்லது என்று தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டி “இனி ஆளும் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு சாதகமான விளைவையும் நான் எதிர்பார்க்கவில்லை” என பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் ‘தி இந்து’ செய்தியில் தெரிவித்தார்.
மேலும் அவர் “எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாகவும் தாங்கள் மூன்று விவசாய விரோத சட்டங்களையும் ரத்து செய்வதோடு குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கும்வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை காலவரையின்றி தொடருவோம்”என்றும் ஜோகிந்தர் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை(3/1/21) ‘தி இந்து’ செய்தியில் தெரிவித்தார்.
அகில இந்திய விவசாய சங்கப் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா கூறுகையில் புதியதாக இயற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த விவாதத்தையும் நாங்கள் முன்னெடுக்க விரும்பவில்லை என தெரிவித்ததாக ‘NDTV’ செய்தி வெளியிட்டுள்ளது.
குளிரில் வாடும் முதியவர்கள்
“குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட உழைக்கும் மக்கள் கடுமையான குளிரில் போராடி வருகிறார்கள். மேலும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்துவிட்டனர். இந்த சூழலில் அரசாங்கம் தனது பிடிவாதமான அணுகுமுறையை விட்டுவிட்டு விவசாய சட்டங்களை ரத்து செய்யும் தீர்வை நோக்கி நகர வேண்டும்” என ஜோகிந்தர் சிங் ‘தி இந்து’ செய்தியில் தெரிவித்தார்.
விவசாயிகளை பிரிவினைவாதிகளாக சித்தரிப்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை “பிரிவினைவாதிகள்” என்று சித்தரிக்க முயற்சிப்பதை எதிர்த்து 35 பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலும் இந்த மனு பொது நல வழக்காக மாற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது.
குடியரசு தினத்தில் டிராக்டர் அணிவகுப்பு
மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்யப்படாவிட்டால் ஜனவரி 26 ம் தேதி இந்திய குடியரசு தினத்தில் விவசாய சங்க தலைவர்கள் ‘விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு’ நடத்த இருப்பதாகவும் அதற்கு பெண்கள் தலைமையேற்று நடத்துவார்கள் எனவும் அறிவித்து இருப்பதாக ‘NDTV’ செய்தி வெளியிட்டு உள்ளது.
நீதிமன்றம் சென்ற ரிலையன்ஸ் நிறுவனம்
ஜியோ தொலைதொடர்பு கோபுரங்களுக்கு செல்லும் மின் இணைப்புகளை துண்டித்து வருவதை எதிர்த்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை பதிவு செய்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
60 விவசாயிகள் இறந்துள்ளனர்
போராட்டத்தின் போது இதுவரை 60 விவசாயிகள் உயிர் இழந்துள்ளதாகவும். ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி இறப்பதாகவும் இதற்கு பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என காசிப்பூர் எல்லையில் பாரதீய கிசான் யூனியன் சங்கத்தின் , செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட் “டெக்கான் ஹெரால்டு” செய்தியில் தெரிவித்தார்.
போகி அன்று விவசாய சட்ட நகல்கள் எரிப்பு
விவசாய சட்டங்களின் நகல்களை வரும் போகி பண்டிகை நாளான ஜனவரி 13 ஆம் தேதி எரித்து கொண்டாட இருப்பதாக விவசாய சங்க தலைவர்கள் “டெக்கான் ஹெரால்டு” செய்தியில் தெரிவித்துள்ளனர்.
போராட்ட மேடை
மேடைக்கு அருகில் இரண்டு 8X10 அடி உயரத்திற்கு மாபெரும் எல்.ஈ.டி திரைகளையும்,10 கி.மீ நீளத்திற்கு அமர்ந்திருக்கும் போராட்டக்காரர்களை சென்றையடையும் வண்ணம் ஒலிபெருக்கிகளையும் அமைத்துள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 8 ஆம் தேதி மாலை 2 மணிக்கு நடைபெற உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.