கடந்த சனிக்கிழமை சென்னையின் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதற்கு அடுத்ததாக தற்போது லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் 20 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லீலா பேலஸ் விடுதி கொரோனா கிளஸ்டர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து விருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லீலா பேலஸ் விடுதியில் நேற்று 232 பேர் இருந்ததாகவும், அதில் 86 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான ஆலோசனைகளை மேற்கொள்ளும் முக்கியமான இடமாக லீலா பேலஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர விடுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை
இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நட்சத்திர அந்தஸ்து இல்லாத விடுதிகளில் பணிபுரியும் 2769 ஊழியர்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் சொகுசு விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 3% பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 491 பேர் இன்னும் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
தப்லிக் ஜமாத் மாநாடும், கோயம்பேடு மார்க்கெட்டும்
இந்த சொகுசு விடுதிகளைப் போலத்தான் தப்லிக் ஜமாத் மாநாடும் கொரோனா கிளஸ்டராக அறிவிக்கப்பட்டது. இந்த சொகுசு விடுதிகளைப் பற்றிய செய்தியில் அவற்றின் பெயரைக் கூட சொல்லத் தயங்கும் அதிகாரிகளும், ஊடகங்களும், தப்லிக் ஜமாத் மாநாட்டின் போது கொரோனா பழியினைத் தூக்கி இசுலாமியர்களின் தலையில் சுமத்தப் பார்த்தனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சுரேஷ் திவாரி முஸ்லீம் வணிகர்களிடம் இருந்து யாரும் எந்த பொருளையும் வாங்கக் கூடாது என வெளிப்படையாகவே பேசினார்.
பாஜக-வின் சிறுபான்மை பிரிவு அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, தப்லிகி ஜமாத் செய்தது தாலிபான் வகையிலான குற்றம் என்று பொறுப்பற்ற முறையில் சொன்னார்.
பாஜக தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஏராளமானோர் சமூக வலைதளங்களில் இசுலாமியர்களைப் பற்றிய பொய் செய்திகளையும், போலி காணொளிகளையும் பரப்பினர்.
அதன் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகமானதற்கு கோய்ம்பேடு மார்க்கெட்டைத் திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டி, சாமானியர்களான வியாபாரிகளை குற்றத்திற்கு பொறுப்பாக்கினர். கோயம்பேட்டிலிருந்து லாரிகளில் செல்லும் தொழிலாளர்கள் மூலமாக கொரோனா பரவுவதாக ஊடகங்கள் குற்றப்பத்திரிக்கை வாசித்தன. இதன் காரணமாக பல தொழிலாளர்கள் ஊருக்குள்ளேயே அனுமதிக்கப்படாமல் பல சிக்கல்களுக்கு உள்ளானார்கள்.
தப்லிக் ஜமாத் மாநாட்டைக் குறிப்பிட்டு சிங்கிள் சோர்ஸ் சிங்கிள் சோர்ஸ் என்று தினந்தோறும் பழிசுமத்தி, அவர்களின் மீது வழக்குகளை பதிவு செய்தவர்கள், சொகுசு விடுதிகள் ஹாட்ஸ்பாட்டாக மாறியதைப் பற்றி சிறிய தகவலுடன் கடந்து செல்கிறார்கள்.
நட்சத்திர விடுதி என்பதற்கான தகுதியே, அனைத்து தர நிலைகளையும் முறையாகப் பின்பற்றுவதுதானே. அப்படி இருக்க நட்சத்திர விடுதிகளில் கொரோனா பரவியதை விடுதி நிர்வாகத்தினரின் முறையற்ற மேலாண்மையாக ஏன் விவாதம் நடத்தப்படவில்லை என்ற கேள்வி முக்கியமானது.
நோய் பரவுதல் என்பது இயற்கையானதே. ஆனால் அது எந்தெந்த வகைகளில் விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பதை தப்லிக் ஜமாத் மாநாடு விடயமும், கோயம்பேடு மார்க்கெட் விடயமும், தற்போது சொகுசு விடுதிகளின் விடயமும் நமக்கு தெளிவாக உணர்த்திவிட்டுச் செல்கின்றன.