ரிக்வேத சமூகம் - ஒரு பார்வை

ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

இந்திய வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு அமைத்த குழுவைப் பற்றிய செய்தியை நாம் அறிவோம். குறிப்பாக அந்த அறிக்கையில் 12,000 ஆண்டுகால வரலாறு என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையாக விளங்கும் ரிக் வேதகாதம் மற்றும் அதை ஒட்டிய ஆரிய வரலாறுகளில் உள்ள பலவீனங்களைக் களைந்து ஒரு திரிக்கப்பட்ட வரலாற்றை எழுத முயற்சிக்கும் யுக்திதான் இது.

ரிக்வேதமே இந்தியர்களின் முழுமுதல் நூல்,  ஆரியர்கள் உயர்ந்தவர்கள், அவர்களே இந்த மண்ணின் மக்கள், இந்தியா என்பது ஆரிய வர்தம் என்ற நோக்கத்தை நிறுவ வேண்டிய கட்டாயம் ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கு உள்ளது. எனவே அதை செய்வதற்கான உள்நோக்கத்தில்தான் பாஜக வரலாறு குறித்து ஆய்வு செய்ய முனைகிறது. 

விடைதேடும் கேள்விகள்

பண்டைய இந்திய வரலாறு குறித்து டி.டி.கோசாம்பி, ரொமிலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஏ.பி.கீத் போன்ற வரலாற்று முன்னோடிகள் மிகச் சிறப்பான ஆய்வுகளை செய்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மேலும் பல புதிய ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு ஒப்பீடுகளை செய்து அதனுடாக, 

ஆரியர்கள் யார்? 

எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? 

எந்த காலகட்டத்தில வந்தனர்? 

அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன?

என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. 

மிக விரிவாக தொகுக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் ஆரிய படையெடுப்பு உண்மையா? கற்பனையா? என்ற பகுதியில் 17 வினா, விடைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அது மிக முக்கியமான ஒன்று. அத்தோடு அரப்பா நாகரீகம் வேத கலாச்சாரமா? என்ற பகுதியும் மிக முக்கியமானது. இந்த இரண்டு பகுதிகளும் இன்றைய சூழ்நிலையில் இந்துத்துவா சக்திகள் பேசிவரும் பல பொய் புரட்டுகளைப் புரிந்துகொள்ள உதவும். வேதம், சமஸ்கிருதம் என்ற ஆரிய – வைதீக இந்தியாவை உருவாக்க முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சாரத்தில் உள்ள பொய்களை அறிந்துகொள்ள நாம் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது. 

வாய்மொழி இலக்கியமான ரிக்வேதம்

ரிக் வேதகால ஆரியர்களைப் பற்றிய வரலாற்று  சான்றாக விளங்கும் ஒரே ஆவணம் ரிக்வேதம் மட்டுமே. அந்த வாய்மொழி இலக்கியம் தான் வரலாற்று சான்றாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சிந்துவெளியைப் போல் எந்தவிதமான ஆதாரப்பூர்வ தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை. 

இடம்பெயர்வுக்கு ஏற்றார் போல் தகவமைத்துக் கொண்ட ஆரியர்கள்

இடம்பெயர்வில் ஏற்பட்ட சமூக பொருளாதாரத்திற்கு ஏற்றார்போல் ஆரியர்களின் கடவுள் நம்பிக்கையில் மாறுதல்கள் ஏற்பட்டது. நாடோடி சமூகம் ஒரு மண்ணில் நிலைத்து தங்கும்போது ஏற்படும் பொருளாதார மாற்றம், அதனையொட்டிய சமூக வளர்ச்சி பல்வேறு கடவுள்களை உருவாக்கியது. அவை ஏற்கனவே அந்த மண்ணில் நிலைத்து நின்றதை எதிர்த்தும், சிலவற்றை உள்வாங்கியும் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.

அந்த வகையில் ஆரியர்கள் இந்த மண்ணில் பூர்வீகமாக இருந்த மக்களை அடிமைப்படுத்தி, பொருள் உற்பத்திமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் சமூகப் படிநிலைகள் உருவானது. உடல் உழைப்பற்ற சமூகப் படிநிலையின் உருவாக்கம், கடவுள் நம்பிக்கை மற்றும் அத்துடன் புதிய சடங்கு முறைகளுடன் புரோகிதக் கூட்டம் உருவாகியது. 

வேதத்தின் மீதும் பல்வேறு சடங்குகளின் மீதும் கட்டியமைக்கப்பட்ட புனித பிம்பம், அதைப் பாதுகாக்கும் புரோகிதக் கூட்டத்தையும் தனித்த சமூக அடையாளமாக மாற்றியது. பின்னைய நாட்களில் சடங்குகளை எதிர்த்து உபநிடதம் போன்ற தத்துவக் கோட்பாடுகளுடன் கருத்துமுதல்வாத போக்கு மேலோங்கியது. 

எழுத்து வடிவம் இல்லாதிருந்த ரிக் வேதம்

ரிக்வேதம் பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ரிஷிகளால் இயற்றப்பட்டது. அதில பல விடயங்கள் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இயற்றப்பட்டது. பல்வேறு புதிய ரிஷிகளால் இந்திய மண்ணில் பிற்காலத்தில் நிறைய  சேர்க்கப்பட்டது. வாய்மொழி வழியாக பயிற்றுவிக்கப்பட்ட ரிக்வேதம் கி.பி.10-ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் எழுத்து வடிவத்தைப் பெற்றது. 

விஜயநகர காலத்தில் ரிக் வேதத்திற்கு எழுதபட்ட உரை

விஜயநகர அரசர்களின் முதன்மை அமைச்சராக இருந்த சாயணாச்சாரியா கி.பி.14-ம் நூற்றாண்டில் ரிக் வேதத்திற்கு நீண்ட உரை எழுதினார். யசுர், சாம, அதர்வண வேதங்கள் காலத்தால் பிந்தியவை. அதனைத் தொடர்ந்து பிராமணங்கள் மற்றும் ஆரண்யங்கள் உருவானது. இந்த காலகட்டத்தில் வர்ணாசிரம முறை உறுதியாக வேறூன்றிவிட்டது. 

வேதத்தின் சடங்கியல் அம்சங்கள் காலப்போக்கில் பல்வேறு தத்துவ உரையாடல்களுடன் முட்டி மோதப்பட்டதன் எதிரொலியாக உபநிடதம் உருவானது.

ரிக் வேதத்தின் காலத்தை கணிப்பதில் உள்ள சிக்கல்

ரிக் வேதம் தொகுக்கப்பட்ட காலத்திற்கும், அவை எழுத்து வடிவம் அடைவதற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கடந்திருந்தது. ரிக் வேதத்தின் காலத்தை உரிய ஆதாரத்துடன் கணிக்க முடியவில்லை. பல்வேறு ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

ரிக் வேதத்தின் காலத்தைக் கணிப்பதற்கு வேதத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்தோ இரானியர்களின் புனித நூலான அவஸ்தா மிக முக்கியமான ஒன்று. பல்வேறு உறுதியான ஆதாரங்கள் இந்த ஒப்பீட்டில் கிடைத்துள்ளது. இந்த இரு கூட்டத்திற்கு இடையில் உறுதியான பொதுத் தொடர்பு உள்ளது. 

துருக்கியின் அடூசஸ் நகரத்துடனான தொடர்பு

இதனைத் தொடர்ந்து கி.பி.1906-07ம் ஆண்டு துருக்கியில் உள்ள போகாஸ்கோய் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான நகரம் வேதகாலம் குறித்து பல்வேறு சான்றுகளைத் தருகிறது. அடூசஸ் அதாவது புனித நெருப்பு என்றழைக்கப்படும் அந்த தொன்மையான நகரத்தை ஆய்வு செய்யும்போது, ஹிட்டி மற்றும் மித்தானிய அரசுகளுக்கு இடையில் நடந்த சமாதான ஒப்பந்தம் குறித்தான வாசகங்களைக் கொண்ட களிமண் பட்டைகள் கிடைத்துள்ளன.

அதில் இந்த ஒப்பந்தம் இந்திரன், வருணன், மித்ரன் போன்ற ஆரியக் கடவுள்களின் சாட்சியாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிக்கு சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது. துருக்கியில் கிடைத்த களிமண் பட்டைகளின் காலம் கி.மு.1400 என்று தெரியவந்துள்ளது. துருக்கியைக் கடந்து இந்தியத் துணைக்கண்டத்தின் சப்த சிந்து பகுதிக்கு ஆரியர்கள் தங்களது கடவுளைக் கொண்டுவந்துள்ளனர். சிந்துவெளி நாகரீகத்தின் முடிவில்தான் ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வந்துள்ளனர். 

ஆரியர் எனும் சொல் மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

ஆரியர் என்பவர்கள் யார்? அச்சொல் ஒரு இனத்தைக் குறிப்பதற்கு உரியதா? அல்லது ஒரு மொழியைக் குறிப்பதற்கான சொல்லா? என்ற விவாதம் காலனிய காலத்திலேயே துவங்கிவிட்டது. ஆரியருக்கும் ஆரியர் அல்லாத மக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு வெறும் மொழி மட்டுமல்ல. தொழில், கலாச்சாரம், நிறம், உணவு, மதம், கடவுள் நம்பிக்கை போன்ற பல வேறுபாடுகள் உள்ளது. 

ரிக்வேதத்தில் ஆரியர் மற்றும் ஆரியர் அல்லாதவர் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளது. ஆரியர்கள் தங்களது மொழிக்கு மிகவும் உயர்வான ஒரு இடத்தைக் கொடுத்தனர். வேதமொழி பேசாத மக்கள் வாழும் பகுதிகளை மிலேச்ச தேசம் என்று அழைத்தனர். மொழி அடிப்படையிலான வேறுபாடு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 

ஆரியாகள் அல்லாத கருப்பினத்தவர்களை கொன்றொழித்தது குறித்து பல்வேறு ஆதாரங்கள் ரிக்வேதத்தில் நிரம்பியுள்ளது. அரியர் அல்லாத தாசர்கள் மற்றும் தஸ்யூக்கள் மீது பெரும் வெறுப்பு கடைபிடிக்கப்பட்டுள்ளது. பின்னைய காலங்களில் ஆரியர் அல்லாதவர்கள் பேசிவந்த திராவிட மொழியின் சொற்களை உள்வாங்கிக் கொண்டனர். அத்தோடு சடங்குகள், வழிபாட்டு முறை என்று பல்வேறு சமூக-பண்பாட்டுக் கூறுகளையும் தனதாக்கிக் கொண்டனர். எனவே ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதற்கான சொல் மட்டும் கிடையாது. 

ஒரு பொதுவான மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை உடைய மக்கள் கூட்டத்தை குறிக்கும் சொல். அவர்கள் வாழும் இடத்தை ஆரிய வர்தம் என்று பின்னைய நாட்களில் அழைத்துக் கொண்டனர். இந்த ஆரிய வர்தம் என்ற புவியியல் நிலப்பரப்பு காலம்தோறும் மாறுதலுக்கு உட்பட்டுள்ளது. 

ரிக் வேதத்தில் கடவுள்கள்

ரிக் வேதத்தில் பல்வேறு கடவுளைப் பற்றி புகழ்ந்து பாடிய பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம் வெவ்வேறு காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதால், அக்கடவுள் குறித்தான கருத்துகள் மாறிக்கொண்டே வருகிறது. அதில் பல்வேறு தெய்வங்கள் செல்வாக்கு பெற்று விளங்கியது. விண்ணுலகத் தெய்வங்கள், காற்று மண்டலத் தெய்வங்கள், மண்ணுலகத் தெய்வங்கள் மற்றும் இதர சிறு தெய்வங்கள் என்று 33 வேத கடவுள்களைப் பற்றி ரிக்வேதம் குறிப்பிடுகிறது. 

ரிக் வேதகாலத்தில் பெண்களின் சமூக நிலை

ரிக் வேதக் குறிப்புகளின்படி பெண்கள் குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன்தான் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் நடைமுறையில் இல்லை. அழகானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருக்கும் பெண்கள் எளிதில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவ்வாறறு இல்லாத பெண்களுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. 

ரிக்வேத சமூகம் தந்தை வழிச் சமூகம். எனவே பெண்கள் தனக்கு ஏற்றாரை தேர்வு செய்யும் சுதந்திரம் இல்லை. தேர் ஓட்டும் போட்டி வைத்து அதில் வெல்லும் வீரனுக்கு மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது. மணமகன் மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவது முக்கியமான திருமண சடங்காக இருந்துள்ளது. இருதார மணமுறையும் நடைமுறையில் இருந்துள்ளது. 

பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. தந்தைவழிச் சமூகம் என்பதால் மகனுக்குதான் சொத்துரிமை கொடுக்கப்பட்டது. எனவே ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ரிக்வேத காலத்தில் இருந்த சபா, சமிதி போன்ற நிர்வாக முறைகளில் பெண்கள் பங்குபெறவில்லை. பொதுவாழ்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பெண்கள் கல்வி கற்றது குறித்து எந்தவித தகவலும் ரிக்வேதத்தில் இல்லை.

நிர்வாக அமைப்புகள்

ரிக்வேத காலத்தில் முடியாட்சி தோன்றுவதற்கு முன் விடத, சபை, மற்றும் சமிதி போன்ற நிர்வாக அமைப்புகள் இருந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் நாடோடி சமூகமாக இருந்த ஆரியர்கள் ஆரியர் அல்லாத பூர்வகுடிமக்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். அதுபோன்ற காலகட்டங்களில் இனக்குழு தலைவனை முதன்மையாகக் கொண்டு அவரின் தலைமையின் கீழ் வாழ்ந்து வந்தனர். 

தனிச்சொத்துடமை இல்லாத காலகட்டம் அது. பின்னைய நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிரந்தரமாகக் குடியேறி  வாழத் துவங்கும்போது உற்பத்தி முறையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. தனிச் சொத்துடமை உருவாகிறது அதனால் பல்வேறு புதிய நிர்வாக முறைகள் உருவானது. நிலைத்து வாழும் சமூகத்தில் புதிய சமூகப் பிரிவுகள் உருவாகின்றது. அரசர்கள், புரோகிதர்கள் என்று செல்வாக்கு செலுத்தும் சமூகமுறை உருவாகிறது. 

உடல் உழைப்பில் இருந்து விலகிக் கொண்ட புரோகிதர்கள்

வரிவிதிப்பு முறை வந்தவுடன் புரோகிதர்கள் உடல் உற்பத்தியில் இருந்து விலகிக்கொண்டனர். அந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு யாகங்கள் நடத்துவது, சடங்கு சம்பிரதாயங்களை வழிநடத்துவது என்று ஒரு இறுக்கமான சமூகமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். 

விருத்திரன் என்னும் ஆரியர்களின் எதிரியைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருத்திரன் அல்லது அசுரன் ஆரியர் அல்லாத பூர்வீக விவசாய குடியைச் சார்ந்தவன். அவனை அழித்து அவனது நீர்தேக்கங்களை உடைப்பது குறித்து ரிக் வேதத்தில் பல்வேறு பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. கால்நடை மேய்க்கும் நாடோடி சமூகமான வேதகால ஆரியருக்கும், நீரைத் தேக்கி வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த பூர்வீக இந்தியர்களுக்கும் இடையில் பல்வேறு போர்கள் நடந்துள்ளது. அது பற்றி மிக விரிவாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிக்வேத சமூகம் ஒரு பார்வை புத்தகத்தைப் பெற

விலை ரூ 250/-
பரிசல் புத்தக நிலையம் 
P பிளாக் 235 MGR முதல் தெரு,MMDA காலனி,அரும்பாக்கம், 
சென்னை 600 106.
தொலைபேசி: 9382853646

One Reply to “ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *