மரண தண்டனை

மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு

கசகஸ்தான் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கசிம் ஜோமார்ட் டொகாயேவ் தெரிவித்துள்ளார். கசகஸ்தான் நாடு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த எண்ணெய் வளம் நிறைந்த குடியரசாகும். 

ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights – ICCPR) இரண்டாவது விருப்ப நெறிமுறையில் (Second Optional Protocol) கசகஸ்தான் நாடு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

ICCPR-ன் இரண்டாவது விருப்ப நெறிமுறை என்பது என்ன?

சர்வதேச அளவில் அனைத்து மக்களுக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் கிடைக்கப் பெறச் செய்வதை உறுதி செய்வதற்காக ICCPR எனும் பிரகடனம் ஐ.நாவில் 1966-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 1973-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 

இந்த உடன்படிக்கையானது வாழும் உரிமை, கருத்துரிமை, மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மக்களுக்கு உறுதி செய்கிறது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள், இந்த அனைத்து உரிமைகளும் தங்கள் நாட்டின் குடிமக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றிட வேண்டும். 173 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த உடன்படிக்கையில் புதியதாக 1989-ம் ஆண்டு விருப்ப நெறிமுறை (Optional protocol) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நெறிமுறையானது குறிப்பாக மரண தண்டனையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விருப்ப நெறிமுறையில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு கீழ்காணும் அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன.

  1. மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது.
  2. சட்ட ரீதியாக மரண தண்டனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது.
  3. மரண தண்டனை கூடாது என்பதற்கு போர்ச் சூழல்களில் மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

88 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தன. தற்போது இந்த பட்டியலில் கசகஸ்தான் இணைந்திருக்கிறது. 

2003-லிருந்தே மரண தண்டனை நிறைவேற்றாத கசகஸ்தான்

கசகஸ்தான் அரசு 2003-ம் ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனையை யாருக்கும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் சட்ட ரீதியாக மரண தண்டனை என்பது ஒழிக்கப்படாமல் இருந்து வந்த காரணத்தினால், சில குற்றங்களை மோசமான குற்றங்கள் என குறிப்பிட்டு அந்நாட்டு நீதிமன்றங்கள் மரண தண்டனை எனும் தீர்ப்பினை எழுதி வந்தன. 

1990களில் பெண்கள், சிறு வயதினர் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளித்திருந்தது. 

கடைசியாக 2016-ம் ஆண்டு 8 காவல்துறையினர் மற்றும் 2 பொதுமக்களை சுட்டுப் படுகொலை செய்த ரஸ்லான் குலேக்பாயேவ் எனும் நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நபரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட இருக்கிறது. 

குற்றவாளிகளை நிற்க வைத்து பின்மண்டையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது என்பது கசகஸ்தானில் மரண தண்டனை அளிக்கப்படும் வழிமுறையாக இருந்தது. இறுதியாக 2003-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி 12 பேர் மரண தண்டனை அளிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *